Skip to main content

"அது என்னை காயப்படுத்தியது; நிலைமை மாறும் என நினைக்கிறேன்" - செஃப் தாமு பேட்டி!

Published on 12/11/2021 | Edited on 12/11/2021

 

Chef Damu

 

செஃப் தாமு என அறியப்படும் பிரபல சமையல் வல்லுநரான கோதண்டராமன் தாமோதரனுக்கு சமீபத்தில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. கடந்த 5ஆம் தேதி லண்டனில் நடைபெற்ற உலகளாவிய உணவு, விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா சாதனைகள் நிகழ்ச்சியில் இந்த விருதானது உலகத் தமிழ் அமைப்பால் அவருக்கு வழங்கப்பட்டது. இந்த நிலையில், செஃப் தாமுவை நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக சந்தித்து உரையாடினோம். அந்த சந்திப்பில் அவர் நம்மிடம் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...  

 

"இந்தியாவிற்கு வெளியே சென்று நான் வாங்கிய முதல் விருது இதுதான். அதுவும் லண்டனில் சென்று வாங்கியது மகிழ்ச்சியளிக்கிறது. லண்டனில் இருந்த நம்முடைய மாணவர்கள் என்னை சிறப்பாக கவனித்துக்கொண்டார்கள். அத்தனை வெளிநாட்டினர் முன்னால் விருது வாங்கியது சந்தோசமாக இருந்தது. 

 

நான் கேரியரை தொடங்கிய காலத்தில் செஃப் என்று சொல்லமாட்டர்கள். சமையல்காரர் என்றுதான் சொல்வார்கள். அது என்னைக் கொஞ்சம் காயப்படுத்தும். 1994ஆம் ஆண்டு முதல் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி செய்துகொண்டிருக்கிறேன். நிகழ்ச்சி முடித்துவிட்டு போகும்போது சமையல்காரர் போகிறார் என்பார்கள். சமையல்காரர் என்று சொல்வது தவறில்லை. அதே நேரத்தில் அதைத் தாண்டி நாம் படித்திருக்கிறோம் என்பதால் நம்மை குறைத்து கூறுவதுபோல இருக்கும். கேட்டரிங் துறை பற்றி நிறைய பேருக்குத் தெரிவதில்லை. அது தீண்டத்தகாத துறைபோலதான் இன்றும் இருக்கிறது. என் பையன் இன்ஜினியரிங் படிக்கிறான்... டாக்டருக்குப் படிக்கிறான் என்பதையெல்லாம் பெற்றோர்கள் பெருமையாக சொல்கிறார்கள். ஆனால், கேட்டரிங் படிக்கிறான் என்பதைச் சொல்ல பெற்றோர்களுக்கே தயக்கம் உள்ளது. இந்த நிலை விரைவில் மாறும் என்று நினைக்கிறேன். 

 

நான் கேட்டரிங் படிக்கப் போகிறேன் என்று சொன்னபோது என் அம்மாவிற்கு விருப்பமே இல்லை. காரணம், சமையல்காரனுக்கு யாரும் பொண்ணு தரமாட்டார்கள் என்றார். என்னுடைய திருமணம் தொடர்பான பேச்சு எழுந்தபோது அதுதான் நடந்தது. வீட்டில் பெரியவர்கள் பேசி என்னுடைய உறவுக்கார பொண்ணை திருமணம் செய்துவைத்தார்கள். கேட்டரிங் படிச்சா ஹோட்டலுக்கு வேலைக்குச் செல்ல வேண்டும். ஹோட்டலுக்கு வேலைக்குச் சென்றால் பையன் கெட்டுப்போய்விடுவான் என்றும்கூட சில பெற்றோர்கள் நினைக்கிறார்கள்" என்றார்.   

 

மேலும், ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி குறித்து கூறுகையில், "குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஆரம்பித்தபோது ‘கலக்கப்போவது யாரு’ டீமில் இருந்து நிறைய பேர் வந்திருந்தார்கள். இவங்களாம் என்ன பண்ணுவாங்க... சமைப்பாங்களா என்றெல்லாம்கூட தோன்றியது. ஆனால், இரண்டாவது எபிசோடுக்குப் பிறகு காமெடி ஆரம்பித்துவிட்டது. அதே நேரத்தில் சமையலிலும் கவனம் செலுத்தினார்கள். குக் வித் கோமாளி டீமில் இருந்த சிவாங்கி, அஷ்வின், பாலா, சரத், புகழ், சக்தி, சுனிதா, மணிமேகலை என அனைவரையுமே பிடிக்கும். சிவாங்கியின் நகைச்சுவையும் அப்பாவித்தனமும் மிகவும் பிடிக்கும். இந்த டீமில் உள்ள அனைவருமே என்னை அப்பா என்றுதான் கூப்பிடுகின்றனர். அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் இவர்கள் அனைவரும் என்னுடைய சொந்த பசங்களாக இருக்க வேண்டும். தற்போது பொதுமக்களால் நன்கு அறியப்பட்ட ஒருவராகிவிட்டேன். எங்காவது வெளியே செல்லும்போது, 'சார் உங்கள நான் டீவில பார்த்தேன்...' என்று யாராவது சொன்னால் மிகவும் சந்தோசமாக இருக்கும்" என்றார். 

 

அவர் செய்த கின்னஸ் சாதனை குறித்து கூறுகையில், "எனக்கு ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதனால் 24 மணிநேரம் 30 நிமிடம் 12 விநாடிகள் தொடர்ந்து சமையல் செய்து கின்னஸ் சாதனை படைத்தேன். அதில் நான் சமைத்த 617 வகையான உணவும் சிறப்பாக வந்திருந்தது. இந்த சாதனையை செய்வது மிகச்சவாலாக இருந்தது. கின்னஸ் சாதனைக்கான சான்றிதழ் வாங்கியபோது இந்திய தேசியக் கொடியைப் பிடித்தது மிகவும் சந்தோசமாக இருந்தது. அதை கையில் வாங்கிய பிறகு மனிதனாகப் பிறந்ததற்கான பிறவிப்பயனை அடைந்துவிட்டதுபோல உணர்ந்தேன். லண்டனில் உள்ள கின்னஸ் அலுவலகத்திற்குச் சென்று அங்குள்ள புத்தகத்தில் 219வது பக்கத்தில் என்னுடைய பெயரையும் புகைப்படத்தையும் பார்த்தபோது, 'சாதிச்சிட்டடா தாமு...' என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்