/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/191_23.jpg)
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நான்காவது படமாக இன்று வெளியாகியுள்ள படம் வாழை. இப்படம் அவருடைய வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நான்கு சிறுவர்கள் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மாரி செல்வராஜ் மற்றும் அவரது மனைவி திவ்யா இருவரும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் நவ்வி ஸ்டூடியோஸ் இணைந்து வழங்கியுள்ளனர்.
இப்படத்திற்கு பாரதிராஜா, மணிரத்னம், வெற்றி மாறன், ராம், மிஷ்கின், நெல்சன், சிவகார்த்திகேயன், சிம்பு ஆகியோர் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் படக்குழுவினர் பாராட்டினர். இதையடுத்து சிறப்பு காட்சியை பார்த்த பாலா மனமுடைந்து மாரி செல்வராஜை கட்டியனைத்து முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்தினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து தனுஷ், கார்த்தி, லோகேஷ் கனகராஜ் என பல்வேறு பிரபலங்கள் தங்களது எக்ஸ் பக்கத்தின் வாயிலாக படக்குழுவை பாராட்டினர்.
இந்த நிலையில் இன்று படம் வெளியாகியுள்ள நிலையில் தனது சொந்த ஊரான திருநெல்வேலியில் மாரி செல்வராஜ் ரசிகர்களுடன் அமர்ந்து திரையரங்குகளில் படம் பார்த்தார். அப்போது அவரை தோழில் தூக்கி ரசிகர்கள் கொண்டாடினர். மேலும் திரையரங்கில் அவருக்குப் பேனர் வைக்கப்பட்டிருக்கிறது. இதனிடையே திரைப்படம் வெளியாவதை ஒட்டி மாரி செல்வராஜ் தனது எக்ஸ் பக்கத்தில், “வாழையில், என் வாழ்வின் உச்சபட்ச கண்ணீரையும், கதறலையும் ஒரு திரைக்கதையாக்கி அதை எளிய சினிமாவாக்கி உங்கள் முன் வைக்கிறேன். இனி உங்கள் முத்தத்திலும், அரவணைப்பிலும் கொஞ்சம் இளைப்பாறுவேன் என்று நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே கீர்த்தி சுரேஷ், “என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான நபர்களுக்கு இன்று ஒரு பெரிய நாள் வாழை படத்திற்காக மாரி செல்வரஜுக்கும் கொட்டுக்காளி படத்திற்காக சூரி அண்ணனுக்கும் பிரம்மாண்ட வெற்றி கிடைக்க வாழ்த்துகள்” எனத் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் பா.ரஞ்சித், “திரையில் அதிசயத்தை நிகழ்த்தி இருக்கிறாய் மாரி செல்வராஜ். உன் திரைமொழியில் நான் உருகிவிட்டேன். அத்துணை கலைஞர்களும் மிகச் சிறப்பாக இயங்கி இருக்கிறார்கள்! அனைவருக்கும் என் பேரன்பின் வாழ்த்துகள்! வாழை அற்புதம்” என அவரது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஏ.ஆர் ரஹ்மான், கார்த்திக் சுப்புராஜ், ஜி.வி. பிரகாஷ் எனப் பலரும் பாராட்டிப் பதிவிட்டுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)