"சூப்பர் ஸ்டாரு ஜோடி எல்லாம்
பாட்டி ஆகிருச்சே
இப்போ பேத்தி எல்லாம் வளந்து வந்து
ஜோடி சேர்ந்துருசே"
விரைவில் திரைக்கு வர இருக்கும் கோமாளி படத்தில் இடம்பெற்றுள்ள பாடலின் வரிகள் தான் மேலே சொல்லப்பட்டுள்ளவை. இந்த பாடல் வரிகளில் ரஜினி முதல் மோடி வரை அனைவரையும் மெல்லியதாக தொட்டுச் சென்றுள்ளார் பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து. சமகால நிகழ்ச்சிகள் அனைத்தையும் நையாண்டி தனமாக விமர்சிக்கும் வகையில் அந்த பாடல் வரிகள் அமைந்திருந்தது. அந்த பாடல் விவகாரம் கடந்தவாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது வெளிவந்துள்ள கோமாளி பட டிரைலர் ரஜினி ரசிகர்களை மேலும் அதிருப்தி அடைய வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ரஜினி ரசிகர்கள் சிலரிடம் பேசும் போது அவர்களின் வார்த்தைகளில் அந்த கோபம் வெளிப்பட்டதை இயல்பாகவே நம்மால் காண முடிந்தது.
இதுகுறித்து ஆவேசமாக பேசிய அவர்கள், "சூப்பர் ஸ்டார் ஜோடி எல்லாம் பாட்டி ஆயிருச்சே... பேத்தி எல்லாம் வளந்து வந்து ஜோடி சேந்திருச்சே... என்று அந்த பாடலில் கபிலன் வைரமுத்து எழுயிருக்கிறார். இதில் அவர் என்ன சொல்ல வருகிறார். மேலே சொன்ன அனைத்தும் அவருடைய தந்தைக்கும் பொருந்துமே! கண்ணதாசனோடு பாடல் எழுதிய அவர் இன்றும் எழுதுகிறாரே. இதை யாராவது விமர்சனம் செய்தால் அவர் ஏற்றுக்கொள்வாரா? ரஜினியை தொடாமல் வியாபாரம் ஆகாது என்பதை அறிந்து கொண்டுதான் அவர் இவ்வாறு எழுதுகிறாரோ என்று எங்களுக்கு சந்தேகம் வருகிறது. இந்த விமர்சனத்தையே எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்ற நிலையில், படத்தின் டிரைலரில் எங்கள் தலைவரின் அரசியலை விமர்சனம் செய்யுமாறு காட்சிகள் வைத்துள்ளனர். என்ன நினைத்துக்கொண்டு இவ்வாறு காட்சிகள் வைக்கிறார்கள் என்று தெரியவில்லை" என்றனர் கொதிப்போடு.
பாடல் தொடர்பாக சர்ச்சை எழுந்தபோதே அதுதொடர்பாக கபிலன் வைரமுத்து விளக்கமளித்தார். அதில் " பலரை போல நானும் அவருடைய தீவிர ரசிகன்தான். அவருடைய அரசியல் பார்வை என்பது வேறு. அதைப்பற்றி விவாதிக்கும் அளவுக்கு, அவரும் அரசியல் பற்றி அதிகம் பேசவில்லை. எனக்கும் அனுபவம் இல்லை. ஆனால் சினிமாவில் அவர் அன்றும் இன்றும் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார். பாட்டி என்பது முதல் தலைமுறைக்கான குறியீடு. பேத்தி என்பது மூன்றாம் தலைமுறைக்கான குறியீடு. மூன்றாம் தலைமுறை நடிக்க வந்த பிறகும் அவர் இன்னும் சூப்பர் ஸ்டாராகவே இருக்கிறார் என்பதுதான் அதன் பொருள். அதைத் தவறாகத்தான் புரிந்துகொள்வேன் என்று அடம் பிடிப்பவர்களை ஆண்டவனாலும் காப்பாத்த முடியாது" என்றார்.

கடந்த வாரத்தில் பாடல் வரிகள் தொடர்பான சர்ச்சைகள் மறைந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள கோமாளி பட டிரைலரில் படத்தின் நாயகன் கோமா நிலையில் இருந்து மீண்டு வருவது போல காட்சி வைக்கப்பட்டுள்ளது. 96ஆம் ஆண்டு அவர் கோமா நிலைக்கு சென்றதாகவும் 2016ல் அவர் அதில் இருந்து விடுபடுவது போன்றும் அந்த டிரைலரில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதுதான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக திரைபிரபலங்கள் சிலரிடம் பேசியபோது, " படத்தில் ரஜினி பேசுவதாக காட்டப்பட்டுள்ள வசனம் அவர் நிஜத்தில் 2017ஆம் ஆண்டு பேசியதே. அப்போது என்ன பேசினாரோ அதையேதான் 23 ஆண்டுகளுக்கு முன்னரும் பேசினார். கோமாவில் இருந்து மீண்ட ஒருவருக்கு மோடி பிரதமராக இருப்பதையோ அல்லது எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருப்பதையோ காட்டியிருந்ததார்கள் என்றால் அவருக்கு எதுவும் தெரிய போவதில்லை. எனவே, நோயாளிக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் 16 ஆண்டுகளுக்கு பிறகு கோமாவில் இருந்து மீண்டவருக்கு ரஜினியை காட்டியிருக்கிறார்கள்.
அதில் ரஜினி சொல்லாத எதையும் எடிட் செய்து காட்டிவிடவும் இல்லை. அவர் பேசியதை எல்லாம் நீங்களும், நானும் நேரில் தொலைக்காட்சிகளில் பார்த்தோம். அந்த காட்சியில் ரஜினியை என்ன விமர்சனம் செய்துள்ளார்கள் என்று நாங்கள் பார்க்கவில்லை. 96 ஆண்டு அவர் பேசியதை பார்த்த படத்தின் ஹீரோ அதற்கு பிறகு எதிர்பாராக விதமாக கோமாவிற்கு சென்றுள்ளார். பல ஆண்டுகளுக்கு பிறகு கோமாவில் இருந்து மீண்ட அவர், தொலைக்காட்சியில் மீண்டும் நான் அரசியலுக்கு வருவேன் என்று ரஜினி கூறுவது போன்ற காட்சிகளை பார்க்கும் போது, யாரும் நார்மலாக இப்படிதான் நினைப்பார்கள். எனென்றால் 96ம் ஆண்டுக்கு பிறகு என்னநடந்தது என்று அவருக்கு தெரியாது. ஆதலால் இதனை சாதாரண நிகழ்வாகதான் பார்க்க வேண்டும். இதற்கு அரசியல் சாயமோ அல்லது ரஜினியை விமர்சிப்பதாகவோ எடுத்துக்கொண்டால் அதற்கு யாரும் பொறுப்பேற்க முடியாது" என்கிறார்கள் மற்றொரு தரப்பினர்.