பா.ம.க. நிறுவனர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு ‘அய்யா’ என்ற தலைப்பில் இயக்கவுள்ளதாக இயக்குநர் சேரன் நேற்று அறிவித்திருந்தார். மேலும் டைட்டில் போஸ்டர்களையும் வெளியிட்டிருந்தார். அந்த போஸ்டர்களில் ‘இன விடுதலைக்கான போராட்டத்தின் வரலாறு 1987’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதோடு மக்கள் முன்பு ராமதாஸ் கதாபாத்திரம் எழுச்சி பொங்க பேசுவது போலவும் சங்கம் ஆரம்பிப்பது போலவும் வடிவமைக்கப்பட்டிருந்தது. இதனால் 1987ஆம் ஆண்டு வன்னி சமூகத்திற்காக ராமதாஸ் நடத்திய இட ஒதுக்கீடு போராட்டத்தை மையப்படுத்தி இப்படம் இருக்குமெனத் தெரிந்தது. அப்போராட்டத்தில் 21 பேர் உயிர் நீத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் ராமதாஸ் கதாபாத்திரத்தில் ஆரி நடிக்கிறார். தமிழ் குமரன் புரொடக்ஷன்ஸ் என்ற பேனரில் லைகா தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் தமிழ் குமரன் தயாரிக்கிறார். இவர் பா.ம.க. கவுரத் தலைவர் ஜி.கே.மணியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்குச் சுந்தர மூர்த்தி இசையமைக்கிறார். இவர் யோகி பாபு நடித்த ‘பொம்மை நாயகி’ சிபி சத்யராஜ் நடித்த ‘டென் ஹவர்ஸ்’ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். படத்தின் மற்ற நடிகர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும் பொருட்செலவில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பரில் தொடங்கவுள்ளது. இப்படம் தொடர்பாக தங்கர் பச்சன், சிம்பு தேவன் உள்ளிட்டோர் சேரனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இதனிடையே இப்படம் தொடர்பாக வெளியான போஸ்டர்கள் தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் சமூக வலைதளங்களில் உலா வந்தது. இது குறித்து இயக்குநர் சேரன் தற்போது பேசியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அய்யா திரைப்படத்தின் போஸ்டர் டிசைன்களை பார்த்து பாராட்டிய அனைவருக்கும் நன்றி. இப்போதுதான் இதன் வேலைகள் ஆரம்பிக்கிறது. ஆகையால் மாற்றுக்கருத்து அல்லது எதிர்கருத்து வைக்கும் நண்பர்கள் திரைப்படம் வரும்வரை பொறுமை காத்து அதன் பின்னர் கருத்துக்களை சொல்லவும்” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.