Skip to main content

'சிட்டிசன்' படத்தில் அஜித்திற்கு ஏற்பட்ட அவப்பெயர், கிண்டல்... சரி செய்ததா நேர்கொண்ட பார்வை?

நடிகர் அஜித்தின் திரைப்பயணத்தைக் கூர்ந்து கவனித்தவர்களுக்குத் தெரியும், வெற்றியோ தோல்வியோ, பேசப்பட்டதோ இல்லையோ, பெரிதோ சிறிதோ, மாற்று முயற்சிகளை இவர் செய்து கொண்டே இருந்தார். வாலியில் இரட்டை வேடம், அதில் ஒருவர் வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளி பாத்திரம். இது அப்போது மிகுந்த கவனத்தைப் பெற்ற ஒரு முயற்சி. அதிலும் தனது சினிமா பயணத்தின் ஆரம்ப கட்டத்தில் இருந்த ஒருவர் இத்தகைய முயற்சியை வெற்றிகரமாக செய்தது பெரிய விஷயமாகப் பார்க்கப்பட்டது. அந்தப் படத்தில் அஜித்தின் நடிப்புக்கு ஃபிலிம் ஃபேர் விருதும் கிடைத்தது.

 

viswasam ajithசமவயது நாயகர்கள் காதல் படங்கள் செய்த அந்த காலகட்டத்தில் அமர்க்களம், தீனா என 'ரௌடி' பாத்திரங்கள் செய்தார். அதன் பின் சில வருடங்கள் தமிழ் சினிமாவில் ரௌடிகள் அராஜகம்தான். பின் அதை மாற்றி சிட்டிசனில் பல வேடங்களை முயற்சித்தார். பில்லாவில் நாயகனாக இவரது ஸ்டைலும் தோற்றமும், அதற்குப் பின்னர் பலரையும் கோட் போட வைத்தது. மங்காத்தாவில் இவரது தோற்றமும் கதாபாத்திரமும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இப்போது 'நேர்கொண்ட பார்வை'யில் அவர் ஏற்றிருக்கும் பாத்திரமும் அந்தப் படத்துக்கு  தமிழ் சினிமாவில் மாஸ் நாயகர்களின் பாதையை மாற்றும் என்று விமர்சகர்களாலும் பிற சினிமா ரசிகர்களாலும் கூறப்படுகிறது.

இப்படி அவ்வப்போது அஜித் பாராட்டப்பட்டாலும், சில சமயங்களில் கிண்டலும் செய்யப்பட்டிருக்கிறார். காதல் மன்னன், காதல் கோட்டை, உல்லாசம் சமயத்தில் அழகான ஹேண்ட்ஸம் ஹீரோவாக பார்க்கப்பட்ட, ரசிக்கப்பட்ட அஜித் பின்னொரு கட்டத்தில் சிட்டிசன், ரெட் படங்கள் நடித்த காலகட்டத்தில் உடல் எடை அதிகரித்தததால் போட்டியாளர்களின் ரசிகர்களால் கிண்டல் செய்யப்பட்டார். 'ஜி' படத்தில் அந்த உடலுடன் கல்லூரி மாணவராக நடித்ததால் அந்தப் படம் கிண்டலுக்குள்ளானது. பின்னர் பாலா இயக்கத்தில் நடிக்கவிருந்த 'நான் கடவுள்' படத்துக்காக கடுமையான முயற்சி செய்து உடல் எடையை குறைத்து மிகவும் ஒல்லியாக வந்தார் அஜித். 'நான் கடவுள்' நடக்காதபோதும் 'பரமசிவன்', 'திருப்பதி', 'வரலாறு' படத்தில் ஒரு பகுதி என ஒல்லியான தோற்றத்தில் இருந்தார். பின்னர் 'பில்லா', 'ஏகன்' என நார்மல் தோற்றத்திற்கு வந்தார். இது, அஜித் உடல் எடைக்காக கிண்டல் செய்யப்பட்ட காலம்.

 

 

ajith in citizenஇதே போல, 'வரலாறு' படத்தின் ஆரம்பகால போஸ்டர்களில் (காட்ஃபாதர்' என்ற டைட்டிலுடன்) பரதநாட்டிய கலைஞராக அஜித் தோன்றிய போது வேறு விதமாக தரக்குறைவான கிண்டல்களெல்லாம் ரசிகர்கள் மட்டத்தில் தோன்றின. ஆனால், அந்தப் படத்தில் அவரது நடிப்பு மிகுந்த பாராட்டுகளைப் பெற்று, படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றபோது கிண்டல்களெல்லாம் மறைந்தன. அஜித்திற்கு இன்னொரு ஃபிலிம் ஃபேர் விருதைப் பெற்றுத்தந்தது 'வரலாறு'. இவை, நேரடியான தரமான விமர்சனங்களாக அல்லாமல் ரசிகர்கள் அளவில் அஜித் கிண்டலுக்குள்ளான சமயங்கள்.

'சிட்டிசன்' படம் வெளியானபோது, ஒரு பக்கம் அந்தப் படத்தில் அஜித் நடித்த பல்வேறு கெட்-அப்கள், மேக்-அப், ஒளிப்பதிவு,  பாடல்கள், விறுவிறுப்பான திரைக்கதை, பாலகுமாரனின் வசனங்கள் ஆகியவற்றுக்காக கவனிக்கப்பட்டு படம் வெற்றி பெற இன்னொரு பக்கம் படத்தின் லாஜிக் குறைபாடுகள், அஜித்தின் நடிப்பு முக்கியமாக அஜித்தின் குரல் போன்றவை விமர்சிக்கப்பட்டன. சிட்டிசன் படத்தின் முக்கியமான காட்சியான கோர்ட் காட்சியில் நாயகன், தனது ஊரான அத்திப்பட்டி அழிக்கப்பட்ட கதையை மிகுந்த உணர்ச்சிவசப்பட்டு கூறுவார். அந்தக் காட்சியில் அஜித், தனது சிறப்பான நடிப்பைக் கொடுக்க முயற்சி செய்திருப்பார். "நான் தனி ஆள் இல்ல", "அத்திப்பட்டி", "இது கதையல்ல கருப்பு சரித்திரம்... ரத்தம் உறையும்படியான ஒரு நெருப்பு காவியம்", என உணர்ச்சி மிகுதியில் அவர் பேசும்போது அஜித்தின் குரல் உடைந்து சற்று வித்தியாசமாகத் தோன்றும். சிட்டிசன் படத்திற்குப் பிறகு அஜித் நடித்த 'ரெட்' படத்திலும் அவர் "அது" என்று அவ்வப்போது கூறுவது போல பன்ச் வசனம் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், அந்த வசனத்தை அஜித் பேசிய முறையும் போட்டி நடிகர்களின் ரசிகர்களால் கிண்டல் செய்யப்பட்டது. ஹை பிட்ச் என்று கூறப்படும் அந்தத் தொனியில் இயல்பாகப் பேச அனைவராலும் இயலாது. அஜித்திற்கும் அது கடினமாக இருக்கும். இதனால், அப்போது அவரது குரல்  கடுமையாக கிண்டல் செய்யப்பட்டும் மிமிக்ரி செய்யப்பட்டும் வந்தது. அதற்குப் பிறகு அஜித், தனது படங்களில் இப்படி பேசுவதை தவிர்த்துவந்தார். 

 

 

red ajithஅந்த நீதிமன்ற காட்சிக்குப் பிறகு இத்தனை வருடங்கள் கழித்து நீதிமன்ற காட்சிகள் நிறைந்த படமாக அஜித்திற்கு 'நேர்கொண்ட பார்வை' அமைந்துள்ளது. அதிலும் வழக்கறிஞர் பாத்திரத்தில் அதிகம் பேசும் வேலை. இதிலும் "நிறைய.. நிறைய... நிறைய" என முடியும்படி அஜித் பேசும் நீளமான வசனம் ஒன்று உண்டு. ஆனால், சிட்டிசன் போல் அல்லாமல் அஜித்தின் குரல் இதில் கம்பீரமாக இருப்பதாக ரசிகர்கள் உணர்ந்து பாராட்டி வருகின்றனர். அந்தக் காட்சியில் அஜித்தின் குரலாலும் அதற்கு ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பாலும் அரங்கங்கள் அதிர்கின்றன. இதனால், சிட்டிசன் படத்தின் கோர்ட் காட்சிகளில் அஜித்தின் குரலை நோக்கி ஏற்பட்ட கிண்டல்களையும் விமர்சனங்களையும் 'நேர்கொண்ட பார்வை' படத்தின் கோர்ட் காட்சிகள் சரி செய்திருப்பதாகக் கூறி மகிழ்கின்றனர் நீண்ட கால அஜித் ரசிகர்கள். அஜித், தனது குரலுக்கு கிண்டல் செய்யப்பட்டாரென்றால், விஜய் அழுகிற காட்சிகளில் அவரது நடிப்புக்குக் கிண்டல் செய்யப்பட்டார். ஆனால், இப்போது இருவருமே தங்கள் நடிப்பையும் மெருகேற்றிவிட்டனர், அதுமட்டுமல்லாமல், தாங்கள் எப்படி நடித்தாலும் படம் பார்ப்பதற்கு ஒரு மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தையும் சேர்த்துவிட்டனர்.