Advertisment

களம் கண்ட அரக்கோணம் அணி; ஆட்ட நாயகன் விருது வென்றதா? - ‘ப்ளூ ஸ்டார்’ விமர்சனம்

blue star movie review

தமிழ் சினிமாவில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு கிரிக்கெட் படம் வெளியாகி இருக்கிறது. இந்த முறை டென்னிஸ் பந்து கிரிக்கெட் இல்லாமல் கார்க் பந்து கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி இருக்கும் ப்ளூ ஸ்டார் திரைப்படம் எந்த அளவு ரசிகர்களை கவர்ந்துள்ளது?

Advertisment

சென்னையை அடுத்த அரக்கோணம் பகுதியில் ஊர் சார்பாக மேல் தட்டு சாதியினர் அங்கம் வகிக்கும் ஆல்ஃபா கிரிக்கெட் டீம் சாந்தனு கட்டுப்பாட்டில் இருக்கிறது. அதே ஊரின் பட்டியல் இனத்தைச் சேர்ந்தஇளைஞர்களின் ப்ளூ ஸ்டார் கிரிக்கெட் டீம் அசோக் செல்வன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்த இரு அணிகளுக்கும் அசோக் செல்வன் மற்றும் சாந்தனு ஆகியோர் கேப்டனாக இருந்து அணியை வழி நடத்துகின்றனர். இவர்களும் இந்த இரு அணியை சேர்ந்த நபர்களும் ஊரில் பார்க்கும் இடங்களில் எல்லாம் அவ்வப்போது விளையாட்டு ரீதியாகவும், சாதிய ரீதியாகவும் மோதிக் கொள்கின்றனர். இது ஒரு புறம் இருக்க, இவர்களுக்கு லீக் போட்டிகளில் விளையாடும் ப்ரொபஷனல் கிரிக்கெட் அணி உடன் மோதல் ஏற்படுகிறது. இந்த மோதலில் யார் வெற்றி பெற்றார்கள்? இவர்கள் இரு அணிகளில் இருக்கும் பிரிவினை என்னவானது? என்பதே இப்படத்தின் மீதி கதை.

Advertisment

தமிழ் சினிமாவில் முதன் முறையாக ஒரு முழு நீளகார்க் பால் கிரிக்கெட் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. அந்த ஊரில் நிகழ்த்தப்படும்சாதிய ஒடுக்குமுறைகளும், அவை கிரிக்கெட் மைதானங்களில் பிரதிபலிப்பதையும் நேர்த்தியான திரைக்கதை மூலம் ஆழமான காட்சி அமைப்புகள் மூலம் காட்டியிருப்பது படத்திற்கு உயிரூட்டி இருக்கிறது. குறிப்பாக 90களின் காலகட்டத்தில் வரும் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட முக்கிய நிகழ்வுகளையும் முக்கிய பிளேயர்களின் விஷயங்களையும் ஆங்காங்கே பன்னீர் தெளிப்பது போல் தெளித்து கிரிக்கெட் தெரிந்த ரசிகர்களுக்கும், கிரிக்கெட் தெரியாத ரசிகர்களுக்கும் ரசிக்கும் படியான பல்வேறு காட்சிகளை பயன்படுத்தி படத்தை சிறப்பாக காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குநர் ஜெயக்குமார். படத்தின் முதல் பாதியைக் காட்டிலும் இரண்டாம் பாதி முழுவதும் பெரும்பாலும் மைதானங்களில் படம் நகர்ந்தாலும் அதனுள் ரசிக்கும்படியான உணர்ச்சிப்பூர்வமான நட்பு, காதல், விளையாட்டு, போட்டி எனச் சிறப்பாக திரைக்கதையை உருவாக்கி ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஜெயக்குமார்.

இன்னும் குறிப்பாக படத்தில் புல்லட் பாபுவாக நடித்திருக்கும் ஒரு கதாபாத்திரம் இந்தியாவில் எவ்வளவு தான் சிறப்பாக விளையாடினாலும் தன்னை சாதி ரீதியாகவே பார்த்து இந்திய அணியில் சேர்க்கமாட்டார்கள் எனவே நான் மேற்கிந்திய தீவுகளில் விளையாட செல்கின்றேன் என முகத்தில் பளார் என்று அறைவது போல் சாதிய பிரச்சனையை போகிற போக்கில் சொல்லி தியேட்டரில் கலகலப்பையும், கைதட்டல்களையும் பெற்றுவிட்டு செல்லும் ஒரு கதாபாத்திரம் அமைத்து, அதன் மூலம் இப்படத்தில் ஒட்டுமொத்த அரசியல் கருத்தையும் அந்த ஒரே கதாபாத்திரத்தின் மூலம் கொடுத்து ப்ளூ ஸ்டார் படத்தையும் கரை சேர்த்திருக்கிறார்கள். இவர் மூலம் காட்சிப்படுத்தி இருக்கும் மெசேஜ் ஒட்டுமொத்த படத்திற்கான மெசேஜாக அமைந்திருக்கிறது.

படத்தின் நாயகர்கள் அசோக் செல்வன் மற்றும் சாந்தனு ஆகியோர் கதாபாத்திரத்திற்கு ஏற்றார்போல் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி படத்திற்கு உயிரூட்டிஇருக்கின்றனர். இவர்கள் இருவருக்குமான கெமிஸ்ட்ரி மிக சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் மோதிக் கொள்ளும் இவர்கள் போகப்போக நண்பர்களாக மாறி, இவர்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளை கலைத்து சாதிய ரீதியாக இருவரும் பிரிந்திருந்தாலும், பொது எதிரி என்று வரும் பட்சத்தில் நாம் ஒன்றாக கூடிக் கொள்வதே அதற்கு சிறந்த தீர்வாக இருக்கும் என்று பொதுக் கருத்தை தனது நடிப்பின் மூலம் இவர்கள் இருவரும் கொடுத்து, அந்த கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து கைதட்டல்களும் பெற்றிருக்கின்றனர். படத்தின் நாயகியாக வரும் கீர்த்தி பாண்டியன் அவ்வப்போது அசோக் செல்வனுடன் தோன்றி சில சில குழப்பங்களுக்கு தீர்வு சொல்லிவிட்டு சென்றிருக்கிறார். கூடவே சற்று காதலும் செய்திருக்கிறார். சில காட்சிகளேதோன்றினாலும் மனதை கவர்ந்திருக்கிறார் இன்னொரு நாயகி திவ்யா துரைசாமி. எந்த ஒரு இடத்திலும் பதற்றமில்லாத இவரது நடிப்பு படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. இவர்கள் இருவருமே கதைக்கு ஏற்றார்போல் இருக்கும் கதாபாத்திரமாக வந்து சென்று விடுகின்றனர்.

அசோக் செல்வனின் தம்பியாக நடித்திருக்கும் பாண்டியராஜனின் மகன் பிரித்விராஜ் காமெடி கலந்த துடிப்பான இளைஞன் கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தியேட்டரில் கைதட்டல் பெற்றிருக்கிறார். இவருக்கு இந்த படம் அவரது கேரியரில் திருப்புமுனையாக அமைய நிறைய வாய்ப்பிருக்கிறது. கிரிக்கெட் களத்திற்கு உள்ளேயும் சரி, அதற்கு வெளியேயும் சரி கலகலப்பான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெற்றிருக்கிறார். அசோக் செல்வனின் அம்மாவாக வரும் லிஸி ஆண்டனி அவ்வப்போது இயேசு கிறிஸ்துவின் வசனங்களை கூறி தியேட்டரில் சிரிப்பலையை கூட்டியிருக்கிறார். அசோக் செல்வனின் அப்பாவாக வரும் இளங்கோ குமரவேல் பொறுப்பான அப்பாவாக இருந்து கவர்கிறார். கிரிக்கெட் பிளேயர்ஸ்களாக நடித்திருக்கும் நடிகர்களும் உண்மையாகவே கிரிக்கெட் விளையாடி அந்த உண்மைத்தன்மையை படம் முழுவதும் கடத்தி நம்மை ரசிக்க வைத்துள்ளனர். சாந்தனுவின் மாமாவாக நடித்திருக்கும் நடிகர் வில்லத்தனம் காட்டி மிரட்டி இருக்கிறார். லீக் கிரிக்கெட்டில் வரும் நடிகர்களும் சிறப்பாக பங்களித்துள்ளனர். படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பக்ஸ் பகவதி பெருமாள் ஒரு இன்ஸ்பையரான கதாபாத்திரத்தில் நடித்து மனதில் பதிகிறார். சாதிய பிரச்சனைகளை கலைத்து ஸ்போர்ட்ஸ் மூலம் நாம் இணைந்தால் நமக்கான பொது எதிரியை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையை இவர் கதாபாத்திரம் மூலம் கடத்தி இருக்கிறார். இவரது அனுபவம் வாய்ந்த நேர்த்தியான நடிப்பு படத்திற்கு பிளஸ் ஆக மாறியிருக்கிறது.

கோவிந்த் வசந்தா இசையில் மற்ற பாடல்களைக் காட்டிலும் ரயிலே பாடல் கேட்கும் ரகம். கிரிக்கெட் சம்பந்தப்பட்ட காட்சிகளிலும், உணர்வுப்பூர்வமான காட்சிகளிலும் பின்னணி இசை சிறப்பாக கொடுத்து கலங்கடித்து இருக்கிறார். தமிழ் அழகனின் ஒளிப்பதிவில் கிரிக்கெட் மைதானம் சம்பந்தப்பட்ட காட்சிகள் மிளிர்கிறது. அரக்கோணம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் மிகவும் எதார்த்தமாக காட்சிப்படுத்தப்பட்டு அதில் இருக்கும் காதல் காட்சிகளும் சிறப்பான ஒளிப்பதிவு மூலம் அழகாகத்தெரிகிறது. தனது நேர்த்தியான ஒளிப்பதிவு மூலம் படத்தை உலகத்தரத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார் ஒளிப்பதிவாளர் தமிழ் அழகன்.

நமக்குள் சாதி ரீதியாகப் பிரிந்து சண்டையிட்டுக் கொள்ளாமல் நாம் எந்த சாதியாக இருந்தாலும் ஒன்று கூடிவிட்டால் நம்முடைய பொது எதிரியை வீழ்த்து விடலாம் என்ற பொதுக் கருத்தை மிக அழகாக கிரிக்கெட் களத்திற்குள் புகுத்தி அதனுள் நட்பு, காதல், போட்டி, விளையாட்டு என இன்றைய காலகட்ட ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைவரும் ரசிக்கும்படியான காட்சி அமைப்புகள் மூலம் படத்தைக் கொடுத்து ஆங்காங்கே சில சறுக்கல்கள் இருந்தாலும் இன்றைய காலகட்டத்திற்கு மிகவும் அவசியமான ஒரு மெசேஜையும்நம்மைச் சுற்றியிருக்கும் கண்ணுக்குத் தெரியாத மிகப்பெரிய சாதிய அரசியலை புரியும்படி சிறப்பாக காட்சிப்படுத்தி அதை ரசிக்கும்படி கொடுத்து முக்கியமாக பார்க்க வேண்டிய படங்களின் வரிசையில் ப்ளூ ஸ்டார் இணைந்திருக்கிறது.

ப்ளூ ஸ்டார் - எழுச்சி!

blue star
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe