Advertisment

"வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தால்தான் பாக்ஸர்கள் ரௌடியாக மாறுகிறார்கள்..." பாக்ஸிங் கோச் மதி பேட்டி!

Coach Mathi

Advertisment

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான 'சார்பட்டா பரம்பரை' திரைப்படம் சமீபத்தில் வெளியானது. வடசென்னை மக்களிடையே பிரபலமாக இருந்த குத்துச்சண்டை விளையாட்டை மையமாக வைத்து உருவான இத்திரைப்படம் வெளியான பிறகு, பாக்ஸிங் விளையாட்டு பேசுபொருளாகியுள்ளது. இந்தச் சூழலில், பாக்ஸிங் கோச் மதியோடு நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் உரையாடினோம். அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...

நான் ஸ்கூல் படிக்கும்போது ஒரு பையன் என்னை அடிச்சிட்டான். அந்தப் பையனை திருப்பி அடிக்கவேண்டும் என்பதற்காகவே பாக்ஸிங் கத்துக்க ஆரம்பிச்சேன். பாக்ஸிங் கத்துக்க ஆரம்பிச்ச பிறகு அந்த எண்ணமே எனக்கு மாறிருச்சு. "பாக்ஸிங் என்பது ஒரு விளையாட்டு. இதை விளையாட்டாக மட்டுமே பயன்படுத்த வேண்டும். தற்காப்பிற்காக தேவைப்பட்டால் பயன்படுத்தலாம். தேவையில்லாம ரோட்டுல சண்டை போடக்கூடாது" என என்னுடைய கோச் தொடர்ந்து கூறுவார். பாக்ஸிங்ல எனக்கு 14 வருஷ அனுபவம் இருக்கு. இதுவரை தேவையில்லாமல் சண்டை போட்டதில்லை. என்னை ஸ்கூல்ல அடிச்சவனையும் திருப்பி அடிக்கவில்லை. பத்துமுறை ஸ்டேட் லெவல்ல மெடல் அடிச்சிருக்கேன். ஆறுமுறை ஓப்பன் ஸ்டேட் லெவல்ல மெடல் அடிச்சிருக்கேன். நேஷனல் ஆறுமுறை விளையாடியிருக்கேன். ஆர்மில அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி கொஞ்ச நாள்ல அங்க இருந்து ரிசைன் பண்ணிட்டு வந்துட்டேன்.

கஷ்டப்படுற ஏழை குழந்தைகள்தான் அதிகம் பாக்ஸிங் விளையாடுறாங்க. பாக்ஸர்களுக்கு பெரிய அளவில் ஸ்பான்சரும் கிடைப்பதில்லை. இருந்தாலும் நிறைய பாக்ஸர்கள் உருவாகிட்டுதான் இருக்காங்க. நிறைய கோச்சிங் செண்டர்ஸ் வந்துருச்சு. இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா விழிப்புணர்வு வந்துக்கிட்டு இருக்கு. இந்த வருஷ ஒலிம்பிக்ல மொத்தமா 8 வீரர்கள்தான் தமிழ்நாட்டுல இருந்து களமிறங்குறாங்க. அதில் ஒருவர்கூட பாக்ஸர் கிடையாது. அரசு சார்பிலும் பெரிய அளவில் உதவி கிடைப்பதில்லை. பாக்ஸர்களுக்கு நிறைய வேலைவாய்ப்புகளும் கிடையாது. வேலைவாய்ப்புகள் இல்லாததால்தான் நிறைய பாக்ஸர்கள் ரௌடியாக மாறியுள்ளனர். எனக்கும்கூட அதற்கான சந்தர்ப்பங்கள் இருந்துச்சு. என்னோட அப்பா, அம்மா நல்லபடியாக வழிகாட்டியதால் நான் அந்தமாதிரி போகல. பாக்ஸர்களுக்கு போலீஸ் மற்றும் ஆர்மீல மட்டும்தான் வேலைவாய்ப்பு இருக்கு.

Advertisment

இங்க இருக்கிற அசோஸியேஷன்ஸே இரண்டா பிரிச்சிருக்கு. அவங்களுக்கு இருக்கிற கௌரவ பிரச்சனைக்கு இடையில பாக்ஸிங் மாட்டிக்கிட்டு இருக்கு. சர்பட்டா பரம்பரை படத்தில் காட்டியிருப்பதுபோல ஒரு காலத்தில் பாக்ஸிங் இங்கு பெரிய அளவில் பிரபலமாக இருந்துள்ளது. முகமது அலியே சென்னை வந்து இங்கு நடக்கிற பாக்ஸிங் போட்டியை நேரில் பார்த்துள்ளார். அவர் மாதிரியான பல வெளிநாட்டு பாக்ஸர்கள் இங்கு நடக்கிற போட்டியை பார்ப்பதற்காக நேரில் வந்துள்ளனர். மதிவாணன் என்று ஒரு கோச் சென்னையில் உள்ளார். அவரிடம் உள்ள ஒரு போட்டோவில் முகமது அலி அவர் தோளில் கைபோட்டு நின்றுகொண்டிருப்பார். பாக்ஸிங் கடவுள்னு சொல்லப்படுகிற ஒருவர் இங்கு நடக்குற போட்டியை பார்ப்பதற்காக நேரில் வந்திருக்கிறார் என்றால் அது நமக்கு ரொம்ப பெருமையான விஷயம். இந்த சர்பட்டா பரம்பரை திரைப்படம் பாக்ஸிங் தொடர்பாக நிறைய விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe