Skip to main content

ராக்கி பாய் ஆன ராகுல் காந்தி; கேஸ் போட்ட ஆடியோ நிறுவனம்

Published on 05/11/2022 | Edited on 05/11/2022

 

Case against Rahul Gandhi, others over use of KGF 2 songs in Bharat Jodo Yatra video

 

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி,  காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், தொண்டர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தவும் ‘பாரத் ஜோடோ யாத்ரா’ எனும் பெயரில் இந்தியா முழுவதும் பாதயாத்திரை நடத்தி வருகிறார். கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி, கன்னியாகுமரியில் தொடங்கிய இந்தப் பயணத்தை கேரளா, ஆந்திரா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து தற்போது தெலுங்கானா மாநிலத்தில் ராகுல்காந்தி நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

 

ad

 

இந்த நடைப்பயணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதள பக்கத்தில் தொடர்ந்து பகிரப்பட்டு வருகிறது. மேலும் அந்த வீடியோக்களில் சில திரைப்பட பாடல்கள் பின்னணியில் சேர்த்து எடிட் செய்தும் வெளியிட்டு வருகிறார்கள். அதில் ஒரு வீடியோவில் ராக்கி பாய் கதாபாத்திரத்தில் யஷ் நடித்து பிரபலமான 'கே.ஜி.எஃப் 2' படத்தின் பாடலைப் பயன்படுத்தியுள்ளனர்.  

 

இந்நிலையில், பெங்களூருவைச் சேர்ந்த 'எம்.ஆர்.டி' என்ற மியூசிக் நிறுவனம், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, சுப்ரியா ஸ்ரீநேட் மற்றும் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோரின் மீது காப்புரிமை மீறல் புகார் கொடுத்துள்ளது. அந்தப் புகாரில், "கே.ஜி.எஃப் 2 படத்தின் இந்தி பாடல்களை பெரும் தொகை கொடுத்து வாங்கியுள்ளோம். இந்தச் சூழலில் தங்களது அனுமதி பெறாமல் அந்த பாடல்கள் ராகுல் காந்தி நடைப்பயண வீடியோக்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளனர்.  

 

இந்தப் புகார் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மீதும், அந்த கட்சியைச் சார்ந்த மூன்று தலைவர்களின் மீதும், ஐ.பி.சி.யின் கீழ் மூன்று பிரிவுகளிலும், காப்புரிமைச் சட்டத்தின் கீழ் இரண்டு பிரிவுகளிலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பிரதமர் மோடி ஊழல் பள்ளியே நடத்தி வருகிறார்” - ராகுல் காந்தி தாக்கு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Rahul Gandhi says Prime Minister Modi is running a school of corruption

தேர்தல் பத்திர விவகாரத்தில் பிரதமர் மோடியை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். பிரதமர் மோடி ஊழல் பள்ளி நடத்தி வருவதாகவும் குறிப்பிட்ட ராகுல் காந்தி இது குறித்து அவர் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, “பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் 'ஊழல் பள்ளி' நடத்துகிறார். அங்கு ‘முழு ஊழல் அறிவியல்’ என்ற பாடத்தின் கீழ், அவரே  ‘நிதி வணிகம்’ உட்பட ஒவ்வொரு அத்தியாயத்தையும் விரிவாகக் கற்பிக்கிறார்.

சோதனை நடத்தி நன்கொடை வசூலிப்பது எப்படி?, நன்கொடைகளைப் பெற்ற பிறகு ஒப்பந்தங்கள் எவ்வாறு விநியோகிக்கப்படுகின்றன?, ஊழல்வாதிகளை சுத்தப்படுத்தும் வாஷிங் மெஷின் எப்படி வேலை செய்கிறது?, ஏஜென்சிகளை மீட்பு முகவர்களாக ஆக்கி ‘ஜாமீன் மற்றும் ஜெயில்’ விளையாட்டு எப்படி விளையாடுவது? என்பது குறித்து அவரே விரிவாக பாடம் கற்பிக்கிறார்.

ஊழல் குகையாக மாறியுள்ள பா.ஜ.க தலைவர்களுக்கு, இந்த பாடம் கட்டாயமாகியுள்ளது. இந்தியா கூட்டணி அரசு இந்த தேர்தலில் வெற்று பெற்று ஆட்சி அமைந்ததும், மோடியின் இந்த ஊழல் பள்ளியை பூட்டி இந்த படிப்பை நிரந்தரமாக மூடும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

அமேதி தொகுதியில் மீண்டும் போட்டி?; மெளனம் கலைத்த ராகுல் காந்தி

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Rahul Gandhi broke the silence and answered Re-contest in Amethi constituency?

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலுக்காக காங்கிரஸ், கம்யூனிஸ்டு மற்றும் பா.ஜ.க கட்சி வேட்பாளர்கள், வேட்புமனு தாக்கல் செய்தனர். அந்த வகையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளா மாநிலம், வயநாடு தொகுதியில் போட்டியிடுவதற்காக நேற்று (03-04-24) வேட்புமனு தாக்கல் செய்தார்.

ராகுல் காந்தி கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவாரா? என்று கேள்வி் பலரிடம் இருந்தும் எழுந்து வருகின்றது. அதே நேரத்தில், அமேதி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெயரை வெளியிடாமல் காங்கிரஸ் தொடர்ந்து மெளனம் காத்து வருகிறது. .

இதற்கிடையில், அமேதி தொகுதியில் போட்டியிட விரும்புவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா விருப்பம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி பதில் அளித்துள்ளார்.

உத்தரப் பிரதேசம் மாநிலம், காசியாபாத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மற்றும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூட்டாக சேர்ந்து நேற்று (17-04-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினர். அப்போது, ராகுல் காந்தியிடம், அமேதி தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி, “இது பாஜகவின் கேள்வி, மிகவும் நல்லது. கட்சித் தலைமையிடம் இருந்து எனக்கு எந்த உத்தரவு வந்தாலும் அதை நான் பின்பற்றுவேன். எங்கள் கட்சியில், இந்த வேட்பாளர்களின் தேர்வு முடிவுகள் அனைத்தும் காங்கிரஸ் தேர்தல் குழு கூட்டத்தில் எடுக்கப்படுகின்றன” என்று கூறினார்.

கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிட்டார். இதில், அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணியிடம் தோல்வி அடைந்தார். அதே நேரம் வயநாடு தொகுதியில் அதிகபட்ச வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.