
இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடந்த வாக்கு எண்ணிக்கை நேற்று எண்ணப்பட்டு முடிந்தது. மொத்தம் 543 மக்களவைத் தொகுதிகள் இருக்கும் நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும் இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இதில் பா.ஜ.க, தனித்து 240 இடங்களையும் காங்கிரஸ் 99 இடங்களையும் கைப்பற்றியது. ஆட்சி அமைக்கத் தேவையான 272 தொகுதிகளை எந்த கட்சியும் தனித்துப் பெறாததால் கூட்டணி ஆட்சி அமையும் சூழ்நிலை நிலவுகிறது. அதனடிப்படையில் அதிக தொகுதிகளை வென்ற பா.ஜ.க. கூட்டணி கட்சியுடன் ஆட்சியை அமைக்க உள்ளது.
இதனிடையே ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் தேர்தலை சந்தித்தது. ஆந்திராவில் மொத்தம் 25 மக்களவை தொகுதிகள் இருக்கும் நிலையில் அதில் 17 தொகுதிகளில் போட்டியிட்டு 16 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். அதே சமயம் ஆந்திராவில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவும் நடைபெற்று அதன் முடிவுகளும் நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது.
இந்த நிலையில் டெல்லியில் இன்று நடக்கும் பாஜக தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் சந்திரபாபுவின் தெலுங்கு தேசம் கட்சி பங்கேற்கிறது. இந்த நிலையில் சந்திரபாபு நாயுடுவிற்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்பட பல அரசியல் தலைவர்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மேலும் சந்திரபாபு நாயுடு தொடர்பான பல்வேறு நிகழ்வுகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் மற்றும் இயக்குநர் போஸ் வெங்கட், அவரது எக்ஸ் பக்கத்தில், “இன்று கற்றுக்கொண்ட அரசியல் பாடம். எட்டு மாதங்கள் முன் பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி சென்றார் சந்திரபாபுநாயுடு. அவரை சந்தித்து தன் ஆதரவை தெரிவிப்பதுதான் திட்டம். கடைசி வரை பிரதமரை சந்திக்க அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்கவில்லை.
ஏமாற்றுத்துடன் திரும்பினார் !அரசியல் பின்னடைவுகள் தோல்வி அதனால் கிடைத்த அவமானங்கள், புறக்கணிப்புகள்! கடைசி நேரத்தில் கூட சிறை. இன்று முதல்வர்! ஒரு நாட்டின் பிரதமரை தேர்ந்தெடுக்கப்போகும் அளவுக்கு முக்கியமானவர். தற்போது இவரின் வருகைக்காக டெல்லி பிரதமர் அலுவலகம் காத்துக்கொண்டு இருக்கிறது. எந்த பிரதமர் சந்திக்காமல் புறக்கணித்தாரோ இன்று காலையில் அவர் வலிய போனில் பேசுகிறார். கர்நாடக முதல்வர் பேசுகிறார், தேசியவாத காங்கிரஸ் தலைவர் பேசுகிறார். காலம் எப்போதும் ஒருவருக்கானதல்ல! எல்லோருக்குமானது! அதனால் நீங்களும் எப்போதும் மனம் தளராதீர்கள்” என்ற பதிவை பகிர்ந்துள்ளார்.
pic.twitter.com/nZKdz1dLV7— Bose Venkat (@DirectorBose) June 5, 2024