Skip to main content

'ராரா சரசக்கு ராரா...' - வெளியானது சந்திரமுகியின் லுக்

Published on 05/08/2023 | Edited on 05/08/2023

 

Chandramukhi 2 Kangana Ranaut first look

 

பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வருகிறது 'சந்திரமுகி 2' படம். இப்படத்தின் முக்கியக் கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத், வடிவேலு மற்றும் ராதிகா நடிக்கிறார்கள். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. 

 

இப்படத்தில் வேட்டையன் ராஜா கதாபாத்திரத்தில் நடித்துள்ள ராகவா லாரன்ஸின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. முதல் பாகத்தில் அக்கதாபாத்திரம் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், இரண்டாம் பாகத்திலும் அது தொடருமா என்ற எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது. 

 

இந்நிலையில் டைட்டில் ரோலான சந்திரமுகி கதாபாத்திரத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ளதாகக் கூறி அக்கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. முதல் பாகத்தில் சந்திரமுகியாக நடித்த ஜோதிகாவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. மேலும் தமிழ்நாடு மாநில விருது, அந்தாண்டிற்கான கலைமாமணி விருது ஜோதிகாவிற்கு வழங்கப்பட்டது. 

 

அதனால் அந்தக் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ள கங்கனா, ரசிகர்களைக் கவருவாரா என்பது படம் வெளியான பிறகே தெரியும். கங்கனாவின் போஸ்டரைப் பார்க்கையில் அந்த பரதநாட்டிய கலைஞருக்கான நளினத்துடன் நிற்கிறார். இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்தில் வருகிற விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாகவுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இளையராஜா பாடல்கள் நம்மை ஆட்டிப்படைக்கும்” - குஷ்பு

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
kushboo about ilaiyaraaja

பி.வாசு இயக்கத்தில் பிரபு, குஷ்பு உள்ளிட்டோர் நடிப்பில் 1991ஆம் ஆண்டு வெளியான படம் சின்னதம்பி. பாலு தயாரித்திருந்த இப்படத்தில் மனோரோமா, ராதா ரவி, கவுணடமணி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இயக்குநர் வாசுவின் மகன் சக்தியும் சின்ன வயது பிரபு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்த நிலையில் பாடல்கள் அனைத்தும் பெரும் வரவேற்பை பெற்றது. பாடல்களுக்கு வாலி மற்றும் கங்கை அமரன் வரிகள் எழுதியிருந்தனர். 

இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதால் கன்னடம், தெலுங்கு, இந்தி என அடுத்தடுத்து ரீமேக் செய்யப்பட்டது. கன்னடத்தில் தமிழில் வெளியான அதே ஆண்டில் ராமச்சாரி என்ற தலைப்பில் வெளியான நிலையில் ரவிச்சந்திரன் மற்றும் மாலாஸ்ரீ நடித்திருந்தனர். தெலுங்கில் சண்டி என்ற தலைப்பில் 1992ஆம் ஆண்டு வெளியான நிலையில் வெங்கடேஷ் மற்றும் மீனா நடித்திருந்தனர். இந்தியில் அனாரி என்ற தலைப்பில் 1993ஆம் ஆண்டு வெளியான நிலையில் தெலுங்கில் நடித்த வெங்கடேஷ் மற்றும் கரிஸ்மா கபூர் நடித்திருந்தனர்.  

கன்னடம் மற்றும் தெலுங்கில் பி.வாசு இயக்கியிருந்தார். இந்தியில் முரளி மோகன ராவ் இயக்கியிருந்தார். இசையில் தமிழை தவிர்த்து தெலுங்கில் மட்டும் இளையராஜா இசையமைத்திருந்தார்.   இந்த நிலையில் இப்படம் வெளியாகி இன்றுடன் 33 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையொட்டி நடிகை குஷ்பு, படம் குறித்து நெகிழ்ச்சியுடன் அவரது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அந்தப் பதிவில், “நேரம் பறக்கிறது எனச் சொல்வார்கள், அது உண்மைதான். தமிழக மக்களால் கொண்டாடப்பட்ட சின்னதம்பி இன்றுடன் வெளியாகி 33 ஆண்டுகள் ஆகிறது என்பதை நம்பவே முடியவில்லை. அந்தப் படம் எங்கள் வாழ்க்கையை மாற்றியது. 

எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர் பி.வாசு சார் மற்றும் எனக்கு பிடித்த சக நடிகர் பிரபு சார். மறைந்த கே.பாலு தயாரிப்பாளர் எப்போதும் நினைவில் இருப்பார். ஒளிப்பதிவாளர் ரவீந்தர், என்னுடன் நடித்த துணை நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. இறுதியாக மெஜிசியன் இளையராஜா, அவரது பாடல்கள் வாழ்நாள் முழுவதும் நம்மை ஆட்டிப்படைக்கும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

Next Story

“நான் பெருமைமிக்க இந்து” - மாட்டிறைச்சி சர்ச்சைக்கு கங்கனா விளக்கம்

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
kangana explained beaf issue

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 அன்று நடைபெறவுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றன. மேலும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த தேர்தலில் நடிகை கங்கனா ரணாவத் இமாச்சலப் பிரதேசம் மண்டி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடுகிறார். அதனால் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும், அவர் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். சமீபத்தில் “நமக்கு சுதந்திரம் கிடைத்தபோது நமது முதல் பிரதமர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் எங்கே போனார்?” என கேள்வி எழுப்பியது சர்ச்சையானது. 

இதைத் தொடர்ந்து தற்போது கங்கனா 2019ஆம் ஆண்டு பேசிய கருத்து தற்போது வைரலாகி சர்ச்சையைக் கிளப்பியது. காங்கிரஸ் தலைவர் விஜய் வாடேட்டிவார், இந்தப் பதிவை வெளியிட்ட நிலையில் அதில், “மாட்டிறைச்சி சாப்பிடுவதிலோ அல்லது வேறு எந்த இறைச்சி சாப்பிடுவதிலோ தவறில்லை. இது மதத்தைப் பற்றியது அல்ல” என பதிவிட்டிருந்தார். மேலும் “வீட்டை விட்டு வெளியேறிய போது மாட்டிறைச்சி சாப்பிடக் கூடாது என தாயார் தடை விதித்தார். ஆனால் அந்த மாட்டிறைச்சியில் என்னதான் இருக்கிறது என்பதற்காக நான் அதை சாப்பிட்டும் பார்த்தேன்” என கங்கனா பேசியிருந்ததாக கூறப்படுகிறது.  

இந்த நிலையில் இந்த கருத்து சர்ச்சையானது குறித்து விளக்கமளித்துள்ள கங்கனா, “நான் மாட்டிறைச்சி அல்லது வேறு எந்த இறைச்சியையும் சாப்பிடாத பெருமைமிக்க இந்து. நான் மாட்டிறைச்சி சாப்பிடுவதாக என்னைப் பற்றி ஆதாரமற்ற வதந்திகள் பரப்பப்படுகின்றன. நான் பல தசாப்தங்களாக யோக மற்றும் ஆயுர்வேத வாழ்க்கை முறையை ஆதரித்தும், ஊக்குவித்தும் வருகிறேன். அதனால் இது போன்ற யுக்திகள் என்னுடைய இமேஜை ஒன்னும் செய்யாது. என் மக்களுக்கு என்னைப் பற்றித் தெரியும். அவர்களை யாரும் தவறாக வழிநடத்த முடியாது” என அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.