ஹாலிவுட்டில் முதல் இந்திய நடிகராக நடித்தவர் சாபு தஸ்தகீர். மைசூரில் உள்ள கரபுராவில் 1924 ஆம் ஆண்டு பிறந்த சாபு, 1973 ஆம் ஆண்டு வெளியான ‘எலிஃபண்ட் பாய்’ படத்தில் நடிகராக அறிமுகமானார். இப்படம் வெனிஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு விருதும் வென்றிருந்தது. இந்த படம் மூலம் சர்வதேச அளவில் சாபு கவனம் பெற்றார்.
பின்பு 1940ஆம் ஆண்டு வெளியான ‘தி தீஃப் ஆஃப் பாக்தாத்’, 1942ஆம் ஆண்டு வெளியான ‘ஜங்கிள் புக்’, மற்றும் அதே ஆண்டு வெளியான ‘அரேபியன் நைட்ஸ்’ மற்றும் 1947ஆம் ஆண்டு வெளியான ‘பிளாக் நார்சிசஸ்’ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இவை அனைத்தும் பாக்ஸ் ஆஃபீஸீல் நல்ல வரவேற்பை பெற்றது. இவரது பங்களிப்பை கவுரவிக்கும் விதமாக 1960ஆம் ஆண்டு வெளியான ஹாலிவுட் வாக் ஆஃப் ஃபேம் பட்டியலில் இவரது பெயர் இடம் பெற்றிருந்தது. இந்த பட்டியல் உலக அளவில் சினிமா, இலக்கியம் உள்ளிட்ட பொழுதுபோக்கு துறைகளில் சிறந்த பங்களிப்புகளைச் செய்த நபர்கள் இடம் பெறுவார்கள்.
1948ஆம் ஆண்டு தன்னுடன் ‘சாங் ஆஃப் இந்தியா’ என்ற படத்தில் சில நாட்களே நடித்த மர்லின் கூப்பர் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின்பு அமெரிக்காவிலே செட்டிலானார். சினிமாவைத் தாண்டி இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் அமெரிக்காவின் விமானப்படையில் துப்பாக்கி சுடும் வீரராக பணியாற்றினார். இதையடுத்து 1963ஆம் ஆண்டு தனது 39வது வயதில் மரணமடைந்தார்.
இந்த நிலையில் சாபு தஸ்தகீரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. எழுத்தாளர் டெப்லீனா மஜும்தாரி சாபுவின் வாழ்க்கை கதையை ‘சாபு’ என்ற பெயரில் எழுதிய நிலையில் அதை திரைப்படமாக்கும் உரிமையை அல்மைட்டி மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்தை சார்ந்த தயாரிப்பாளர் பிரப்லீன் சந்து வாங்கியுள்ளார். அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த பயோ-பிக்கிற்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.