Skip to main content

பாலியல் காட்சியில் பகவத்கீதை வசனம்? - நோலனை சீண்டும் இந்துத்துவ அமைப்புகள்

Published on 25/07/2023 | Edited on 25/07/2023

 

Christopher Nolan Oppenheimer Bhagavad Gita issue

 

பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் சிலியன் மர்பி நடிப்பில் கடந்த 21 ஆம் தேதி வெளியான படம் 'ஓப்பன்ஹெய்மர்'. இப்படம் அமெரிக்க அணுசக்தி விஞ்ஞானியான ஜே.ராபர்ட் ஓப்பன்ஹெய்மர் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் அணு ஆயுத சோதனை காட்சி இடம்பெறுவதால் உண்மையிலேயே அணு ஆயுத சோதனையை மேற்கொண்டு தத்ரூபமாகப் படமெடுத்துள்ளது படக்குழு. அதனால் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. முதல் நான்கு நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ. 50 கோடியும் உலகம் முழுவதும் 174 மில்லியன் டாலர் வசூலித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

 

இந்நிலையில் இப்படத்தில் இடம் பெரும் ஒரு காட்சி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. கதாநாயகன் மற்றும் கதாநாயகி இருவரும் நெருக்கமாக இருக்கும் ஒரு காட்சியில், "இந்த உலகத்தை அழிப்பவன் நான்" என்று கதாநாயகன் கூறுகிறார். இந்த வசனம் பகவத்கீதையில் இடம்பெறுவதாகக் கூறி, முகம் சுளிக்கும் காட்சியில் இதைப் பயன்படுத்தி இந்து மதத்தைப் புண்படுத்திவிட்டதாக இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

 

இந்திய தகவல் ஆணையர் உதய் மஹூர்கர், இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனுக்கு ட்விட்டரில் ஒரு பதிவு பகிர்ந்துள்ளார், அதில், "ஒரு விஞ்ஞானியின் வாழ்க்கையில் இந்த தேவையற்ற காட்சியின் பின்னால் உள்ள உந்துதல் மற்றும் லாஜிக் எங்களுக்குத் தெரியாது. ஆனால், இது பல கோடி இந்துக்களின் மத நம்பிக்கைகள் மீதான நேரடித் தாக்குதலாகும். இந்து சமூகத்தின் மீது போர் தொடுப்பதற்குச் சமம். எனவே இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அந்தக் காட்சியை நீக்க வேண்டும்" எனக் கோரிக்கை வைத்திருந்தார். 

 

விஞ்ஞானி ஜே. ராபர்ட் ஓப்பன்ஹெய்மர், முதல் முறையாக அணுகுண்டு வெடிப்பை சோதித்த பின்பு, "இந்து இதிகாசமான பகவத்கீதையில் வரும் வரிகளை நினைவுபடுத்திக்கொண்டேன். இளவரசர் அர்ஜுனன் தன் கடமையை நிறைவேற்ற வேண்டும் என விஷ்ணு கூறுகிறார். அவரை ஈர்க்க, விஷ்ணு பல கைகளுடன் தோன்றி, 'நான் இப்பொழுது, உலகை அழிக்கக்கூடிய மரணம் ஆகிவிட்டேன்' எனக் கூறுகிறார்" என்று கவலையுடன் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

இதனிடையே மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், இந்தக் காட்சிகளுக்கு ஒப்புதல் அளித்த தணிக்கை வாரிய குழுவின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்தக் காட்சிகளை நீக்கத் தணிக்கை வாரிய குழுவிற்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்