கரோனா வைரஸ் பரவல் தீவிரம் அடைந்திருப்பதைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் மே 3-ம் தேதி வரை தேசிய ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் வீட்டைவிட்டு மக்கள் யாரும் வெளியேறக்கூடாது என்று அறிவுருத்தப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவைகளின்றி வீட்டைவிட்டு வெளியேறுவோரைக் காவல்துறை கைது செய்து தண்டனைகள் வழங்கி வருகின்றனர்.
கரோனா வைரஸ் பரவலால் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர்கள் மக்களுக்காக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அயாராது உழைத்து வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வண்ணம் இந்தியத் தயாரிப்பாளர்கள் கில்ட், ஒரு முடிவு செய்துள்ளது.

அது என்ன என்றால், 22 முக்கியப் பகுதிகளில் பணியிலிருக்கும் காவல்துறையினருக்கு, முக்கியமாகப் பெண் காவல்துறையினருக்கு, படப்பிடிப்பில் நடிகர் நடிகைகள் பயன்படுத்தும், முழு வசதியுடன் கூடிய கூடாரங்களும், கேரவேன்களும் தரப்படும் என்று தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது. ஓய்வு நேரத்தில் இளைப்பாறவும் மற்றும் இயற்கை உபாதைகளுக்காகவும் இந்த கேரவன் வசதி செய்யப்படுகிறது.
முன்னதாகத் தினக்கூலி சினிமா பணியாளர்களுக்குப் பல்வேறு வகையில் உதவி செய்து வந்தது இந்தியத் தயாரிப்பாளர் கில்ட் என்பது குறிப்பிடத்தக்கது.