பா.ஜ.க. மூத்த தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமாக வலம் வருபவர் ஹெச்.ராஜா. அரசியலில் நீண்ட காலமாக இயங்கி வரும் இவர், அவ்வபோது சர்ச்சையில் சிக்கி கவனம் பெறுவார். இந்த நிலையில் தற்போது அரசியலைத் தாண்டி சினிமா துறையில் காலடி வைத்துள்ளார். 

அவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ‘கந்தன்மலை’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கிடுகு என்ற படத்தை இயக்கிய இயக்குநர் வீரமுருகன் இப்படத்தை இயக்கியுள்ளார். திருப்பரங்குன்றம் பின்னணியில் இப்படம் உருவாகி வருவதாக கூறப்படும் நிலையில் சிவ பிரபாகரன் மற்றும் சந்திரசேகர் ஆகியோர் படத்தை தயாரித்துள்ளனர்.

போஸ்டர் வெளியீட்டு விழா திருநெல்வேலியில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டில் நடந்தது. இந்நிகழ்வில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன். பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மொத்தம் இரண்டு போஸ்டர்கள் வெளியிட்டுள்ள நிலையில் ஒரு போஸ்டரில் தனியாக பெரிய முறுக்கு மீசையுடன் கழுத்தில் பெரிய ருத்ராட்ச மாலை அணிந்து கொண்டு நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறார். இன்னொரு போஸ்டரில் அதே முறுக்கு மீசை கெட்டப்புடன் தனது கேங்குடன் கோபமாகச் செல்கிறார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.