சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி, மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயிலர்' படம் நேற்று (10.08.2023) உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகியது. திரையரங்கு முன் பேனர், பட்டாசு, கேக் வெட்டுதல் என ரசிகர்கள் பெரியளவில் ஓப்பனிங் கொடுத்தனர். இதனால் திருவிழா போல் ஒவ்வொரு திரையரங்கமும் காட்சி அளித்தது.
இந்தியாவைத் தாண்டி கனடா, சைனா உள்ளிட்ட நாடுகளிலும் நல்ல ஓப்பனிங் இருந்தது. இதுவரை உலகம் முழுவதும் ரூ.100 கோடி வசூலைக்கடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் பார்த்து பாராட்டியுள்ளதாக நெல்சன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "ஜெயிலர் பார்த்த முதல்வருக்கு நன்றி. உங்களின் பாராட்டுக்கும் ஊக்கத்திற்கும் நன்றி சார். உங்கள் பாராட்டால் படக்குழுவினர் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்" எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் ரஜினிகாந்த், சன் பிக்சர்ஸ், அனிருத் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்நெல்சன்.