ஹாலிவுட்டில் தனக்கென ஒரு மேக்கிங் ஸ்டைலை உருவாக்கி ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு படங்களை எடுத்து வருபவர் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன். கடைசியாக 'ஓப்பன்ஹெய்மர்' படத்தை இயக்கியிருந்தார். இப்படம் அமெரிக்க அணுசக்தி விஞ்ஞானியான ஜே.ராபர்ட் ஓப்பன்ஹெய்மர் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது. இப்படம் 96வது ஆஸ்கர் விருதில் 7 விருதுகளை வென்றது. 

இப்படத்தை அடுத்து  கிரேக்க கவிஞர் ஹோமர் எழுதிய ‘தி ஒடிஸி’(The Odyssey) என்ற கவிதையை மையப்படுத்தி அதே பெயரில் ஒரு படம் எடுத்து வருகிறார். யுனிவர்ஸல் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் மேட் டிமன் மற்றும் டாம் ஹாலண்ட் ஆகியோர் நடித்து வருகின்றனர். படம் முழுக்க ஐமேக்ஸ் கேமரா மூலம் படமாக்கப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு ஜூலை 17ஆம் தேதி வெளியாகவுள்ளதாக முன்பு அறிவிக்கப்பட்டது. படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

இப்படத்தின் முன்னோட்டம் இன்று வெளியாகியுள்ள ‘ஜுராசிக் வேர்ல்ட் ரீ பர்த்’ பட திரையிடலின் போது வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி குறிப்பிட்ட சில திரையரங்குகளில் தி ஒடிஸி படத்தின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது. இந்தியாவில் ‘ஜுராசிக் வேர்ல்ட் ரீ பர்த்’ படம் வருகின்ற 4ஆம் தேதி தான் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ‘தி ஒடிஸி’ படத்தின் முன்னோட்டம் சமூக வலைதளங்களில் கசிந்துள்ளது. 1 நிமிடம் 22 வினாடிகள் ஓடக்கூடிய இந்த முன்னோட்டம் தற்போது வைரலாகி வருகிறது.