'வலிமை' ஃபர்ஸ்ட் லுக்... அதிகாரப்பூர்வமாக அறிவித்த போனி கபூர்!

Boney Kapoor

இயக்குநர் எச்.வினோத் வினோத் இயக்கத்தில், நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'வலிமை'. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, போனி கபூர் தயாரிக்கிறார். படத்தின் பணிகள் கடந்த 2019-ஆம் ஆண்டே தொடங்கிய நிலையில், கரோனா பரவல் காரணமாகப் பாதியில் தடைப்பட்டன. கரோனா நெருக்கடி நிலை சற்று தளர்ந்ததும், மீண்டும் படத்தின் பணிகளைத் தொடங்கிய படக்குழு, தற்போது படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறது. பிற நடிகர்களின் படம் குறித்த அப்டேட் வெளியாகும்போது, ‘வலிமை’ அப்டேட் குறித்து தயாரிப்பாளர் போனி கபூரிடம் அஜித் ரசிகர்கள் கேள்வியெழுப்பவது வழக்கம். ஆனால், தயாரிப்பு தரப்பு படம் குறித்த எந்த அப்டேட்டையும் வெளியிடாமல் தொடர்ந்து மௌனம் காத்து வந்தது. இது, அஜித் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், அஜித் ரசிகர்களின் தொடர் கோரிக்கைகளுக்குப் பிறகு, ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "வணக்கம். ‘வலிமை’ படத்தின் மீது நீங்கள் காட்டும் அன்பு நெகிழ்ச்சியடைய வைக்கிறது. கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விரைவில் வெளியிடுவதை நோக்கி பணியாற்றி வருகிறோம். இது படத்தின் நன்மைக்காகத்தான்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

போனி கபூரின் இப்பதிவைக் கண்டு உற்சாகமான அஜித் ரசிகர்கள், இத்தகவலை சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

ajith Boney kapoor valimai
இதையும் படியுங்கள்
Subscribe