chiranjeevi about hanuman team donates ramar temple

பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில், தேஜா சஜ்ஜா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஹனுமான். தேஜா சஜ்ஜாவுக்கு ஜோடியாக அம்ரிதா ஐயர் கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் வினய் ராய் வில்லனாகவும், வரலட்சுமி சரத்குமார் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். இப்படம் பொங்கலை முன்னிட்டு வருகிற 12 ஆம் தேதி தெலுங்கு, இந்தி, மராத்தி, தமிழ், கன்னடம், மலையாளம், ஆங்கிலம், ஸ்பானிஷ், கொரியன், சீனம் மற்றும் ஜப்பானியம் உள்ளிட்ட பல மொழிகளில் ஹனுமான் பான் வேர்ல்ட் படமாக வெளியிடப்படவுள்ளது. இப்படத்திற்கு கவுரஹரி, அனுதீப் தேவ் மற்றும் கிருஷ்ணா சவுரப் ஆகிய மூவர் இணைந்து இசையமைத்துள்ளனர்.

இப்படக்குழு தற்போது ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இப்படத்தின் தமிழ்ப் பதிப்பினை விளம்பரப்படுத்தும் வகையில் சமீபத்தில் படக்குழுவினர் சென்னையில், பத்திரிக்கையாளர்களைச்சந்தித்துப் பேசினர். இதனைத்தொடர்ந்து ஹைதராபாத்தில் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தெலுங்கு முன்னணி நடிகர் சிரஞ்சீவி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். அவர் பேசுகையில், “ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி ஹனுமான் குழு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளது. ராமர் கோவில் கட்டுவதற்காக தங்கள் படத்தின் ஒவ்வொரு டிக்கெட்டிலிருந்தும் 5 ரூபாய் வழங்க முடிவு செய்துள்ளனர். படக்குழு சார்பாக இதனை நான் அறிவிக்கிறேன். உன்னதமான முடிவை எடுத்த 'ஹனுமான்' குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்றார்.

உத்தரப் பிரதேசம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் வருகிற 22 ஆம் தேதி திறக்கப்படவிருக்கிறது. இதில் சிரஞ்சீவியும் கலந்துகொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.