சின்னத்திரை நடிகர் சங்கத்திற்கான தேர்தல் நேற்று நடந்தது. இதில் சீனிவாசன் தலைமையிலான வசந்தம் அணி, நடிகர் தினேஷ் தலைமையிலான உழைக்கும் கரங்கள் அணி, நடிகர் பரத் தலைமையிலான சின்னத்திரை வெற்றி அணி ஆகிய மூன்று அணிகள் போட்டியிட்டன. மேலும் நடிகர் கணேஷ், அவரது மனைவி ஆர்த்தி கணேஷ் ஆகியோர் சுயேட்சையாக போட்டியிட்டனர்.மொத்தம் 23 பதவிக்காக நடந்த இந்த தேர்தலில் எம்.எஸ்.பாஸ்கர், சாம்ஸ் உள்ளிட்ட பல மூத்த மற்றும் முன்னணி நடிகர்கள் தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.
காலை ஏழு மணிக்குத் தொடங்கிய வாக்குப் பதிவு மாலை ஐந்து மணி வரை நடந்தது. சங்கத்தில் கிட்டத்தட்ட 2000 உறுப்பினர்கள் இருக்கும் நிலையில் மொத்தம் 936 வாக்குகள் பதிவாகின. இதில் 7 தபால் ஓட்டுகள் அடங்கும். பின்பு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது, சின்னத்திரை வெற்றி அணி சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பரத் மொத்தம் 491 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவர் இதற்கு முன்பாக துணைத் தலைவராக பொறுப்பு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை தலைவரானவர்களில் இவர் தான் இளம் நடிகர் என கூறப்படுகிறது.
இதனிடையே நடிகை ரவீனா, ரெட் கார்டு என்கிற பெயரில் திட்டமிட்டே தன்னை தேர்தலில் போட்டியிடாமலும் வாக்களிக்க விடாமலும் தடுத்துவிட்டதாக குற்றம் சாட்டினார்.