Skip to main content

முடிவுக்கு வரும் சினிமா ஸ்ட்ரைக்....பேச்சுவார்த்தையில் முடிவானது என்னென்ன..?

Published on 18/04/2018 | Edited on 19/04/2018
vishal


கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் பல விதமான கோரிக்கைகளை முன் வைத்து பட அதிபர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். சினிமா படப்பிடிப்புகள் மற்றும் சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுவிட்டன. மேலும் தமிழகம் மற்றும் புதுவையில் புது பட வெளியீட்டை நிறுத்தி வைத்து தியேட்டர் உரிமையாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த முழு வேலைநிறுத்தம் காரணமாக சினிமா துறையே முடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழக அரசால் தான் இதை முடிவுக்கு கொண்டுவர முடியும் என்று சினிமாத்துறையினர் ஏற்கனவே விடுத்த வேண்டுகோளை ஏற்று தமிழக அரசு சார்பில் நேற்று காலை 11.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கிய பேச்சுவார்த்தையில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு விநியோகஸ்தர்கள் சங்கம், தமிழ்நாடு உரிமையாளர்கள் சங்கம், டிஜிட்டல் சேவை ஒளிபரப்பு நிறுவனங்கள் கலந்து கொண்டன. காலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சில கருத்து வேறுபாடுகளுடன் சுமுக உடன்பாடு ஏற்படாததைத் தொடர்ந்து, மதியம் 3 மணிக்கு பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்பட்டது. மதியம் மீண்டும் தொடங்கிய பேச்சுவார்த்தை ஒருவழியாக சுமார் இரவு 9 மணிக்கு சுமுகமாக முடிவுக்கு வந்தது. 

 

அப்போது அந்த பேச்சுவார்த்தையில் எடுத்த முக்கிய முடிவுகள் வருமாறு....

 

1 இதுவரையிலும் வாரத்திற்கு 28 காட்சிகளுக்கு ஒரு தியேட்டருக்கு 9,000 ரூபாயை ஒளிபரப்பும் கட்டணமாக வசூலித்துக் கொண்டிருந்த க்யூப் நிறுவனம், இனிமேல் 5,000 ரூபாய் மட்டுமே வசூலிக்கும். இதேபோல் எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் திரையிட்டுக் கொள்ளலாம் என்கிற பிரிவில் ஒரு திரைப்படத்திற்கு 20,000 ரூபாய் வாங்கிக் கொண்டிருந்த க்யூப் நிறுவனம் இப்போது 10,000 ரூபாயை வாங்கிக் கொள்ள சம்மதித்திருக்கிறது. அதுவும் அடுத்த 6 மாதங்களுக்கு மட்டுமே. அதற்கடுத்து வேறு டிஜிட்டல் நிறுவனங்களின் மூலமாக தியேட்டர்களுக்கு தங்களது தயாரிப்புகளை கொடுப்பது குறித்து தயாரிப்பாளர்களும், தியேட்டர்காரர்களும் பேசி முடித்துக் கொள்ளலாம் என்று முடிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

2 இனி தியேட்டர் கட்டணத்தை அனைத்து படங்களுக்கும் ஒரே மாதிரியாக வைத்துக் கொள்ளாமல் பட்ஜெட்டை மனதில் கொண்டு சில படங்களுக்குக் கட்டணத்தைக் குறைத்து வாங்க தியேட்டர்காரர்கள் ஒத்துக் கொண்டுள்ளார்கள். இதனால் மீடியம் பட்ஜெட் மற்றும் பட்ஜெட் படங்களை திரையிடும்போது அவற்றுக்கான தியேட்டர் கட்டணங்கள் பாதியாகக் குறைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

 

3 தியேட்டர்களில் செய்யப்படும் முன் பதிவுக் கட்டணம் இதுவரையிலும் 35 ரூபாய்வரையிலும் இருந்த நிலையில், இனிமேல் அது வெறும் 4 ரூபாய் மட்டுமே என்பதற்கு தியேட்டர்காரர்கள் ஒத்துக் கொண்டுள்ளார்கள். அதிலும் முன் பதிவுக்கான இணையத்தளத்தை தயாரிப்பாளர் சங்கமே அரசின் மேற்பார்வையில் செயல்படுத்தித் தரப் போகிறதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

4 தியேட்டர் டிக்கெட் விற்பனை முழுவதையும் கணிணி மயமாக்கவும் தியேட்டர் அதிபர்கள் ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். இத்திட்டம் வரும் ஜூன் முதல் தேதி முதல் அமலாகும். இதன் மூலம் ஒரு திரைப்படத்தின் உண்மையான வசூல் நிலவரம் அன்றன்றைக்கே தயாரிப்பாளர்களுக்குத் தெரிந்துவிடும். ஒரு திரைப்படத்தின் உண்மையான வசூலும் தெரிந்துவிடுவதால் பெரிய நடிகர்களுக்குத் தரப்படும் சம்பளம் அடுத்தப் படங்களில் ஒரு வகையில் நிலை நிறுத்தி சமச்சீரான சம்பளம் நடிகர்களுக்கு தரப்பட்டு தயாரிப்பாளர்களுக்கு பெரும் சுமை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

5 தியேட்டர் அதிபர்களின் நீண்ட நாள் கோரிக்கையான மற்ற மாநிலங்களில் இருக்கும் தியேட்டர் பராமரிப்பு கட்டணத்தை தியேட்டர் கட்டணத்தில் சேர்ப்பது குறித்து தமிழக அரசு விரைவில் அறிவிப்பாணை வெளியிடும் உறுதி அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

vishal

 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஷால் பேசியபோது..."சினிமாத்துறை முழுக்க வெளிப்படைத்தன்மைக்கு வருகிறது. எனவே, இனிமேல் எல்லா திரையரங்குகளிலும் டிக்கெட் விற்பனை கணினி மூலமாகவே நடைபெறும். மேலும், ஆன்லைனில் டிக்கெட் புக் செய்யும்போது எக்ஸ்ட்ராவாக வசூலிக்கப்படும் கட்டணம் இனிமேல் வசூலிக்கப்பட மாட்டாது. ஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்ய தயாரிப்பாளர் சங்கமே முடிவெடுத்துள்ளது. மேலும் வேலை நிறுத்தம் குறித்து நாளை (இன்று) நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

 

இதன் மூலம் இன்று நடக்கவிருக்கும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் சிறப்புக் கூட்டத்தில் சங்க உறுப்பினர்களுக்கு இது குறித்து தெரிவிக்கப்பட்ட பின்பு புதிய திரைப்படங்களை எப்போது திரைக்குக் கொண்டு வருவது, படப்பிடிப்புகளை எப்போது துவக்குவது என்பது பற்றியெல்லாம் முடிவெடுத்து இன்று அறிவிக்கும் பட்சத்தில் விரைவில் வேலை நிறுத்தம் திரும்பப் பெறப்பட்டு படப்பிடிப்புகள், படங்கள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சார்ந்த செய்திகள்

Next Story

"இது திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாக ஒரு பாதையை உருவாக்கியுள்ளது" - அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் கண்டனம்!

Published on 26/08/2020 | Edited on 26/08/2020
ghgh

 

 

கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சினிமா சார்ந்த அனைத்து வேலைகளும் மத்திய அரசின் உத்தரவின் படி இரண்டு நாட்களுக்கு முன்னர் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்புகள் மற்றும் பின்னணி வேலைகள் ஆரம்பமானது. இருந்தும் திரையரங்குகள் இன்னமும் திறக்கப்படாமலேயே இருந்து வரும் நிலையில் தியேட்டர் அதிபர்கள் வருமானம் இன்றி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தியேட்டர்கள் திறப்பது குறித்து எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை என அறிவித்துள்ளார். இந்நிலையில் இதுகுறித்து தற்போது தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளது. அதில்...

 

"தமிழ்நாடு திரையரங்குகள் விரைவில் திறக்கப்படாது என்று அமைச்சர் கடம்பூர் ராஜா உறுதிப்படுத்தியுள்ளார். இது ரிலீசுக்காக காத்திருக்கும் அனைத்து திரைப்படங்களும் ஓடிடியில் வெளியாக ஒரு பாதையை உருவாக்குகிறது. அடுத்த 6 மாதங்களில் குறைந்தது 30 தமிழ் திரைப்படங்கள் ஓடிடி வழியாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கலாம்" என பதிவிட்டுள்ளது.

 

 

Next Story

நிர்மலா சீதாராமனை சந்தித்த தமிழ் பட இயக்குனர்கள்!

Published on 31/10/2019 | Edited on 01/11/2019

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் தலைவர் ஆர்.கே செல்வமணி திரைப்படத்துறையில் உள்ள பல்வேறு பிரச்சனைகளை தீர்ப்பதற்கான கோரிக்கைகள் அடங்கிய மனுவை நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமனிடம் இன்று காலை வழங்கினார். பின்னர் இதுகுறித்து விளக்கமளித்து அவர் பேசியபோது... 

 

ns

 

''இன்று காலை 10 மணி அளவில் மதிற்பிற்குரிய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களை தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் சார்பில் தலைவர் ஆர்.கே செல்வமணி, பொருளாளர் சாமிநாதன், துணைத்தலைவர் ஸ்ரீதர், தீனா மற்றும் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்க பொது செயலாளர் ஆர்.வி.உதயகுமார், இணை செயலாளர் லிங்குசாமி மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் சென்று சந்தித்தோம். அந்த சந்திப்பில் எங்களின் கோரிக்கையாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் ஆண்டிற்கு அவர்கள் கலந்துகொள்ளவேண்டும் என்றும், திரைப்படங்களில் விலங்குகளை பயன்படுத்துவதற்கான சான்றிதழ் பெரும் விலங்குகள் நல வாரியம் அமைப்பின் கிளையை சென்னையிலும் அமைக்கவேண்டும் என்றும், ஆன்லைன் டிக்கெட்டுகளை இந்தியா முழுவதும் அமல்படுத்தவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தோம்.

 

 

மேலும் டிக்கெட் மீதான ஜிஎஸ்டியில் உள்ள பிரச்சனைகள் குறித்தும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் மூத்த உறுப்பினர்களின் ஓய்வூதியம் குறித்தும் விவாதித்தோம். அப்போது அவர் எங்கள் கோரிக்கைகளை பரிசீலித்து நன்கு பதிலளித்தார். மேலும் உடனடியாக விலங்குகள் நல வாரியம் அமைச்சரை தொடர்புகொண்டு அவர்களுடன் வரும் 4ஆம் தேதி நேரடி பேச்சுவார்த்தை நடத்திடவும், அதில் அவருடன் நாங்களும் கலந்துகொள்ளவும் ஏற்பாடு செய்து, அதில் நல்ல முடிவு கிடைக்க வழி செய்வதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதற்காக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் சார்பிலும், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கம் சார்பிலும் எங்கள் இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்'' என்றார்.