உத்தரப் பிரேதசம், மொரதாபாத் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் நேற்று முன்தினம் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழந்தவரின் குடும்பத்தை வேறு பகுதிக்குத் தனிமைப்படுத்த மருத்துவப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர். அவர்களை ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றியபோது அப்பகுதி மக்கள், மருத்துவர்கள் மீது கற்களை வீசி தாக்கியுள்ளனர். பாதுகாப்பிற்காக மருத்துவர்களுடன் சென்ற போலீஸாரையும் தாக்கியுள்ளனர். இதனையடுத்து இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து கல்வீச்சில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தி கலைத்தனர்.

இச்சம்பவத்திற்குப் பிரபலங்கள் பலர் தங்களின் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். அதேபோல நடிகர் அனுபம் கர் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டரில், “சில மக்கள் மருத்துவர்களைத் தாக்குவதைப் பார்த்தபின் எனக்குச் சோகமும் அதே நேரத்தில் கடும் கோபமும் ஏற்படுகிறது. நமது உயிரைக் காப்பவர்களின் உயிருக்கு நாம் எப்படி அச்சுறுத்தல் ஏற்படுத்தலாம்?
மொரதாபாத் மருத்துவர்களின் முகம் முழுவதும் இரத்தமாக இருப்பதைப் பார்க்கும்போது மனம் மிகவும் வலிக்கிறது. இந்த விவகாரம் குறித்து சிலர் வாய்மூடி மவுனமாக இருப்பது அதைவிட அதிக வலியைத் தருகிறது” என்று பதிவிட்டுள்ளார்.