பிரபல ஹாலிவுட் இயக்குநரான கிறிஸ்டோபர் நோலன், கடைசியாக 'ஓப்பன்ஹெய்மர்' படத்தை இயக்கியிருந்தார். இப்படம் அமெரிக்க அணுசக்தி விஞ்ஞானியான ஜே.ராபர்ட் ஓப்பன்ஹெய்மர் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது. இப்படம் 96வது ஆஸ்கர் விருதில் 7 விருதுகளை வென்றது. 

இப்படத்தை அடுத்து  கிரேக்க கவிஞர் ஹோமர் எழுதிய ‘தி ஒடிஸி’(The Odyssey) என்ற கவிதையை மையப்படுத்தி அதே பெயரில் ஒரு படம் எடுத்து வருகிறார் நோலன். யுனிவர்ஸல் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் மேட் டிமன் மற்றும் டாம் ஹாலண்ட் ஆகியோர் நடித்து வருகின்றனர். படம் முழுக்க ஐமேக்ஸ் கேமரா பயன்படுத்தி படமாக்கப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு ஜூலை 17ஆம் தேதி படம் வெளியாகவுள்ளது. படத்தின் முன்னோட்டம் இம்மாத தொடக்கத்தில் ‘ஜுராசிக் வேர்ல்ட் ரீ பர்த்’ படம் வெளியான நிலையில், அப்படத்தின் திரையிடலின் போது சில திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. இதனிடையே படத்தின் முன்னோட்டம் சமூக வலைதளங்களில் கசிந்தது. 

இந்த நிலையில் படம் வெளியாகுவதற்கு ஒரு வருடம் இருக்கும் நிலையில் அதை குறிப்பிடும் வகையில் அதே ரிலீஸ் தேதியான இந்த வருடத்தில்(17.07.2025) படத்திற்கான முன்பதிவு டிக்கெட் கட்டணம் தொடங்கப்பட்டது. அதாவது ஐமேக்ஸ் திரைகளுக்கான டிக்கெட்டுகள் நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ், சான் பிரான்சிஸ்கோ மற்றும் லண்டன் போன்ற நகரங்களில் தொடங்கப்பட்டது. தொடங்கப்பட்ட சில நிமிடங்களிலே பெருவாரியான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன. ஐமேக்ஸ் திரைகளை தவிர்த்து மற்ற திரையரங்குகளுக்கான டிக்கெட்டுகள் அமெரிக்கா மற்றும் கனடாவில் குறிப்பிட்ட சில பகுதிகளில் படத்தின் டிக்கெட் விற்பனை தொடங்கி அங்கேயும் சில நிமிடங்களில் பெருவாரியான டிக்கெட்டுகள் விற்றுள்ளதாக கூறப்படுகிறது.

ஒரு வருடத்துக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டதும், அதில் சில நிமிடங்களிலே டிக்கெட்டுகள் விற்பனையானதும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.