பாலிவுட்டில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வருபவர் போனி கபூர். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரான இவர் கடைசியாக அஜய் தேவ்கன் நடித்த மைதான் இந்தி படத்தை தயாரித்திருந்தார். இதையடுத்து இன்னும் அவர் தயாரிக்கும் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
தமிழில் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படம் மூலம் அறிமுகமானார். பின்பு அஜித்தை வைத்து வலிமை, துணிவு உள்ளிட்ட படங்களையும் தயாரித்திருந்தார். இதனிடையே உதயநிதி நடித்த நெஞ்சுக்கு நீதி, ஆர்.ஜே. பாலாஜி நடித்த வீட்ல விசேஷம் ஆகிய படங்களையும் தயாரித்திருந்தார். கடைசியாக அஜித்தை வைத்து துணிவு படத்தை தயாரித்திருந்தார்.
இந்த நிலையில் போனி கபூர் ஜிம்முக்கு போகாமலேயே 26 கிலோ உடல் எடையைக் குறைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர் சத்துள்ள உணவு வகைகளை மட்டும் சாப்பிட்டு மற்றும் கடுமையான டயட் பழக்கத்தை பின்பற்றி இந்த எடை குறைப்பு செய்ததாகவும் கூறப்படுகிறது. அதோடு வாழ்க்கை முறையிலும் சில மாற்றங்களை அவர் செய்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனிடையே போனி கபூரின் புதிய புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
போனி கபூர் உடல் எடையை குறைப்பது இது முதல் முறை அல்ல. கடந்த 2019ஆம் ஆண்டு 12 கிலோவும் 2024ஆம் ஆண்டும் ஆண்டு 14 கிலோவும் எடை குறைத்திருந்தார். ஆனால் அப்போது அவர் டயட் மற்றும் சத்துணவைத் தாண்டி ஜிம்மிற்கும் சென்றதாகக் கூறப்படுகிறது.