
பாடலாசிரியர் வைரமுத்துவின் தாயார் அங்கம்மாள் வயது மூப்பு காரணமாக கடந்த 10ஆம் தேதி காலமானார். இதனை வருத்தத்துடன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் வைரமுத்து. மேலும் இறுதி சடங்கு சொந்த ஊரான தேனி மாவட்டம் வடுகபட்டியில் நடக்கும் என பதிவிட்டிருந்தார். அதன் படி இறுதி சடங்குகள் அவரது சொந்த ஊரில் நடந்தது.
இதனிடையே முதல்வர் ஸ்டாலின் தொலை பேசி மூலம் ஆறுதல் சொன்னதாக வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டிருந்தார். மேலும் உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் ஆறுதல் கூறியதாக குறிப்பிட்டு அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக பதிவிட்டிருந்தார். திரைப்பிரபலங்களில் ரஜினி உள்ளிட்ட பலர் ஆறுதல் கூறியதாக குறிப்பிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் ரகுபதி ஆகியோர் சென்னையில் உள்ள வைரமுத்து வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர். இந்த நிலையில் சென்னை பெசன்ட் நகரில் உள்ள வைரமுத்துவின் வீட்டிற்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று வைரமுத்துவிற்கு ஆறுதல் தெரிவித்தார். அப்போது முதல்வருடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, அமைச்சர் சேகர் பாபு உடன் இருந்தனர். மேலும் வைரமுத்துவின் மகன்களும் இந்த சந்திப்பின் போது இருந்தனர்.