Skip to main content

'இங்க நான் தான் கிங்-கு...' - ஜப்பானில் இருந்து வந்த ரஜினி ரசிகர் கொண்டாட்டம்

Published on 10/08/2023 | Edited on 10/08/2023

 

china rajini fans to come chennai for watching jailer

 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி, மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயிலர்' படம் இன்று (10.08.2023) உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு முதல் காட்சி தொடங்கியது. அதற்கு முன்னரே கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் காலை 6 மணி முதல் இருந்தே தொடங்கியுள்ளது. 

 

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ள இப்படத்திற்கு, திரையரங்கு முன் வழக்கம் போல் பேனர் வைத்து, பட்டாசு வெடித்து கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர். இதனால் திருவிழா போல் ஒவ்வொரு திரையரங்கமும் காட்சி அளிக்கிறது. இந்தக் கொண்டாட்டம் இந்தியாவைத் தாண்டி கனடா, சைனா உள்ளிட்ட நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு திரையரங்கிலும் ரஜினி ரசிகர்கள் வித்தியாசமாகக் கொண்டாடி வருகின்றனர். 

 

அந்த வகையில் 'அன்புத் தலைவரின் கைதிகள்' என்ற வாசகம் இடம் பெற்ற ஒரு பேனரைக் கையில் ஏந்தி, கைதிகள் போன்று உடை அணிந்து ரஜினி ரசிகர்கள் ஊர்வலமாக நடந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் திருவண்ணாமலையில் ரஜினி பேனருக்கு பாலாபிஷேகம் செய்து, 500 தேங்காய் உடைத்துக் கொண்டாடினர். 

 

ரசிகர்களைத் தாண்டி திரைப் பிரபலங்களும் திரையரங்கிற்கு வருகை தந்துள்ளனர். லதா ரஜினிகாந்த், தனுஷ், அனிருத், ரம்யா கிருஷ்ணன், பாடகர் விஜய் யேசுதாஸ், ராகவா லாரன்ஸ், காளிதாஸ் ஜெயராம், அர்ஜுன் தாஸ், பாடலாசிரியர் சூப்பர் சுபு, உள்ளிட்டோர் திரையரங்குகளில் ரசிகர்களுடன் பார்த்து ரசித்தனர். 

 

ரஜினிக்கு இந்தியாவைத் தாண்டி உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கும் நிலையில், ஜப்பானில் இருந்து ஒரு தம்பதியினர் படம் பார்ப்பதற்காக சென்னை வந்துள்ளனர். மேலும் ரஜினி டி-ஷர்ட் அணிந்து ரசிகர்களுடன் இணைந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தம்பதிகளில் ஒருவர், "20 வருஷமாக ரஜினி ரசிகராக இருக்கிறேன். முத்து, பாட்ஷா உள்ளிட்ட படங்களைப் பார்த்துள்ளேன்" என்றார். மேலும் 'ஹுக்கும்...' பாடலில் வரும் 'இங்க நான் தான் கிங்-கு... நான் வச்சதுதான் ரூல்ஸ்...' என்ற வரிகளைப் பாடிக் காண்பித்தார். மேலும் ஜப்பானில் ரஜினி ரசிகர் மன்றத் தலைவராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

 


 

சார்ந்த செய்திகள்