தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஆன்லைன் விமர்சனத்துக்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், முதல் மூன்று நாட்களுக்கு ஆன்லைன் விமர்சனத்தைத் தடை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. “நீதிபதிகளையே விமர்சிக்கும் காலத்தில் நாம் இருக்கிறோம். புதுப்பட ஆன்லைன் ரிவியூவை இங்கே தடுத்தால், அஜர்பைஜானில் மற்றொருவர் அதைச் செய்வார். அப்போது என்ன செய்வீர்கள்?
பிரபல சமூக ஊடகங்கள் மற்றும் யூடியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் போன்ற சமூக ஊடக தளங்களில் புதிதாக வெளியாகும் திரைப்படங்களின் தரத்தை மதிப்பாய்வு செய்வதும் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமையின் ஒரு பகுதி. தயாரிப்பாளர்கள் நேர்மறையான விமர்சனங்களை மட்டுமே எதிர்பார்க்க முடியாது. தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்” எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தார்.