இயக்குநரும், நடிகருமான வ. கௌதமன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘படையாண்ட மாவீரா’. இப்படத்தில் சமுத்திரக்கனி, பூஜிதா பொன்னாடா, இளவரசு, 'பாகுபலி' பிரபாகர், சரண்யா பொன்வண்ணன், 'ஆடுகளம்' நரேன், மன்சூர் அலிகான், ரெடின் கிங்ஸ்லி, மதுசூதன் ராவ், 'நிழல்கள்' ரவி , 'தலைவாசல்' விஜய், சாய் தீனா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் மற்றும் சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார்கள். மறைந்த பா.ம.க, காடுவெட்டி குருவின் சுயசரிதையை தழுவி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வி கே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் நிர்மல் சரவணனராஜ், எஸ். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.
இதனிடையே இப்படத்திற்கு எதிராக வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். அவர் கொடுத்த மனுவில், “படையாண்ட மாவீரா” என்ற படத்தின் போஸ்டர்கள் தமிழ்நாடு முழுவதும் ஒட்டப்பட்டுளளது. அதில் எனது கணவர் வீரப்பனை போல மீசை வைத்து நபர் உள்ளார். பார்ப்பதற்கு எனது கணவர் புகைப்படத்தையே சித்தரிக்கிறது.எனது கணவரின் படத்தை பயன்படுத்துவதற்கு முன்பு என்னிடம் சட்டப்படி அனுமதி பெற்று இருக்க வேண்டும். என்னிடம் அனுமதி பெறாமல் இந்தப் படத்தில் எனது கணவரை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டு இருக்கும் என்று கருதுகிறோம். இதனால், எனது கணவரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்தப் படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வரும் 26ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.