தென்மாவட்ட அரசியலை கையில் எடுத்து அதன் மூலம் பல்வேறு உண்மைகளை வெளிக்கொண்டு வந்து தான் எடுக்கும் படங்களில் அதை தோலுரித்துக் காட்டி பார்ப்பவர்களை கலங்கடிக்க செய்த இயக்குநர் மாரி செல்வராஜ் அடுத்த படைப்பாக வெளியாகி இருக்கும் பைசன் காள மாடன் திரைப்படம் எந்த அளவு வரவேற்பு பெற்றிருக்கிறது?
தூத்துக்குடி சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் கிராமத்தைச் சேர்ந்த துருவ் விக்ரம் கபடி விளையாட்டின் மேல் அளவு கடந்த வெறியாக இருக்கிறார். இதனாலேயே அவர் களமிறங்கும் போட்டிகளில் அதகளப்படுத்துகிறார். இப்படி கபடி விளையாட்டின் மீது பேர் ஆர்வம் கொண்ட துருவ் விக்ரம் அங்கு இருக்கும் சாதிய அடக்குமுறைகள், அவர் மேல் நடக்கும் வன்முறைகள், துரோகங்கள், அவமானங்கள் கடந்து எப்படி தன் நாட்டுக்காக களம் இறங்கினார் என்பதே இந்த பைசன் காள மாடன் படத்தின் மையக்கதை.
மிகவும் பின் தங்கிய வகுப்பை சேர்ந்த ஒரு இளைஞன் படிப்பதற்கு பல்வேறு தடைகள் இருக்கிறது, திருமணம் செய்ய பல்வேறு தடைகள் இருக்கிறது என்று பார்த்தால் தனக்கு பிடித்த விளையாட்டை விளையாடுவதற்கு கூட பல்வேறு தடைகள் இருக்கிறது என்பதை வெட்ட வெளிச்சம் போட்டு ரத்தமும் சதையுமாக காண்பித்து பார்ப்பவர்களை கண் கலங்க வைத்திருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ். தென் மாவட்ட அரசியலை மிகவும் துல்லியமாகவும் அதேசமயம் மிகவும் பின்தங்கிய வகுப்பு சேர்ந்த மக்கள் பாய்ண்ட் ஆப் வியூ வில் எதார்த்தமாக உண்மைக்கு நெருக்கமாக மீண்டும் ஒருமுறை இந்த பைசன் படம் மூலம் காண்பித்திருக்கும் இயக்குநர் மாரி செல்வராஜ் அதை சிறப்பான முறையில் மீண்டும் ஒருமுறை காண்பித்து ரசிகர்களிடையே கைத்தட்டல் பெற்று படத்தையும் கரை சேர்த்திருக்கிறார்.
படத்தின் முதல் பாதி சாதிய அடக்குமுறை பாகுபாடு வன்முறை துரோகம் காதல் என திரும்பத் திரும்ப ரிப்பீட் மோடில் நகர்ந்து அதன் பின் இரண்டாம் பாதியில் வேகம் எடுக்கும் திரைப்படம் அழுத்தமான காட்சி அமைப்புகள் விறுவிறுப்பான கபடி காட்சிகள் என சிறப்பான முறையில் பயணித்து இறுதி கட்டத்தில் பார்ப்பவர்களை கண்கலங்க செய்து சிறப்பான திரைப்படமாக அமைந்து வெற்றி படமாக மாறி இருக்கிறது. முதல் பாதி சற்றே அயர்ச்சி கொடுத்தாலும் இரண்டாம் பாதி அதை எல்லாம் சரி செய்து படத்தை கரை சேர்க்க உதவி இருக்கிறது. வழக்கம்போல் மாரி செல்வராஜ் தனக்கே உரித்தான பாணியில் உண்மைக்கு மிக நெருக்கமான எதார்த்த காட்சி அமைப்புகள் மூலம் சிறப்பான படமாக இந்த பைசன் படத்தை கொடுத்திருக்கிறார்.
தென் மாவட்டத்தை சேர்ந்த அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரர் மன்னத்தி கணேசன் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படத்தை உருவாக்கி இருக்கும் மாரி செல்வராஜ், ஒரு பின் தங்கிய வகுப்பை சேர்ந்த இளைஞன் வாழ்க்கையில் ஜெயிக்க எவ்வளவு போராட்டம் மற்றும் தியாகங்கள் கடந்து வருகிறார் என்பதை ரத்தம் அதிகமாக காண்பித்து கைதட்டல் பெற்றிருக்கிறார். படத்தில் சொல்லப்பட்ட கருத்துக்கள் பல இடங்களில் ஏற்றுக் கொள்ளும்படி இருந்தாலும் சில இடங்களில் சற்றே ஓவர் டோஸ் ஆக இருப்பதை மட்டும் தவிர்த்து இருக்கலாம்.
நாயகனாக வரும் துருவ் விக்ரம் கபடி வீரராக தன் உடல் பொருள் ஆவி என அனைத்தையும் கொடுத்து சிறப்பான முறையில் நடித்து கவனம் பெற்று இருக்கிறார். தாய் எட்டு அடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்பது போல் நடிகர் விக்ரமுக்கு சரிசம போட்டியாளராக அவரது மகன் உருவாகிறார் என்று இந்த பைசன் படம் மூலம் உரக்க கூறி இருக்கிறார் நாயகன் துருவ் விக்ரம். படம் ஆரம்பித்து சற்றே மெதுவாக நடிக்க ஆரம்பிக்கும் துருவ் விக்ரம் போக போக காட்சிகளோடு ஒன்றி தன் உடல், பொருள், ஆவி என அனைத்தையும் கொடுத்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெற்று இருக்கிறார். இவருக்கு தந்தையாக வரும் பசுபதி அந்த கதாபாத்திரமாகவே மாறி பார்ப்பவர்களை கலங்கடிக்க செய்திருக்கிறார். இவருக்கு விருதுகள் நிச்சயம். படத்தில் இருதரப்பு போராளிகளாக வரும் லால் மற்றும் இயக்குநர் அமீர் ஆகியோர் அவரவர் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து படத்திற்கு வலு சேர்த்து இருக்கின்றனர்.
குறிப்பாக அமீர் வரும் காட்சிகள் விசில்கள் பறக்கின்றன. அதுவும் குறிப்பாக இரண்டாம் பாதியில் தாலி எடுத்துக் கொடுக்கும் காட்சியில் தியேட்டரில் விசில்களால் அதிர செய்திருக்கிறார். நாயகி அனுபமா பரமேஸ்வரனுக்கு அதிக வசனங்கள் இல்லை. இருந்தும் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து கவனம் பெற்று இருக்கிறார். அவருக்கு வழக்கமான நாயகி வேடம் என்றாலும் அதை மண் மணம் மாறாமல் செய்து கவர்ந்திருக்கிறார். நாயகனுக்கு அக்காவாக வரும் ரஜிஷா விஜயன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெற்று இருக்கிறார். செலெக்டராக வரும் அழகம் பெருமாள் சில காட்சிகளை வந்தாலும் கவனம் பெறுகிறார். ஸ்கூல் வாத்தியாராக வரும் அருவி மதன் நீண்ட நாட்களுக்கு பிறகு நல்ல வேடமிட்டு நடித்து அதையும் சிறப்பான முறையில் செய்து கைத்தட்டல் பற்றி இருக்கிறார். மற்றபடி படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் அவரவர் வேலையை சிறப்பாக செய்து படத்திற்கு வலு சேர்த்து விட்டு சென்றிருக்கின்றனர்.
நிவாஸ் கே பிரசன்னா இசையில் பாடல்கள் சுமார் ரகம், பின்னணி இசை ஓகே. மாரி செல்வராஜுக்கு உரித்தான மென்மையான அதே சமயம் மனதை உருக்கும் படியான இசை இதில் சற்றே மிஸ்ஸிங். எழிலரசு ஒளிப்பதிவில் கபடி மற்றும் தென் மாவட்ட சம்பந்தப்பட்ட காட்சிகள் மிக மிக சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டு படத்தோடு நம்மை ஒன்ற வைக்கின்றது.
படத்தின் முதல் பாதி அழுத்தம் இல்லாமல் சற்று மெதுவாக நகர்ந்து செல்வதும், படத்தின் நீளம் அதிகமாக இருப்பதும் இப்படத்திற்கு மைனஸ் ஆக அமைந்திருந்தாலும் இரண்டாம் பாதியில் அதை எல்லாம் சரி செய்து கதையோடும் படத்தோடும் நம்மை ஒன்றை வைத்து விறுவிறுப்பாக நகர்ந்து கடைசியில் கண்கலங்க வைத்து சிறப்பான படம் பார்த்த உணர்வை இந்த பைசன் (காள மாடன்) கொடுத்திருக்கிறார்.
பைசன் (காள மாடன்) - வீரன்!