Skip to main content

"டிவியில இருந்து கேட்டாங்க, ஆனா கவின் அம்மா வேணாம்னு சொல்லிட்டாங்க" - 'பிக்பாஸ்' கவின் நண்பர் 'அருவி' பிரதீப் ஆன்டனி

Published on 04/09/2019 | Edited on 04/09/2019

பல சுவாரசியங்கள், சர்ச்சைகளோடு தற்போது நடந்து வரும் பிக்பாஸ்-3 நிகழ்ச்சியில் 'வேட்டையன்' புகழ் கவின் கலந்துகொண்டுள்ளார். சமீபத்தில் கவினுடைய தாயார் உள்பட சிலருக்கு எதிராக ஒரு வழக்கில் தீர்ப்பு வந்துள்ளது. இந்த செய்தி வெளியானதிலிருந்து கவினை கிண்டல் செய்து எக்கச்சக்கமான மீம்ஸை உருவாக்கி உலவவிடுகின்றனர். உண்மை என்ன, கவினின் குடும்பப்பின்னணி என்ன என்பதை கவினுடைய நெடுங்கால நண்பரும்  'அருவி' திரைப்படத்தில் நடித்தவருமான பிரதீப் ஆன்டனியுடன் பேசினோம்.

 

pradeep antony



உங்களுக்கும் கவினுக்குமான நட்பு எங்கு தொடங்கியது?

கவினை 11 வருஷமா தெரியும். காலேஜ்ல படிக்கும் போது அவர் கெமிஸ்ட்ரி டிபார்ட்மென்ட், நான் விஷுவல் கம்யூனிகேஷன் டிபார்ட்மென்ட். நான் கவினோடு பல கல்லூரி நிகழ்வுகள், ரேடியோ ஜாக்கி போட்டி என்றெல்லாம் சேர்ந்து பழகியிருக்கோம். காலேஜ் முடிஞ்சு லைஃப் போகப் போக என்னோட எல்லா பிரச்சனையிலும் கவின் கூட இருந்திருக்காரு. நானும் அவருடைய பிரச்சனைகளில் கூட இருந்துருக்கேன். அப்படி ஏற்பட்ட நட்பு இது.

கவினுடைய தாயார் வழக்கு ரொம்ப பரபரப்பா பேசப்பட்டு வருது. உண்மையில் என்ன நடந்தது?

'சீட்டு' என்ற  விஷயம் பொதுவா அந்த அந்த ஏரியாக்களில் பதிவெல்லாம் செய்யாமல் சாதாரணமாக சிலர் சேர்ந்து செய்வாங்க. கவினோட பாட்டி திருச்சியில் அவுங்க வாழ்ந்த பகுதியில் எல்லோராலும் மதிக்கப்படுபவர். அவுங்க சீட்டுப் போட்டு நடத்திக்கிட்டு இருந்தாங்க. ரொம்ப நாணயமாதான் பண்ணிட்டுருந்தாங்க. அப்போ ஒருவர் நானும் உங்க கூட சேர்ந்து பண்றேன்னு  சொல்லி பார்ட்னராக கூட சேந்தாங்க. அவர் இவங்கள ஏமாத்திட்டார். இந்த விஷயம் நடக்கும்போது கவின் பத்தாவது படிச்சிட்டு இருந்தாரு. இத்தனை வருஷமா இந்த கேஸ் நடந்துட்டு வருது. இந்த கேஸ் கொஞ்சம் குழப்பமானது. கவின் தாயார் கிட்ட காசு கொடுத்தவங்க அவங்க மேல கேஸ் போட்டுடாங்க. கவினோட குடும்பம் அவுங்கள ஏமாத்துனவங்க மேல கேஸ் போட்டாங்க. ஏமாத்துனவர் இவங்க மேலயே கேஸை திருப்பிவிட்டுட்டாங்க. நாங்க காலேஜ் படிக்கும்போது இந்த விஷயத்தை கவின் சொன்னார். எப்படியாவது நான் பணத்தை சம்பாதிச்சு திருப்பிக் கொடுக்கணும்னு சொல்லுவாரு. இந்த நிலையில் அவங்கள பாக்கும்போது ரொம்ப கஷ்டமா இருக்கு.

பிக் பாஸ் நிகழ்ச்சியில ஒரு நாள் "நண்பர்கள்தான் எனக்கு ரொம்ப உதவி பண்ணாங்க. ஒரு பிரச்சனை வந்தபோது நாங்க அவங்க வீட்லதான் தங்கினோம்" என்று கவின் சொன்னார். இந்த பிரச்சனைதானா அது?

ஆமா... இந்த பிரச்சனைதான் அது. அப்போ அவரோட வாழ்க்கைல நான் இல்ல. ஆனா அவரோட ஸ்கூல் நண்பர்கள் நிறைய ஹெல்ப் பண்ணிருக்காங்க. கவின் குடும்பம் அவங்களோட வீட்டை இழந்துட்டாங்க. அவருக்கு திருச்சியில் வாழ ரொம்ப ஆசை. இந்தப்  பிரச்சனை எல்லாம் அவர் அப்போவே பார்த்ததால் அவருக்கு அப்போவே உழைக்கணும்னு எண்ணம் வந்துருச்சு.

 

 

biggboss kavin



இந்த விஷயம் நடந்தபோது கவினை சம்மந்தப்படுத்தி, அதிகமாக கிண்டல் செய்து சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் போடுகிறார்கள். அவர்களுக்கு என்ன சொல்லணும்னு நினைக்கிறீங்க?

அது அவங்களோட கருத்துரிமை. கவினை பிடிக்கலனா நாம ஒன்னும் பண்ண முடியாது. எனக்கு என்னனா கவின் ரசிச்சு பின்தொடருற மீம்ஸ் பேஜ் எல்லாம் கூட அவரை கிண்டல் பண்றாங்க. அது எனக்கு கஷ்டமா இருக்கு. அதைவிட கவின், இதையெல்லாம் பார்த்தால் கவினுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும். இந்த இண்டஸ்ட்ரில யாரை வேணும்னாலும் கேட்டுப் பாருங்க, மத்தவங்ககிட்ட அவர் ரொம்ப நிதானமா, தயங்கித்தான் பேசுவாரு. ஏன்னா அவர் பொக்கிஷமா பாதுகாத்தது அவரோட பேருதான். இப்போ அது கெட்டுப்போனது தெரிஞ்சா அவருக்கு எந்த அளவுக்கு மனசு பாதிக்கும்னு தெரியல. ஒரு நல்ல நண்பனா அவர் கூட நான் இருப்பேன்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் வேற ஒரு வாழ்க்கையை வாழறாரு. இப்போ இந்த செய்தி அவருக்கு தெரியும் வாய்ப்புகள் இருக்குமா?

விஜய் டிவி, கவினோட ஃபேமிலிகிட்ட கேட்டுருக்காங்க, இந்த விஷயத்தை சொல்லிடலாமானு. ஆனா அவங்க வேண்டாம்னு சொல்லிட்டாங்க. அப்படியே தெரிஞ்சாலும் கவினால் வெளியே வந்து அவுங்கள காப்பாத்தி முடிகிற விஷயம் கிடையாது. இத்தனை வருஷமா இந்தப் பிரச்சனைய பாக்குறாங்க. ஆனா கவினுக்கு இப்போதான் இப்படி ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு. 'எங்களால இந்த நிகழ்ச்சியில் இருந்து அவர் வெளிய வர வேண்டாம்'னுதான் அவங்க அம்மாவும் நினைக்கிறாங்க.

பிக் பாஸ் நிகழ்ச்சியில அவர் காதல் மன்னன், பிளேபாய் அப்படி எல்லாம் சொல்றாங்க. அவர் கல்லூரியிலும் இப்படித்தான் இருந்தாரா?

அவர் அப்படியெல்லாம் இல்லவே இல்ல. இப்போ பண்ணுறதை மக்களுக்கு ஒரு என்டர்டைன்மெண்ட்டா நெனச்சிட்டுதான் பண்ணுறாரு. சீரியல் நடிக்கும்போது கூட வேட்டையன் என்ற கேரக்டர்ல இந்த மாறிதான் நடிச்சாரு. அப்போ அது மக்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது. அது மாதிரியே பிக்பாஸிலும் பண்ணுனா மக்களுக்குப் பிடிக்கும், அது பிக்பாஸ்ல ஒர்க் ஆகும்னு நெனச்சு நடிக்க ஆரம்பிச்சாரு. ஆனா அது இப்படி ஆயிடுச்சு.

 

குறிப்பு : பேட்டியில் சொல்லப்படும் கருத்துகள் முழுக்க முழுக்க பேட்டி கொடுப்பவர்களின் கருத்துகளே

 

சார்ந்த செய்திகள்

Next Story

காதலியுடன் கை கோர்க்கும் கவின்

Published on 01/08/2023 | Edited on 01/08/2023

 

kavin marriage update

 

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் கவின் கடைசியாக 'டாடா' படத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று பலரது பாராட்டையும் பெற்றது. இதையடுத்து நடன இயக்குநர் சதீஷ் இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் நடிக்கிறார். இப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் சார்பாகத் தயாரிப்பாளர் ராகுல் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். கவினுக்கு ஜோடியாக அயோத்தி படம் மூலம் கவனம் ஈர்த்த ப்ரீத்தி அஸ்ரானி நடிக்கிறார். படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 

 

இந்நிலையில் கவினுக்கு திருமணம் நடக்கவுள்ளது. வருகிற 20 ஆம் தேதி தனது நீண்ட நாள் காதலியான மோனிகா என்பவரை கரம் பிடிக்கவுள்ளார். இரு வீட்டார் சம்மதத்துடன் இத்திருமணம் நடைபெறவுள்ளது. இதனால் திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  

 

 

Next Story

கவின் நடிக்கும் அடுத்த படம்; இயக்குநராகும் நடன இயக்குநர்?

Published on 16/03/2023 | Edited on 16/03/2023

 

kavin next movie update

 

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் கவின் கடைசியாக 'டாடா' படத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று பலரது பாராட்டையும் பெற்றது. இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக அபர்ணா தாஸ் நடிக்க ஒலிம்பியா மூவிஸ் சார்பில் எஸ்.அம்பேத்குமார் தயாரித்திருந்தார். அறிமுக இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்க ஜென் மார்ட்டின் இசையமைத்திருந்தார். 

 

இந்த நிலையில் கவின் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை நடன இயக்குநர் சதீஷ் இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. ரோமியோ பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர் ராகுல் இப்படத்தை தயாரிப்பதாகவும் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளதாகவும் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.   

 

நடன இயக்குநர் சதீஷ் உன்னாலே உன்னாலே, வாரணம் ஆயிரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இப்படம் மூலம் இயக்குநராக அவதாரம் எடுக்கவுள்ளதாகப் பரவலாக பேசப்படுகிறது.