Skip to main content

லாஸ்லியாவின் தந்தை குறித்து கமல்ஹாசன் அடித்த கமெண்ட்!

Published on 15/09/2019 | Edited on 15/09/2019

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் புகழ் பெற்ற ஒன்றாக 'பிக்பாஸ்' நிகழ்ச்சி உருவாகியிருக்கிறது. உலக அளவில் 'பிக்பிரதர்' என்ற பெயரில் தொடங்கி இந்தியாவிலும் பல மொழிகளில் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி வெற்றிகரமாக அடுத்தடுத்த பார்ட்களை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிவருகிறது. முதல் இரண்டு சீசன்களையும் விட அதிக பரபரப்பு, விறுவிறுப்பு, கைகலப்பு என சென்றுகொண்டிருக்கிறது பிக்பாஸ் - 3.

 

kamalhassan



இந்நிகழ்ச்சியின் ஒரு போட்டியாளரான கவின், தனது சக பெண் போட்டியாளர்களுடன் நெருங்கிப் பழகிவருகிறார். காதல் போன்றதொரு பிம்பத்தை ஏற்படுத்தும் அந்த உறவு நட்பு எனவும் அதற்கு மேல் எனவும் அவர்களால் சில தருணங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. கடந்த சில வாரங்களாக கவின் - லாஸ்லியா இருவரின் நட்பு பார்வையாளர்கள் மத்தியிலும் போட்டியாளர்கள் மத்தியிலும் பல்வேறு விதமான விவாதங்களுக்கு உள்ளாகி இருந்தது. இன்னொரு புறம், இது டி.ஆர்.பி ரேட்டிங் எனப்படும் பார்வையாளர் பதிவு குறியீட்டை அதிகப்படுத்துவதற்காக திட்டமிட்டு செய்யப்படும் விஷயம் என்ற விமர்சனமும் இருந்து வருகிறது. கடந்த வாரம், பிக்பாஸ் - 3 போட்டியாளர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களும் நண்பர்களும் பிக்பாஸ் இல்லத்துக்குள் திடீர் வரவாக சென்று ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் உண்டாக்கினார்கள். கடந்த வாரம் முழுவதுமே நிகழ்ச்சியில் புன்னகையும் கண்ணீரும் பொங்கி வழிந்தது.


சேரனின் மகள் உள்ளிட்டவர்கள் வர, தர்ஷன், முகின், ஷெரின் ஆகியோரின் தாய் உள்ளிட்டவர்கள் சென்று பார்த்தார்கள். கவினின் நண்பர் உள்ளே சென்றார். வனிதாவின் மகள்கள் வீட்டிற்குள் சென்று வந்தனர். இந்த வரிசையில் யாரும் எதிர்பாராத வகையில் லாஸ்லியாவின் தந்தை பிக்பாஸ் இல்லத்திற்குள் சென்றார். இலங்கை தமிழ் பெண்ணான லாஸ்லியா, தனது தந்தையை சந்தித்து கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன என்று முன்பே கூறியிருந்தார். கனடாவில் வாழும் அவர் நிகழ்ச்சிக்காக வந்தது பார்வையாளர்களுக்கும் போட்டியாளர்களுக்கும் லாஸ்லியாவுக்கும் ஆச்சரியத்தை அளித்தது.

 

 

kavin losliya



தாய் மற்றும் சகோதரிகளைத் தொடர்ந்து தந்தை உள்ளே வந்தபோது லாஸ்லியா உறைந்து நின்றார். பத்து ஆண்டுகள் கழித்து சந்திக்கும் தந்தை கட்டி அணைத்து கதறுவார் என்றெண்ணியவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார் அவர். வந்தவுடன் கவின் - லாஸ்லியா நட்பு மீதான தனது கோபத்தைக் காட்டிய அவர், "எங்க கிட்ட என்ன சொல்லிட்டு வந்த? இங்க என்ன பண்ற? குடும்ப மானத்தை வாங்கிட்ட... வெளிய எல்லோரும் 'உன் பொண்ணு கல்யாணத்துக்குப் போறியா?'ன்னு கேக்குறாங்க" என்று வெடித்துத்தள்ளினார். பின்னர் சமாதானமாகி அன்பாகப் பேசி, "நீ நீயா இரு. உன் கேமை விளையாடி வென்று வா" என்று கூறிய அவர் சேரனை மிகுந்த அன்புடன் அரவணைத்து நன்றி தெரிவித்தார். அவர் உள்ளே வந்த நொடியிலிருந்தே பதற்றத்துடன் இருந்த கவினை இறுதி வரை கேள்வி கேட்கவோ திட்டவோ இல்லை லாஸ்லியாவின் தந்தை. "உங்க கேமை விளையாடுங்க தம்பி" என்று கூறிச் சென்றார்.

சமூக ஊடகங்களில் ஒரு பக்கம் அவரது இந்த செயல் பாராட்டப்பட்டாலும் இன்னொரு பக்கம் காதல் என்பது தனிமனித உரிமை, அதை தடுப்பது தவறு என்று விமர்சனங்களும் எழுந்தன. இந்நிலையில் சனி, ஞாயிறு தினங்களில் நிகழ்ச்சியை வழங்கும் கமல்ஹாசன் இது குறித்து என்ன சொல்வார் என மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்தனர் பார்வையாளர்கள். அதற்கு முக்கிய காரணம் இருக்கிறது. தனது மகள்கள் ஸ்ருதி, அக்ஷரா இருவரையும் முழு சுதந்திரம் கொடுத்து வளர்த்த கமல்ஹாசன் லாஸ்லியாவின் தந்தையின் அணுகுமுறை குறித்து என்ன சொல்வார் என அவரது ரசிகர்களும் எது நடந்தாலும் விமர்சிக்கலாம் என பலரும் காத்திருந்தனர். ஆனால், அவர் விமர்சகர்களை ஏமாற்றிவிட்டார் என்றே சொல்ல வேண்டும். இந்த விஷயத்தை மிக லாவகமாகவே கையாண்டார் கமல்ஹாசன்.

 

losliya father



முதலில் லாஸ்லியாவிடம் ஒரு தந்தையாக அவரது உணர்வு எப்படியிருக்குமென அவரது இடத்திலிருந்து விளக்கினார் கமல். "ஒரு நடுத்தர குடும்பம் எப்போதுமே பக்கத்து வீடு என்ன நினைக்குமென்ற பதற்றத்தில் இருக்கும், அதுதான் அவர்கள் வாழ்க்கை. அதனால்தான் அவர் உள்ளே வந்ததும் அப்படி நடந்துகொண்டார்" என்று லாஸ்லியாவிடம் கூறினார். பின்னர் சேரனை தங்கள் குடும்பத்தில் ஒருவர் போல லாஸ்லியாவின் தந்தை நடத்திய விதத்தையும், கடைசி வரை கவினை ஒரு வார்த்தை கூட அதிகமாகப் பேசவிடாமல் நாகரிகமாக அணுகிய விதத்தையும் பாராட்டினார் கமல். மொத்தத்தில் தான் ஒரு தந்தையாக, இந்த விஷயத்தை எப்படி கையாண்டிருப்பேனோ அதை விட சிறப்பாகவே அவர் கையாண்டார் என்று பாராட்டினார் கமல்.

இதோடு நிற்காமல், லாஸ்லியாவின் லாஸ்லியாவின் தரப்பிலிருந்து சொல்லும் நியாயங்களாக சிலவற்றையும் எடுத்துக்கூறினார். "இந்தத் தலைமுறையின் கல்வி வேறு, அனுபவம் வேறு. அவர்கள் விரும்பியதை அவர்கள் செய்ய அனுமதிக்கவேண்டும்" என்று கால் மேல் கால் போட்டு அமர்வதை சொல்வது போல காதல் குறித்தும் சொன்னார் கமல். மேலும் "லாஸ்லியா உங்களை எதிர்த்து ஒரு வார்த்தை பேசவில்லை. அவ்வளவு நன்றாக அவரை தாய் வளர்த்திருக்கிறார். எனவே நீங்க அடிக்கடி சொல்வது போல கெத்தாகவே நீங்கள் இருக்கலாம். பக்கத்து வீட்டுக்காரர்கள் பற்றி கவலைப்படாதீங்க. நல்ல நண்பர்கள் ஆறுதலாகத்தான் இருப்பார்கள், பிரச்னையை பெரிதுபடுத்தமாட்டார்கள்" என்றும் கூறினார். இப்படி வழக்கம் போல இந்த எபிசோடையும் திறமையாகவே கையாண்டு கைதட்டல் வாங்கினார் கமல்ஹாசன்.                                    
   

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

படம் வெளியாவதற்கு முன்பே பரிசு - இயக்குநருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தயாரிப்பாளர்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
star movie director elan got a plot from producer before a movie release

டாடா பட வெற்றியை தொடர்ந்து 'பியார் பிரேமா காதல்' பட இயக்குநர் இளன் இயக்கத்தில் கவின், ஸ்டார் படத்தில் நடித்துள்ளார். மேலும் நடன இயக்குநர் சதீஷ் இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் நடிக்கிறார். இரு படத்தின் பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இதில் ஸ்டார் படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினி சித்ரா என இரண்டு நிறுவனங்கள் தயாரிக்கும் இப்படத்தில் லால், அதிதி போஹங்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இப்படம் அடுத்த மாதமான மே 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதுவரை படத்தின் 4 பாடல்கள் வெளியான நிலையில் அண்மையில் வெளியான ‘மெலோடி’ பாடல் ரசிகர்களை கவர்ந்தது. இதில் கவின் பெண் வேடமிட்டு நடனமாடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. 

star movie director elan got a plot from producer before a movie release

இந்த நிலையில் இயக்குநர் இளனுக்கு தயாரிப்பாளர் பெண்டேலா சாகர் வீட்டு மனை வாங்கி கொடுத்துள்ளார். இதனை இளன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, மகிழ்ந்துள்ளார். அந்த பதிவில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “ஸ்டார் படத்தை பார்ப்பதற்கு முன்பே ஹைதராபாத்தில் எனக்கு ஒரு வீட்டு மனை வாங்கி தந்துள்ள எனது தயாரிப்பாளர் பெண்டேலா சாகருக்கு எனது மனமார்ந்த நன்றிகள். நான் அவரை படம் பார்க்க அழைத்தபோது, ​​அவர் அதைப் பார்ப்பதற்கு முன்பு எனக்கு பரிசளிக்க வேண்டும் என்று கூறினார்” என பதிவிட்டுள்ளார்.

Next Story

நெருங்கும் நாடாளுமன்றத் தேர்தல்; குழு அமைத்த கமல்ஹாசன்

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
Parliamentary elections approaching; Kamal Haasan announce Team

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கான தேர்தல் பணிக்குழு மற்றும் கூட்டணி தொகுதிப் பங்கீடு ஆகிய விஷயங்களைத் தீவிரப்படுத்தி வருகின்றனர். திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் தேர்தல் பணி ஒருங்கிணைப்புக் குழுவை கட்சித் தலைமை அறிவித்துள்ளது.  மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ஒருங்கிணைப்புக் குழு குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். ஏ.ஜி. மௌரியா, தங்கவேலு, அருணாச்சலம் ஆகியோர் அடங்கிய தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பான செயல் திட்டங்களை உருவாக்கவும், செயல்படுத்தவும் இவர்களுக்கு வழிகாட்டுதல் அளிக்கப்பட்டுள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.