Skip to main content

மீண்டும் மிரட்ட வரும் 'சந்திரமுகி 2' ; வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Published on 14/06/2022 | Edited on 14/06/2022

 

'Chandramukhi 2' ; Official announcement released

 

ரஜினி நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் 2005-ஆம் ஆண்டு வெளியாகி வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்ற படம் 'சந்திரமுகி'. 'சிவாஜி ப்ரொடக்ஷன்' தயாரித்திருந்த இப்படத்தில் பிரபு, ஜோதிகா, வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். வித்யாசாகர் இசையமைத்திருந்தார். இப்படம் மலையாளத்தில் 1993-ஆம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் வெளியான 'மணிசித்ரதாலு' படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்தான அறிவிப்பை கடந்த 2020-ஆம் ஆண்டு நடிகர் ராகவா லாரன்ஸ், தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்தார். ஆனால் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை. 

 

இந்நிலையில் 'சந்திரமுகி 2' படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன் படி முதல் பாகத்தை இயக்கிய பி.வாசுவே சந்திரமுகி இரண்டாம் பாகத்தையும் இயக்கவுள்ளார். முதன்மை கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் வடிவேலு நடிக்கவுள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைக்கவுள்ளார். இந்த அறிவிப்பை படத்தின் தயாரிப்பு நிறுவனமான 'லைகா புரொடக்ஷன்ஸ்' தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து படத்தின் போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இளையராஜா பாடல்கள் நம்மை ஆட்டிப்படைக்கும்” - குஷ்பு

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
kushboo about ilaiyaraaja

பி.வாசு இயக்கத்தில் பிரபு, குஷ்பு உள்ளிட்டோர் நடிப்பில் 1991ஆம் ஆண்டு வெளியான படம் சின்னதம்பி. பாலு தயாரித்திருந்த இப்படத்தில் மனோரோமா, ராதா ரவி, கவுணடமணி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இயக்குநர் வாசுவின் மகன் சக்தியும் சின்ன வயது பிரபு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்த நிலையில் பாடல்கள் அனைத்தும் பெரும் வரவேற்பை பெற்றது. பாடல்களுக்கு வாலி மற்றும் கங்கை அமரன் வரிகள் எழுதியிருந்தனர். 

இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதால் கன்னடம், தெலுங்கு, இந்தி என அடுத்தடுத்து ரீமேக் செய்யப்பட்டது. கன்னடத்தில் தமிழில் வெளியான அதே ஆண்டில் ராமச்சாரி என்ற தலைப்பில் வெளியான நிலையில் ரவிச்சந்திரன் மற்றும் மாலாஸ்ரீ நடித்திருந்தனர். தெலுங்கில் சண்டி என்ற தலைப்பில் 1992ஆம் ஆண்டு வெளியான நிலையில் வெங்கடேஷ் மற்றும் மீனா நடித்திருந்தனர். இந்தியில் அனாரி என்ற தலைப்பில் 1993ஆம் ஆண்டு வெளியான நிலையில் தெலுங்கில் நடித்த வெங்கடேஷ் மற்றும் கரிஸ்மா கபூர் நடித்திருந்தனர்.  

கன்னடம் மற்றும் தெலுங்கில் பி.வாசு இயக்கியிருந்தார். இந்தியில் முரளி மோகன ராவ் இயக்கியிருந்தார். இசையில் தமிழை தவிர்த்து தெலுங்கில் மட்டும் இளையராஜா இசையமைத்திருந்தார்.   இந்த நிலையில் இப்படம் வெளியாகி இன்றுடன் 33 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையொட்டி நடிகை குஷ்பு, படம் குறித்து நெகிழ்ச்சியுடன் அவரது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அந்தப் பதிவில், “நேரம் பறக்கிறது எனச் சொல்வார்கள், அது உண்மைதான். தமிழக மக்களால் கொண்டாடப்பட்ட சின்னதம்பி இன்றுடன் வெளியாகி 33 ஆண்டுகள் ஆகிறது என்பதை நம்பவே முடியவில்லை. அந்தப் படம் எங்கள் வாழ்க்கையை மாற்றியது. 

எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர் பி.வாசு சார் மற்றும் எனக்கு பிடித்த சக நடிகர் பிரபு சார். மறைந்த கே.பாலு தயாரிப்பாளர் எப்போதும் நினைவில் இருப்பார். ஒளிப்பதிவாளர் ரவீந்தர், என்னுடன் நடித்த துணை நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. இறுதியாக மெஜிசியன் இளையராஜா, அவரது பாடல்கள் வாழ்நாள் முழுவதும் நம்மை ஆட்டிப்படைக்கும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

Next Story

விஷாலின் மேல் முறையீட்டு மனு - உத்தரவிட்ட நீதிமன்றம் 

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
vishal lyca case update

நடிகர் விஷால் நடிப்பது மட்டுமின்றி 'விஷால் ஃபிலிம் ஃபேக்டரி' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் சார்பாக 'கோபுரம் ஃபிலிம்ஸ்' அன்புச்செழியனிடம் 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனாகப் பெற்றிருந்தார். இந்த கடன் தொகையை லைகா நிறுவனம் ஏற்றுக்கொண்டு செலுத்தியது. இது தொடர்பாக லைகா நிறுவனம் விஷாலிடம் மேற்கொண்ட ஒப்பந்தத்தில், கடன் தொகையை முழுமையாகத் திருப்பிச் செலுத்தும் வரை விஷால் தயாரிக்கும் அனைத்து படங்களின் உரிமையும் லைகா நிறுவனத்திற்கு வழங்கப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால் விஷால், கடன் தொகையைச் செலுத்தாமல் 'வீரமே வாகை சூடும்' படத்தை தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளில் வெளியிடும் பணிகளை மேற்கொண்டதாகவும், அந்தப் படத்தை வெளியிடவும், சாட்டிலைட், ஓடிடி ஆகியவற்றின் உரிமைகளுக்குத் தடை விதிக்கக் கோரியும் உயர்நீதிமன்றத்தில் லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது. அதில் தங்களுக்கு செலுத்த வேண்டிய கடனைத் திரும்பச் செலுத்த விஷாலுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ரூ. 21.29 கோடியில் ரூ. 15 கோடியை உயர்நீதிமன்றத்தில் விஷால் டெபாசிட் செய்ய உத்தரவிட்டிருந்தார். இந்தத் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தார் விஷால். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது உயர்நீதிமன்றம். 

இதையடுத்து பல கட்டங்களாக இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. கடந்த முறை நடந்த விசாரணையில், உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஆஷா, ரத்னம் படத்திற்காக விஷால் வழங்க வேண்டிய நிலுவை சம்பளமான ரூ.2. 60 கோடியை நீதிமன்றத்தில் செலுத்த, அந்த படத் தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்திற்கு உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து விஷால் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் சுந்தர் மற்றும் திலகவதி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், விஷாலின் மனுவிற்கு பதிலளிக்கும் படி லைகா நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளனர். மேலும் விசாரணையை வருகின்ற 3ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.