Advertisment

ஒரே ஆண்டில் மூன்று '100 டேஸ்' படங்கள்! - சீயான் விக்ரமின் பொற்காலம் தெரியுமா?

தமிழ் திரைப்பட ரசிகர்கள், முன்னணி நாயகர்களை இரண்டு வரிசையில் வைத்துப் பார்ப்பார்கள். எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜினி - கமல் என்று தொடங்கும் அந்த வரிசை அதன் பிறகு சற்று குழப்பத்தை சந்தித்தது. அஜித் - விஜய் இருவரும்தான் முன்னணி என்றாலும், இவர்களில் யார் ரஜினி பாணி, யார் கமல் பாணி என்ற குழப்பம்தான் அது. ஆரம்பத்தில் விஜய், பகவதி, திருமலை, திருப்பாச்சி என நடித்தபோது அவர் ரஜினி பாணியிலும் அஜித், சிட்டிசன், வில்லன், வரலாறு என நடித்தபோது அவர் கமல் பாணியிலும் வருவதாக பார்க்கப்பட்டது. ஆனால், பின்னாளில் அந்த இருவரின் பாணியும் மாறியது. வசூல் ரீதியாகப் பார்த்தாலும் இருவரில் ஒருவரை முதன்மையாக சொல்வது கடினம். விஜய், 'மெர்சல்' செய்தால் அஜித்தின் விஸ்வாசம் 'பேட்ட'யையேஓவர்டேக் செய்தது என்கிறார்கள் சினிமா வணிகர்கள். இப்படி இந்தக் குழப்பம் இன்றும் நிலவுகிறது. ஆனால், இந்த எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜினி - கமல், விஜய் - அஜித் வரிசையில் திடீரென நுழைந்து, 'ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவாரோ' என்ற பலமான எண்ணத்தை 2000 ஆண்டுகளின் தொடக்கத்தில் ஏற்படுத்தியவர் சீயான் விக்ரம்.

Advertisment

dhool vikram

இன்று விக்ரம் நடித்துள்ள 'கடாரம் கொண்டான்' வெளியாகி வெற்றிப் பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. இதற்கு முன்பு தொடர்ந்து சில தோல்விகளை சந்தித்தார் விக்ரம். அதனால் இந்தப் படம் வெற்றி பெறுவது அவருக்கும் அதை விட விக்ரமின் ரசிகர்களுக்கும் மிக முக்கியமாக இருக்கிறது. தமிழ் சினிமாவில் தன்னம்பிக்கைக்கு அடையாளமாக சொல்லப்படுபவர் அஜித். தன்னம்பிக்கைக்கும் விடாமுயற்சிக்கும் உதாரணமாக சொல்லத்தக்கவர் விக்ரம். பல ஆண்டுகள் முயன்று சினிமாவில் நுழைந்து நாயகனாக அறிமுகமாகி ஒன்பது வருடங்களாக ஒரு வெற்றிப் படமும் அமையாமல், தொடங்கப்பட்ட பல திரைப்படங்கள் கைவிடப்பட்டு, நல்ல வாய்ப்புகள் தவறி, தொடர்ந்து சினிமாவில் இயங்க வேண்டுமென்பதற்காக டப்பிங், சீரியல் நடிப்பு என தொடர்ந்து பல ஆண்டுகள், பல அவமானங்களுக்குப் பிறகு கிடைத்தது ஒரு வெற்றி. அந்தப் படத்தில் தனது திறமையை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி, தொடர்ந்து வந்த வாய்ப்புகளில் சரியானவற்றை தேர்ந்தெடுத்து சில ஆண்டுகளில் தமிழ் பாக்ஸ் ஆஃபிசில் கிட்டத்தட்ட நம்பர் ஒன் நாயகனாகத் திகழ்ந்தார் விக்ரம்.

Advertisment

'படையப்பா' வெற்றிக்குப் பிறகு ஒரு இடைவெளி, பிறகு 'பாபா' தோல்வி, அதன் பிறகு ஒரு இடைவெளி என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆக்டிவ்வாக இல்லாத... 'ஆளவந்தா'னுக்குப் பிறகு பெரிய படங்கள் செய்யாமல் காமெடி படங்கள் மற்றும் சிறிய படங்கள் என கமல் சென்ற... விஜய், அஜித் இருவருக்கும் தொடர், பெரிய வெற்றிகள் அமையாத... 2002-2003 காலகட்டத்தில் உச்சத்தில் இருந்தார் விக்ரம். 'சேது' படம் கொடுத்த மிகப்பெரிய பேர், பெரிய வெற்றியைத் தொடர்ந்து நடித்த 'விண்ணுக்கும் மண்ணுக்கும்' தோல்வியடைந்தது. அதற்குப் பிறகு வந்த 'தில்' தமிழ் திரையுலகின் கமர்சியல் பாதையில் புதிய மைல்கல். அடுத்த ஐந்து ஆண்டுகளில் அந்தப் படத்தின் டெம்ப்லேட்டில் இருபது படங்களாவது வெளியாகியிருக்கும். அப்பேற்பட்ட வெற்றியை பெற்றது 'தில்'. 2002ஆம் ஆண்டு விக்ரம் நடித்த 'ஜெமினி' அந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றியாகஇருந்தது. பாலாஜி சக்திவேல் இயக்கிய 'சாமுராய்' நல்ல படமென்றாலும் பெரிய வெற்றி பெறவில்லை. பிரபு சாலமன் இயக்கிய 'கிங்' படம் முற்றிலும் தோல்வி. ஆனாலும் 'ஜெமினி'யின் வெற்றி நின்று பேசியது. அதற்கடுத்து 2003ஆம் ஆண்டின் பொங்கலுக்கு வெளியானது 'தூள்'. 'ப்ளாக் பஸ்டர்', 'பட்டிதொட்டி ஹிட்', 'பக்கா மாஸ்', 'தெறி' இப்படி எந்த வார்த்தையை எடுத்துக்கொண்டாலும் பொருந்தும் என்னும் அளவுக்கு மெகா ஹிட் படமானது 'தூள்'. அந்தப் பொங்கலுக்கு வெளியான விஜயகாந்த்தின் 'சொக்கத்தங்கம்' இரண்டாம் இடத்தைப் பிடிக்க விஜய் நடித்த 'வசீகரா' மூன்றாவது இடத்தையே பிடித்தது.

saami pithamagan

பொங்கலுக்கு வெளியான 'தூள்' வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும்போதே ஏப்ரலில் வெளியானது 'காதல் சடுகுடு'. தாமதமாக வெளியான அது சுமார் என்றாலும் அடுத்து மே மாதத்தில் வெளியான 'சாமி'யின் வெற்றி அதை மறைத்துவிட்டது. பாலச்சந்தரின் கவிதாலயா தயாரிப்பில் ஹரி இயக்கிய படமான 'சாமி'யும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த இரண்டு படங்களுமே கமர்சியல் மாஸ் படங்கள். தொடர்ந்து தீபாவளிக்கு வெளியான 'பிதாமகன்' படமும் வெற்றி. இந்த முறை பாலாவின் பிதாமகன் படம் வர்த்தகம், விமர்சனம் இரண்டிலுமே வெற்றி பெற்ற விக்ரம் படமானது. சூர்யாவும் இணைந்து நடித்திருந்த இந்தப் படத்திற்காக விக்ரமுக்கு தேசிய விருது கிடைத்தது. அந்த தீபாவளிக்கு வெளியான விஜய்யின் 'திருமலை' வெற்றி பெற்றாலும் இரண்டாவதாகவே இருந்தது. அப்போது மிகப்பெரிய ஓப்பனிங்குடன் வெளியான அஜித்தின் 'ஆஞ்சநேயா' ஃப்ளாப் ஆனது. அந்த 2003ஆம் ஆண்டில் விக்ரம் நடித்து வெளியான நான்கு படங்களில் மூன்று படங்கள் நூறு நாட்களைத் தாண்டி ஓடின. கடந்த சில ஆண்டுகளில் விஜய் சேதுபதி எப்படி வரிசையாக படங்களை, வெற்றிகளை கொடுத்தாரோ அப்படி இருந்தது அந்தக் காலகட்டம். ஆனால், வெற்றிகள் இன்னும் பெரிது என்றே சொல்லலாம்.

vikram ajith

vijay vikramsurya vikram

இப்போதேல்லாம் இரண்டாவது வாரம், மூன்றாவது வாரம் தொடுவதே மிகப்பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது. இப்பொழுது விக்ரம் படங்கள் வெற்றி பெற்றும் சில ஆண்டுகள் ஆகிறது. இதை கருத்தில் கொண்டால் விக்ரமுக்கு அந்த 2003ஆம் ஆண்டு பொற்காலம் என்றே சொல்லலாம். அவரது சமகால போட்டியாளர்களாகக் கருதப்பட்ட விஜய், அஜித், சூர்யா மூவரில் யாருக்குமே இப்படி ஒரு மாஸ் வெற்றி ஆண்டு அமைந்ததில்லை. அதற்கு முன்பு ஒரு காலகட்டத்தில் விஜயகாந்த், சத்யராஜ், பிரபு போன்றவர்களுக்கு இப்படி ஒரே ஆண்டில் வெற்றிகள் அமைந்திருந்தன.எப்போதும் கடும் சண்டை போடும் அஜித் - விஜய் ரசிகர்கள் அந்த காலகட்டத்தில் ஒற்றுமையாக இருந்தது விக்ரமை விமர்சிக்கத்தான். இப்போது சோசியல் மீடியாவில் இருப்பவர்கள் அப்போது டீக்கடைகளிலும் தியேட்டர்களிலும் பேசிக்கொண்டிருந்தனர். "இதெல்லாம் கொஞ்ச நாள்தான் பாஸு, எப்போவும் விஜய் - அஜித்தான்" என்ற ரீதியில் அப்போது பேசிக்கொள்வார்கள். இப்படி நடிப்புக்காகப் பாராட்டப்பட்டு அதே நேரம் கமர்ஷியலாகவும் வெற்றிக்கொடியேற்றினார் விக்ரம். 2005இல் வெளியான அந்நியன் வரை தொடர்ந்த விக்ரமின் மாஸ் வெற்றி அதன் பிறகு சில தவறான தேர்வுகள், சில படங்கள் அதிக காலத்தை எடுத்துக்கொண்டது ஆகிய காரணங்களால் கமர்சியல் வெற்றியை தவறவிட்டார். அதன் பிறகு சில ஆண்டுகள் சூர்யா உச்சத்தில் இருந்தார். பின்னர் மீண்டும் அஜித் - விஜய் என்று நிலைபெற்றது இந்த வரிசை.

"இந்தப் படத்தில் 'ஒரு சாமி, ரெண்டு சாமி, மூணு சாமி, நாலு சாமி, அஞ்சுச்சாமி, ஆறுச்சாமி ACP திருநெல்வேலி சிட்டி'ன்னு சொல்லி விக்ரம் அப்படி ஏறி உக்காரும்போது 'நம்ம இப்படி ஒரு ஸீன் இதுவரைக்கும் நடிக்கலையே'ன்னு எனக்கு தோனுச்சு. சேதுல விக்ரம் யாருன்னு தெரிஞ்சது, தில் படத்துல 20% மாஸ்ஸை பிடிச்சாரு, ஜெமினியில் 40% மாஸ்ஸை பிடிச்சாரு, தூள் படத்தில் 60% மாஸ்ஸை பிடிச்சாரு, இப்போ சாமியில 100% மாஸ்ஸை பிடிச்சிட்டாரு" - இது 'சாமி' வெற்றி விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியது. ரசிகர்களின் அபிமான 'சீயான்' விக்ரம், மீண்டும் அப்படிப்பட்ட வெற்றிகளைப் பெற வேண்டுமென்பதே தமிழ் சினிமா ரசிகர்களின் விருப்பம்.

suriya actor vijay ajith actor vikram
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe