மின்னலே படம் மூலம் அறிமுகமாகி மஜ்னு, சாமி, கோவில் என பல்வேறு படங்களுக்கு ஹிட் ஆல்பம் கொடுத்தவர் ஹாரிஸ் ஜெயராஜ். கமல், விஜய், அஜித், சூர்யா என பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்தவர் ஒரு கட்டத்தில் குறைவான படங்களுக்கு இசையமைத்து வந்தார். 

இப்போது மீண்டும் பழையபடி பிஸியாக ஆரம்பித்திருக்கிறார். கடைசியாக ரவி மோகன் நடித்த பிரதர் படத்திற்கு இசையமைத்திருந்தார். சினிமாவைத் தவிர்த்து இசை நிகழ்ச்சிகளையும் அவ்வப்போது நடத்தி வருகிறார். அந்த வகையில் ‘ஹாரிஸ் வித் லவ்’ என்ற பெயரில் சமீபத்தில் கனடா நாட்டில் உள்ள டொரோண்டோவில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்தியிருந்தார். இதில் 15 பாடகர்கள் கலந்து கொண்டு பாடியிருந்தனர். இந்த நிகழ்ச்சிக்கு அங்கிருந்த ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. 

இந்த நிலையில் கனடா அரசு ஹாரிஸ் ஜெயராஜுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவித்துள்ளது. இந்த சான்றிதழை அந்த நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி, வழங்கியுள்ளார். அந்த சான்றிதழில், “ஒரு இசையமைப்பாளராக உங்கள் அசாதாரண திறமை உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களின் மனங்களை வென்றுள்ளது. நீங்கள் இசையமைத்த மறக்க முடியாத மெலோடிகள் மற்றும் புதுமையான பாடல்கள் மூலம், தமிழ் இசையை உலகளவில் உயர்த்தியுள்ளீர்கள், மேலும் புதிய தலைமுறை கலைஞர்களுக்கு உத்வேகம் அளித்துள்ளீர்கள். 

07

Advertisment

டொராண்டோவில் உங்களின் வருகை இசையின் கொண்டாட்டம் மட்டுமல்ல, நமது பன்முகத்தன்மை கொண்ட சமூகத்திற்கு பெருமையான மற்றும் ஒற்றுமைக்கான தருணமாகும். உங்கள் கலை மூலம் நீங்கள் கொண்டு வந்த மகிழ்ச்சி, உணர்ச்சி மற்றும் கலாச்சார செழுமைக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சான்றிதழை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் பகிர்ந்து கனடா நாட்டிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.