தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் டிம்பிள் ஹயாதி. தமிழில் பிரபு தேவா நடித்த ‘தேவி 2’, விஷால் நடித்த ‘வீரமே வாகை சூடும்’ ஆகிய படங்களில் நடித்திருந்தார். அதே சமயம் இந்தியில் தனுஷ் நடித்த ‘அட்ராங்கி ரே’ படத்தில் நடித்திருந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த படங்களும் இவர் நடிப்பில் வெளியாகவில்லை.
இவர் அவரது கணவர் விக்டர் டேவிடுடன் ஹைதராபாத்தில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருகிறார். அந்த வீட்டில் 22வயதுடைய பிரியங்கா பிபர் என்ற ஒடிசாவை சேர்ந்த இளம்பெண் பணிப்பெண்ணாக இருக்கும் நிலையில் தற்போது நடிகை மீதும் அவரது கணவர் மீதும் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார். ஹைதராபாத்தில் உள்ள ஃபிலிம்நகர் காவல் நிலையத்தில் அவர் கொடுத்த புகாரில் “இருவரும் தன்னை ஆபாச வார்த்தைகளால் துன்புறுத்தினர். மேலும் சாப்பாடு போடாமல் பட்டினியாக்கி, என் உயிர் அவர்கள் அணியும் ஷூவுக்குக் கூட சமம் இல்லை என அவமானப்படுத்தினர். ஒரு நாள் அவர்கள் இப்படி செய்யும் செயலை செல்போனில் படம் பிடிக்க முயன்றபோது, ​​டேவிட் எனது செல்போனைப் பிடுங்கி, தரையில் தூக்கிப் போட்டு நொறுக்கி, என்னைத் தாக்க முயன்றார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது எனது ஆடை கிழியப்பட்டது. நான் நூலிழையில் தப்பித்து வந்தேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகார் தொடர்பாக காவல் துறையினர் நடிகை மற்றும் அவரது கணவர் இருவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பியுள்ளனர். ஏற்கனவே 2023ஆம் ஆண்டு ஒரு போலீஸ் அதிகாரி வாகனத்தை இருவரும் சேதப்படுத்திய வழக்கில் சிக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.