கரோனா வைரஸ் தொற்று உலகையே நாளுக்கு நாள் அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் பரவத் தொடங்கிய இந்த வைரஸானது, தற்போது உலகம் முழுக்க 210 நாடுகளில் பரவியுள்ளது. இதனால் இந்தியா முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் தினக்கூலியை நம்பியுள்ள பணியாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமாகியுள்ளது. இதேபோல் சினிமா துறையில் பணியாற்றும் தினக்கூலி பணியாளர்களுக்கு ஃபெப்சியின் வேண்டுகோளுக்குப் பின் சினிமா பிரபலங்கள் உதவி வருகின்றனர்.

இந்நிலையில் தினசரி தொழிலாளர்களுக்கு உதவி செய்வதற்காக ஒரு வித்தியாசமான அணுகுமுறையைக் கையாளவுள்ளதாக பாடகி சின்மயி சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்..."சமூக வலைதளங்களில் பாட்டுப்பாடி அனுப்பவும், பிறந்தநாள் வாழ்த்து அனுப்பவும் என்னிடம் கோரிக்கை வைக்கப்படுகின்றன. அதை நான் செய்தும் வருகிறேன். இனி நான் இதை ஒரு தொண்டுக்காகப் பயன்படுத்தவுள்ளேன். தினசரி வருமானத்தை நம்பியுள்ள, தற்போது மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் பட்டியலை உருவாக்கியுள்ளேன். அவர்களுக்குப் பணம் அனுப்புங்கள். அதை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து எனக்கு அனுப்புங்கள். நான் பாடல் பாடியோ, பிறந்தநாள் வாழ்த்து சொல்லியோ உங்களுக்கு வீடியோ அனுப்புகிறேன்" என சின்மயி கூறியுள்ளார்.