Skip to main content

கேன்ஸ் 2024; வரலாற்று சாதனை படைத்த இந்தியா - வாழ்த்திய பிரதமர் மோடி, ராகுல் காந்தி

Published on 27/05/2024 | Edited on 27/05/2024
cannes 2024 india make a history

உலகப் புகழ் பெற்ற 'கேன்ஸ் திரைப்பட விழா' பிரான்ஸ் நாட்டில் உள்ள கான் நகரில் 1946 முதல் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்தாண்டுக்கான கேன்ஸ் விழா கடந்த மே 14 முதல் மே 25 ஆம் தேவி வரை மொத்தம் 11 நாள் நடைபெற்றது. இதில்  வழக்கம் போல் பல்வேறு பிரிவுகளில் படங்கள் திரையிட்டு விருதுகளும் வழங்கப்பட்டன. 

அந்த வகையில் 7 இந்தியப் படங்கள் திரையிடப்பட்டது. இதில் மலையாளப் படமான ‘ஆல் வீ இமேஜின் அஸ் லைட்’ (All We Imagine as Light) மே 24 ஆம் தேதி திரையிடப்பட்டது. தொடர்ந்து 5 நிமிடங்களுக்கு மேல் இப்படத்திற்கு ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டினர். அதோடு தங்கப்பனை விருதுக்கு இப்படம் போட்டியிட்ட நிலையில் இந்தியா சார்பில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கப்பனை விருதுக்குப் போட்டியிட்ட முதல் திரைப்படம் என்ற பெயரை பெற்றது. ஆனால் விருது வாங்கவில்லை. இருப்பினும் அந்த விருதுக்கு அடுத்த உயரிய விருதாக பார்க்கப்படும்  ‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருது இந்த படத்துக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த விருதை வென்ற முதல் இந்திய திரைப்பட இயக்குநர் என்ற பெருமையை இப்படத்தின் இயக்குநர் பாயல் கபாடியா பெற்று வரலாற்று சாதனை படைத்தார். 

cannes 2024 india make a history

இதனிடையே கொல்கத்தாவைச் சேர்ந்த அனசுயா சென்குப்தா, நடித்த 'தி ஷேம்லெஸ்' படமும் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அந்த 7 திரைப்படங்களில் இதுவும் இன்று. இப்படத்திற்காக அனசுயா சென்குப்தா ‘அன் செர்டெய்ன் ரிகார்ட்’ பிரிவின் கீழ் சிறந்த நடிகைக்கான விருதை வென்றார். இதன் மூலம் இந்தப் பிரிவில் விருது பெற்ற முதல் இந்திய நடிகை என்ற பெருமையை அனசுயா சென்குப்தா பெற்று சாதனை படைத்தார். 

cannes 2024 india make a history

அடுத்ததாக 1976ல் வெளியான இந்தியாவின் முதல் கிரவுட் ஃப்ண்ட் திரைப்படமான ‘மந்தன்’ திரைப்படம் புதுப்பொலிவுடன் (Restored version) கேன்ஸ் கிளாசிக்ஸ் என்ற பிரிவின் கீழ் திரையிடப்பட்டது. ஐந்து நிமிட ரசிகர்களின் கைதட்டல் இப்படத்திற்கு கிடைத்தது. அடுத்ததாக மேலும் ஒளிப்பதிவாளர்களைக் கௌரவிக்கும் விதமாகக் கொடுக்கப்படும் பியர் ஆசிங்யு (Pierre Angénieux) விருது, இந்தாண்டு சந்தோஷ் சிவனுக்கு வழங்கப்பட்டது. திரைத்துறையில் அவரது பங்களிப்பை பாராட்டி அந்த விருது வழங்கப்பட்டது. இதற்கிடையே இந்த விழாவில் புனேவைச் சேர்ந்த பிலிம் அண்ட் டெலிவிஷன் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா மாணவர்கள் தயாரித்த 'சன்பிளவர்ஸ்' என்ற குறும்படம் லா சினிஃப் என்ற பிரிவில் விருது வென்றது. 

cannes 2024 india make a history

அடுத்ததாக தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் ஸ்ரீ சஞ்சய் ஜாஜு, இந்திய கலாச்சாரம், உணவு வகைகள், கைவினைப்பொருட்கள் மற்றும் சினிமாவின் கொண்டாட்டமான பாரத் பர்வாவை முதன்முதலில் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்வை இந்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் FICCI உடன் இணைந்து NFDC ஏற்பாடு செய்தது. இதன் மூலம் 77வது கேன்ஸ் திரைப்பட விழாவில் பலரது கவனம் பெற்று முக்கிய பங்கு வகித்தது இந்தியா சினிமா. இதனால் பலரும் தங்களது பாராட்டுக்களை விருது வென்ற படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் பிரதமர் மோடி, தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில், “77வது கான் சர்வதேச திரைப்பட விழாவில் பாயல் கபாடியாவின் ‘ஆல் வீ இமேஜின் அஸ் லைட்' படைப்பு கிராண்ட் பிரிக்ஸ் விருது வென்ற வரலாற்று சாதனைக்காக இந்தியா பெருமை கொள்கிறது. இந்திய திரைப்படக் கல்லூரியின் முன்னாள் மாணவரின் திறமை உலக அரங்கில் பிரகாசிக்கிறது. இந்திய படைப்பாற்றலின் பார்வையை உலகுக்கு பறைசாற்றுகிறது. இந்த மதிப்புமிக்க பாராட்டு அவரது திறமைகளை கவுரவிப்பதோடு மட்டுமல்லாமல், புதிய தலைமுறை இந்திய திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும் ஊக்கம் அளிக்கும்” என குறிப்பிட்டுள்ளார். 

மேலும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “77வது கான் சர்வதேச திரைப்பட விழாவில் பிரகாசிக்கும் இந்திய நட்சத்திரங்கள். மதிப்புமிக்க கிராண்ட் பிரிக்ஸ் விருதை வென்றதற்காக பாயல் கபாடியா மற்றும் 'ஆல் வி இமேஜின் அஸ் லைட்' படத்தின் ஒட்டுமொத்த குழுவுக்கும் எனது வாழ்த்துக்கள்” என அவரது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

மோசடியில் மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் ; போலீஸ் அறிக்கையில் அதிர்ச்சி!

Published on 29/05/2024 | Edited on 29/05/2024
manjummel boys producers fraud case update

இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியான மலையாளப் படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. பரவா பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியிருந்த இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்திருந்தார். இப்படம் கொடைக்கானலில் நடந்த உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டிருந்தது. 2006 ஆம் ஆண்டு கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் கேரள இளைஞர்கள், ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கி அதிலிருந்து எப்படி மீள்கின்றனர் என்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது.

சர்வைவல் த்ரில்லர் ஜானரில் வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழிலும் ரசிகர்கள் பாராட்டி வந்தனர். குணா குகையில் நடக்கும் கதை என்பதால் கமல் நடித்த குணா பட பாடலான ‘கண்மணி அன்போடு காதலன்...’ பாடலை முக்கியமான இடத்தில் பயன்படுத்தியிருந்தது படக்குழு. இப்படம் உலகம் முழுவதும் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்து மலையாள திரையுலகில் ரூ.200 கோடி கிளப்பில் இணைந்த முதல் படம் என்ற சாதனையை படைத்தது. இதனிடையே கேரளா அரூர் பகுதியைச் சேர்ந்த சிராஜ் என்பவர் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான பரவா பிலிம்ஸ் பங்குதாரர் ஷான் ஆண்டனி, லாபத்தில் பங்கு தருவதாக கூறி ஏமாற்றி விட்டதாக எர்ணாகுளம் கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “ மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்காக ரூ.7 கோடியை முதலீடு செய்தேன். பட தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரர் ஷான் ஆண்டனி லாபத்தில் 40 சதவீதம் பங்கு தருவதாக கூறியிருந்தார். ஆனால் இதுவரை எனக்கு ஒரு ரூபாய் கூட பணம் தரவில்லை. லாபம் மட்டும் இல்லாமல் முதலீடு செய்த பணத்தை கூட திருப்பி தரவில்லை” என குற்றம் சாட்டியிருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்தின் தயாரிப்பாளர்களான சவுபின் ஷாஹிர், ஷான் ஆண்டனி, பாபு ஷாஹிர் ஆகியோரின் வங்கிக் கணக்கை முடக்க உத்தரவிட்டது. மேலும் தயாரிப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த காவல்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய காவல் துறையினர், நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். அதில், தயாரிப்பாளர்கள் முன்கூட்டியே இந்த மோசடி செய்ய திட்டமிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் “படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக மனு தாரரிடம் தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர். படத்தின் பட்ஜெட் ரூ. 18.65 கோடி மட்டுமே. ஆனால், ரூ. 22 கோடி என தயாரிப்பாளர்கள் பொய் சொல்லியுள்ளனர். மனு தாரர் குறிப்பிட்டது போல தயாரிப்பு நிறுவனம் பணத்தை மனுதாரருக்கு திரும்ப கொடுக்கவில்லை” என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே தயாரிப்பாளர்களை கைது செய்ய உயர்நீதிமன்றம் தற்காலிக தடை விதித்ததுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

கேன்ஸ் 2024; பாலஸ்தீனத்திற்கு நடிகை ஆதரவு; விருது வென்ற குறும்படம்

Published on 25/05/2024 | Edited on 25/05/2024
cannes 2024 actress kani kusruti support palestine

உலகப் புகழ் பெற்ற 'கேன்ஸ் திரைப்பட விழா' பிரான்ஸ் நாட்டில் உள்ள கான் நகரில் 1946 முதல் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்தாண்டுக்கான கேன்ஸ் விழா கடந்த மே 14 முதல் தொடங்கி இன்றுடன் (25 ஆம் தேதி) முடிவடைகிறது. இதில் பல்வேறு பிரிவுகளில் படங்கள் திரையிட்டும் விருதுகளும் வழங்கப்பட்டு வருகின்றன. 

அந்த வகையில் ஒளிப்பதிவாளர்களைக் கௌரவிக்கும் விதமாகக் கொடுக்கப்படும் பியர் ஆசிங்யு (Pierre Angénieux) விருது, இந்தாண்டு சந்தோஷ் சிவனுக்கு வழங்கப்படுகிறது. மேலும் இதில் 7 இந்தியப் படங்கள் திரையிடப்பட்டது. மேலும் 'லெட்ஸ் ஸ்பூக் கேன்ஸ்' என்ற பிரிவில் வர்ஷா பொல்லம்மா நடித்த இருவம் திரைப்படமும் திரையிடப்படுகிறது. 

இந்த நிலையில் திரையிடத் தேர்வான 7 இந்தியத் திரைப்படங்களில் மலையாளப் படமான ‘ஆல் வீ இமேஜின் அஸ் லைட்’ (All We Imagine as Light) நேற்று திரையிடப்பட்டது. இந்த படத்திற்கு அங்கிருந்த ரசிகர்கள் சில நிமிடங்கள் எழுந்து நின்று கைதட்டி பாராட்டினர். அப்போது அதில் கலந்து கொள்வதற்காக வந்த நடிகை கனி குஸ்ருதி தன்னுடைய கையில் ‘தர்பூசணி’ வடிவத்தில் கைப்பை ஒன்றை வைத்திருந்தார். இது பலரது கவனத்தை ஈர்த்தது. அந்த தர்பூசனியின் நிறம் பாலஸ்தீனத்தின் கொடியைப் பிரதிபலிக்கிறது. மேலும் அவர் இஸ்ரேல் - பாலஸ்தீன போரில் தன்னுடைய ஆதரவு பாலஸ்தீனத்திற்கு தான் என்பதைக் குறியீடாக சொல்லியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

cannes 2024 actress kani kusruti support palestine

இதனிடையே கொல்கத்தாவைச் சேர்ந்த அனசுயா சென்குப்தா, நடித்த 'தி ஷேம்லெஸ்' படமும் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அந்த 7 திரைப்படங்களில் இதுவும் இன்று. இப்படத்திற்காக அனசுயா சென்குப்தா சிறந்த நடிகை என்ற பிரிவில் விருது வென்றுள்ளார். இதன் மூலம் இந்தப் பிரிவில் விருது பெற்ற முதல் இந்திய நடிகை என்ற பெருமையை அனசுயா சென்குப்தா பெற்றுள்ளார். இதற்கிடையே இந்த விழாவில் புனேவைச் சேர்ந்த பிலிம் அண்ட் டெலிவிஷன் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா மாணவர்கள் தயாரித்த 'சன்பிளவர்ஸ்' என்ற குறும்படம் லா சினிஃப் என்ற பிரிவில் விருது வென்றுள்ளது.