மலையாளம் மற்றும் இந்தியில் பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர் ஸ்வேதா மேனன். தமிழில் ‘சிநேகிதியே’, ‘நான் அவன் இல்லை 2’, ‘துணை முதல்வர்’, ‘இணையதளம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சிறப்பி தோற்றத்தில் ‘சந்தித்த வேளை’, ‘அரவான்’ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். 

இந்த நிலையில் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நிதி ஆதாயத்திற்காக ஆபாச காட்சிகள் மற்றும் விளம்பரங்களில் நடித்ததாகவும் அந்த படங்களை பிரபலமடைவதற்காக சமூக ஊடகங்கள் மற்றும் வலைதளங்களில் பரப்பப்பட்டுள்ளதாகவும் சமூக ஆர்வலரான மார்ட்டின் மெனச்சேரி, புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து எர்ணாகுளம் நீதிமன்ற நீதிபதி, புகார் குறித்து நடவடிக்கை எடுக்க காவல் துறையினருக்கு அறிவுறுத்தினார். அதன்படி எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஸ்வேதா மேனன் மீது சம்பந்தப்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு முதற்கட்ட விசாரணை தொடங்கியுள்ளது. 

இதனிடையே மலையாள நடிகர் சங்கமான அம்மா அமைப்பில் தேர்தல் வரும் 15ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இதில் தலைவர் பதவிக்கு ஸ்வேதா மேனன் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். அவருக்கு ஆதரவு பெருகி வருவதாக கூறப்படுகிறது. இவர் வெற்றிபெறும் பட்சத்தில் முதன் முறையாக ஒரு பெண் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்பார் எனப் பார்க்கப்பட்டது. முன்னதாக ஹேமா கமிட்டி அறிக்கை விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து, அம்மா அமைப்பின் பொறுப்பாளர்கள் அனைவரும் தங்களது பதிவிகளை ராஜினாமா செய்திருந்தனர். அதையடுத்து இந்த தேர்தல் நடக்கிறது. தலைவர் பதவிக்கு ஸ்வேத மேனனுக்கு போட்டியாக நடிகர் தேவன் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் ஸ்வேதா மேனன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது மலையாளத் திரையுலகில் பேசு பொருளாக மாறியுள்ளது.

இதனிடையே ஸ்வேதா மேனன், தன் மீது பதியப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி கேரள உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “சமுகத்தில் எனக்கு நல்ல பெயர் உண்டு. என் மீது சுமத்தப்பட்ட புகார் அபத்தமானது. ஆபாசமான கதாபாத்திரங்கள் என புகார் தாரர் கூறப்படும் ஒரு கதாபாத்திரம் கேரள மாநில விருதை வென்றது. அதே போல் மற்ற கதாபாத்திரங்களும் பொதுவெளியில் ஏற்றுக்கொள்ளப்பட்டு பாராட்டப்பட்டது. அது மட்டுமல்லாமல் அனைத்து படங்களும் மத்திய தணிக்கை வாரியத்தால் சான்றிதழ் பெறப்பட்டு பல ஆண்டுகளுக்கு முன்னால் வெளியிடப்பட்டு பொதுத்தளங்களில் இருந்து வருகிறது. அதனால் என் மீது தவறான நோக்கத்துடன் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Advertisment

நடிகர் சங்க தேர்தலில், வேட்பு மனு பெறுவதற்காக கடைசி நாளான ஜூலை 31ஆம் தேதி தான் புகார் சமர்ப்பிக்கப்பட்டது. சங்கத் தேர்தல் தொடர்பாக, ஒரு கோஷ்டி மோதல் நடந்து வருகிறது. இந்த தேர்தலில் நான் வெற்றி பெற்றால் நான் தான் முதல் பெண் தலைவராக இருப்பேன். அதை தடுக்கும் நோக்கத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.