
விக்ரம் தற்போது பா. ரஞ்சித் இயக்கும் தங்கலான் படத்தில் நடித்துள்ளார். ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் ஜி.வி. பிரகாஷ்குமார் இசையில் உருவாகும் இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இதையடுத்து சித்தா பட இயக்குநர் எஸ்.யு. அருண்குமாருடன் கூட்டணி வைத்துள்ளார். ரியா ஷிபு தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தின் அறிவிப்பு ஒரு ப்ரோமோ வீடியோவுடன் கடந்த அக்டோபரில் வெளியானது. அடுத்ததாக துஷாரா விஜயன், எஸ்.ஜே சூர்யா, சுராஜ் வெஞ்சாரமூடு உள்ளிட்டோர் இப்படத்தில் இனைந்துள்ளதாக அறிவிப்புகள் வெளியானது.
இதனைத் தொடர்ந்து கடந்த விக்ரம் பிறந்தநாளான 17ஆம் தேதி, விக்ரமிற்கு வாழ்த்து தெரிவித்து படத்தின் டைட்டில் டீசர் வெளியானது. ‘வீர தீர சூரன்’ என தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. மேலும் டீசரில் விக்ரம் துப்பாக்கியுடன் வரும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இதையடுத்து அதே நாளில் படத்தின் டைட்டில் அடங்கிய புதிய போஸ்டரும் வெளியிடப்பட்டது. அதில் விக்ரம் தனது இரு கைகளிலும் அறுவா வைத்திருக்கும்படி புகைப்படம் இடம்பெற்றிருந்தது.

இந்த நிலையில் அந்த போஸ்டரை சுட்டிக்காட்டி விக்ரம் மீது ஆன்லைன் வாயிலாக காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை சென்னை கொருக்குப்பேட்டையில் வசிக்கும் சமூக ஆர்வலர் ஆர்.டி.ஐ செல்வம் என்பவர் கொடுத்திருக்கும் நிலையில் அந்த புகாரில், “விக்ரமின் 'வீர தீர சூரன்' திரைப்படத்தின் போஸ்டரில் விக்ரம் அரிவாள்களுடன் இருப்பது போன்று காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. விக்ரம் இளைஞர்கள் மத்தியில் தவறான எண்ணத்தை கொண்டு செல்கிறார். அதனால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.