சீனாவின் வுஹானில் தொடங்கி தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் உலகம் முழுவதும் இதுவரை 8,953 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள இந்த கரோனா வைரஸால் 2.19 லட்சம் பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இந்தியாவிலும் பரவ ஆரம்பித்துள்ள இந்த வைரஸ் இதுவரை 166 பேரைப் பாதித்துள்ளது. மேலும், கர்நாடகா, டெல்லி மற்றும் மும்பையில் தலா ஒருவர் என மூன்று பேர் இதுவரை கரோனாவால் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 15 பேருக்கு குணமாகிவிட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் 25 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு இரண்டாவது இடத்தில் இருப்பது கேரளா. இந்நிலையில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க கேரள அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இந்நிலையில் இந்தியாவில் மிகவும் பிரபலமான டிவி நிகழ்ச்சி பிக்பாஸ். இது ஹிந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு, மராத்தி உள்ளிட்ட மொழிகளில் எண்டெமால் ஷைன் என்னும் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது. தற்போது மோகன் லால் தொகுத்து வழங்கும் மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சி கரோனாவால் ஒளிபரப்பை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசாங்கம் வலியுறுத்தியுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குச் செவி சாய்க்கும் வண்ணம் இந்நிகழ்ச்சி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளது.