ஆர்.கே.வி இயக்கத்தில் அறிமுக நடிகர் ஆகாஷ் பிரேம்குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கடைசி காதல் கதை'. இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், இயக்குநர் கே.பாக்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், சீனு ராமசாமி உள்ளிட்ட திரைத்துறை பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.
நிகழ்வில், நடிகர் சாம்ஸ் பேசுகையில், "இந்தப் படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்த வாய்ப்பைத் தந்த ஆர்.கே.வி சாருக்கும் தயாரிப்பாளருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆர்.கே.வி சார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கதைகள் வைத்துள்ளார். இவ்வளவு கதைகளை ஒரு இயக்குநர் வைத்துள்ளார் என்பது வியப்பாக உள்ளது. இரண்டு நாள் நீங்கள் நடிக்க வேண்டும் என்றார். ஆனால், முக்கியமான கதாபாத்திரம் என்றார். நான் சரி என்றவுடன் கதை சொல்லட்டுமா என்றார். கதை கேட்டால் நான் தூங்கிவிடுவேன் சார் என்றேன். எனக்கு இரண்டு நிமிடத்தில் கதையைக் கூறினார். நான் கதை கேட்டெல்லாம் நடிப்பதில்லை. முதலில் கதை கேட்டுத்தான் நடித்துக்கொண்டிருந்தேன். ஒருமுறை மனோபாலா சார்தான் கதையெல்லாம் கேட்டுவிட்டாடா நடிப்ப... சம்பளம் எவ்வளவு... எத்தனை நாள் தேதி வேணும்னு கேட்டோமோ நடித்து முடித்தோமான்னு இருக்கனும்டா. நீ கதை கேக்குறதுனால இரண்டு நாட்கள் படம் கூடுதலாக ஓடிவிடப்போகிறதா என்றார். அதில் இருந்து நான் கதை கேட்பதேயில்லை. காமெடி பண்ண வந்திருக்கோமா கல்லுடைக்க வந்திருக்கோமா என்று நினைக்கும் அளவிற்கு இயக்குநர் வேலை வாங்கினார். படம் மாபெரும் வெற்றிபெற என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்" எனக் கூறினார்.