‘மாஸ்டர்’ படத்தின் வெற்றி தந்த உற்சாகத்தில் உள்ள நடிகர் விஜய், அடுத்ததாக இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை தயாரிக்க உள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம், இதுகுறித்த அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. விரைவில் படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ள படக்குழு, படத்திற்கான நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வில் கவனம் செலுத்தி வருகிறது. படத்தின் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர், விஜய் நடித்த ‘நண்பன்’ படத்தின் ஒளிப்பதிவாளர் ஆவார்.
இந்த நிலையில், விஜய்யுடன் மீண்டும் இணைந்தது குறித்து மனோஜ் பரமஹம்சா ஒரு ட்விட்டர் பதிவினை வெளியிட்டுள்ளார். அதில், "ஒட்டுமொத்த தமிழகத்தாலும் நேசிக்கப்படுகிற, விரைவில் ஒட்டுமொத்த இந்தியாவாலும் நேசிக்கப்பட இருக்கும் இந்தச் சிறந்த மனிதரோடு இணைந்து மீண்டும் ஒரு பயணத்தைத் தொடங்குவது மகிழ்ச்சியளிக்கிறது. எந்த இடத்தில் விட்டோமோ (‘நண்பன்’) அங்கிருந்து பணிபுரிய தொடங்குவதற்கு ஆவலாக இருக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அப்பதிவில், 'தளபதி 65' படம் 5 மொழிகளில் உருவாகவுள்ளதாகக் குறிப்பிட்டு, கொண்டாடத்திற்குத் தயாராகுங்கள் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.