Skip to main content

பாட்டு மட்டுமல்ல பன்ச் வசனமும் எழுதியிருக்கிறார் பாரதியார்! தமிழ் சினிமாவில் பாரதியின் வரிகள்  

Published on 11/12/2019 | Edited on 12/12/2019

மகாகவி என்று என்றும் அழைக்கத்தக்க வகையில் அன்றே பாடல்களை படைத்தவன் பாரதி. தேசப்பற்று, பெண் விடுதலை, சாதி ஒழிப்பு, பக்தி, காதல் என பல்வேறு பொருள்களில் பாரதி எழுதிய பாடல்கள் இன்றும் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. பாரதி எழுதிய பாடல்களின் சிறப்புகளில் ஒன்று, அவை நல்ல சந்த நயத்துடன், பாடல்களாகப் பாட ஏற்ற வகையில் எழுதப்பட்டதுதான். பாரதியின் பாடல்கள், இந்தத் தலைமுறையையும் ஈர்க்க இது மிக முக்கிய காரணமாகும். தமிழ் சினிமா, பாரதியின் பாடல்களை பல படங்களில் பயன்படுத்தியுள்ளது. அந்த வகையில் பார்த்தால், கவிஞர், பத்திரிகையாளர், புரட்சியாளர், விடுதலை போராட்ட வீரர் என பாரதி கொண்ட பல முகங்களை தாண்டிய தமிழ் சினிமா பாடலாசிரியர் என்றொரு முகமும் அவருக்கு உள்ளது என்று சொல்லலாம். பாடல்களில் மட்டுமின்றி, படத்திற்குத் தலைப்பாகவும் பன்ச் வசனங்களாகவும் கூட பாரதியின் பாடல்கள் பயன்படுகின்றன.
 

barathiyar



தேசப்பற்று, சுதந்திர போராட்ட வீரர்களின் கதை என ஆரம்ப கால தமிழ் சினிமாவில் பாரதியின் பாடல்கள் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் நிறைந்திருந்தன. பல படங்களில் அவ்வாறு பாரதியின் பாடல்கள் பயன்படுத்தப்பட்டன. அந்தக் காலத்தையும் களத்தையும் தாண்டி இன்று வரை ஃப்ரெஷ் ஆக இருக்கின்றன பாரதியின் வார்த்தைகள். சமீபத்தில் அஜித் நடித்து பெரிய வெற்றி பெற்ற படமான 'நேர்கொண்ட பார்வை' படத்தின் தலைப்பு பாரதியின் வரிகளில் இருந்து எடுக்கப்பட்டதே. 'நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத...' எனத் தொடங்கும் பாரதியின் பாடல் வரி, 'பிங்க்' படத்தின் ரீமேக்கிற்கு மிகச் சரியான, வலிமையான தலைப்பாக அமைந்தது. தற்போது சூர்யா நடித்து வரும் படத்தின் தலைப்பான 'சூரரை போற்று' என்பதும் பாரதியின் பாடலில் உள்ள ஒரு வரியே. அந்த வரி இடம்பெற்ற பாரதி பாடல், 'அச்சம் தவிர், நய்யப் புடை, மானம் போற்று...' எனத் தொடங்கும். அந்தப் பாடலும் மிஷ்கின் இயக்கிய 'அஞ்சாதே' படத்தில் இடம்பெற்றது. 'அஞ்சாதே' படத்தின் அந்தப் பாடலை கேட்டால், அது சுதந்திரத்திற்கு முன்பு எழுதப்பட்ட பழைய பாடல் என்றே சொல்ல முடியாது. அத்தனை இளமையாகவும் வலிமையாகவும் இருந்தன அந்த வரிகள்.

 

 

barathi movie



பாரதி எழுதிய புதிய ஆத்திச்சூடி பாடல் வரிகள் சீமான் இயக்கிய 'தம்பி' படத்தில் 'உடலினை உறுதி செய்' என்ற பாடலாக இடம்பெற்றது. புதியவர்களால் உருவாக்கப்பட்டு பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய 'உறியடி' படத்தில் 'அக்கினி குஞ்சொன்று கண்டேன்' பாடல் மிக மிக தீவிரமான ரௌத்திரமான பாடல். 'தத்தகிட தத்தகிட...' என்ற அந்த இசை, நெருப்பு போன்ற கோபத்தை வெளிப்படுத்துவது. அநீதிக்கெதிராகப் பொங்கியெழும் வீரத்தின் குரலாக ஒலிக்கும் வரிகள் பாரதியின் வரிகள். பொதுவாகவே பாரதியின் வரிகள் பல ரௌத்திரத்தின் உச்சத்தை வீரியத்துடன் வெளிப்படுத்துபவை. கோபம் இப்படியென்றால், தன்னம்பிக்கையின் உச்சத்தை, தாழ்த்த, நசுக்க நினைப்பவர்களிடம் நாம் சொல்லும் எதிர்க்குரலாக ஒலிப்பது 'தேடிச் சோறு நிதந்தின்று...' எனத் தொடங்கும் கவிதை. 'நான் வீழ்வேனென்று நினைத்தாயோ' என்ற வரி இன்று இளைஞர்கள் மத்தியில் மிகப் புகழ் பெற்றதாகிவிட்டது. அப்போதே 'மகாநதி' படத்தில் கமல் இதை பயன்படுத்தியிருந்தார். இப்போது 'பேட்ட' படத்தில் ரஜினியின் அறிமுகக் காட்சியிலேயே இந்த வரிகள் வர, அரங்கங்கள் அதிர்ந்தன. இப்போதும் இத்தகைய தாக்கத்தை உண்டு செய்யக் கூடிய வரிகளை அப்போதே எழுதியிருந்தார் பாரதி. என்ன ஒரு சோகமென்றால், சிறைக்குப் போய் வரும் அரசியல்வாதியிலிருந்து சிங்கிள் சோகத்தில் இருக்கும் இளைஞர்கள் வரை அனைவரும் அனைத்துக்கும் இந்த வரியை பயன்படுத்துகிறார்கள்.

 

varumaiyin niram sivapu



பெருங்கோபக்காரனான பாரதி, பேரன்பும் கொண்டவன். 'கண்ணம்மா' என்ற வார்த்தையை இத்தனை காதல் நிறைந்த வார்த்தையாக்கியது பாரதிதான். தமிழ் சினிமாவில் 'கண்ணம்மா' என்ற வார்த்தையைக் கொண்ட பாடல்கள் பல. 'வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா' என்று பாரதியின் வரியுடன் தொடங்கும் 'சேது' பாடல், காதலின் கனத்தை நம் மனத்தில் ஏற்றும். 'தீர்த்த கரையினிலே...' எனத் தொடங்கும் பாரதி பாடல் 'வறுமையின் நிறம் சிவப்பு' படத்தின் க்ளைமாக்ஸுக்கு அத்தனை அழுத்தம் சேர்த்தது. 'வறுமையின் நிறம் சிவப்பு' படத்தில் பாரதி எழுதிய 'நல்லதோர் வீணை செய்தே..' பாடலும் பயன்படுத்தப்பட்டிருக்கும். அந்தப் பாடல்கள் அந்தப் படத்தில் வெளிப்படுத்தப்பட்ட உணர்வை பன்மடங்கு அதிகமாக்கின. 1982இல் வெளிவந்த படமான 'ஏழாவது மனிதன்' படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் பாரதி எழுதியவை. அவரது கவிதைகளுக்கு மெட்டமைத்து பாடல்களாக்கியிருந்தார் எல்.வைத்தியநாதன். ரகுவரன் நடித்த அப்படத்தில் இடம்பெற்ற 'காக்கை சிறகினிலே...' பாடல் இன்று வரை நம் மனதை வருடும் பாடலாகும். பாரதியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'பாரதி' படத்தில் அவர் எழுதிய பல இனிமையான பாடல்கள் இடம்பெற்றன. இளையராஜா இசையமைத்த அப்படத்தில் 'நிற்பதுவே நடப்பதுவே...' பாடல் பெரிய ஹிட்டானது. ஏ.ஆர்.ரஹ்மானும் பாரதி பாடலுக்கு இசையமைத்துள்ளார். 'கண்டுகொண்டேன்  கண்டுகொண்டேன்' படத்தில் 'சுட்டும் விழி சுடர்..' என்ற பாரதி கவிதை பாடலாகியிருந்தது.

 

 

ajith rajini



இங்கு குறிப்பிடப்பட்டவை குறைவே. இன்னும் பல படங்களில் பாரதியாரின் பாடல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன, பாரதியின் வரிகள் வசனங்களாகியுள்ளன. சிவாஜியின் கைகொடுத்த தெய்வம், கப்பலோட்டிய தமிழன் போன்ற படங்களில் பாரதியின் பாடல்கள் இடம்பெற்றன. அந்த காலகட்டத்தில் பல படங்களில் பாரதியின் வரிகள் பயன்படுத்தப்பட்டன. அப்போது மட்டுமல்ல இப்போதும் எப்போதும் வீச்சுடனும் வலிமையுடனும் இளமையுடனும் இருக்கக் கூடிய ஆயிரக்கணக்கான வரிகளை பாரதி எழுதியுள்ளார். இன்னும் பல தமிழ் படங்கள் அவற்றை பயன்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

 

              

சார்ந்த செய்திகள்

Next Story

வீடு திரும்பினார் அஜித்

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Ajith returned home

அஜித் குமார், துணிவு படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் அஜர்பைஜானில் தொடங்கியது. இதையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் அஜர்பைஜானில் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

வருகிற 15ஆம் தேதி விடாமுயற்சியின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், அதற்காக வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இந்த சூழலில் நேற்று அஜித் குமார் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இதனை அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து 'திட்டமிட்டபடி அடுத்த வாரம் அஜர்பைஜானில் நடைபெறும் விடாமுயற்சி படப்பிடிப்பில் நடிகர் அஜித்குமார் பங்கேற்பார். காதுக்கு அருகில் மூளைக்கு செல்லும் நரம்பில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக அஜித் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று இரவே வீக்கத்திற்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு மூளையில் கட்டி என வெளியான தகவலில் உண்மையில்லை. சிகிச்சை முடிந்து தற்போது ஓய்வில் உள்ளார். இன்று இரவு அல்லது நாளை அஜித் வீடு திரும்புவார்' என சுரேஷ் சந்திரா நேற்று விளக்கமளித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது அஜித் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Next Story

'அஜித்திற்கு கொடுக்கப்பட்ட சிகிச்சை'- மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கம்

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
 'Treatment given to Ajith' - manager Suresh Chandra explains

அஜித் குமார், துணிவு படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் அஜர்பைஜானில் தொடங்கியது. இதையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் அஜர்பைஜானில் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

வருகிற 15ஆம் தேதி விடாமுயற்சியின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், அதற்காக வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இந்த சூழலில் நேற்று அஜித் குமார் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இதனை அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் 'திட்டமிட்டபடி அடுத்த வாரம் அஜர்பைஜானில் நடைபெறும் விடாமுயற்சி படப்பிடிப்பில் நடிகர் அஜித்குமார் பங்கேற்பார். காதுக்கு அருகில் மூளைக்கு செல்லும் நரம்பில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக அஜித் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று இரவே வீக்கத்திற்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு மூளையில் கட்டி என வெளியான தகவல் உண்மையில்லை. சிகிச்சை முடிந்து தற்போது ஓய்வில் உள்ளார். இன்று இரவு அல்லது நாளை அஜித் வீடு திரும்புவார்' என சுரேஷ் சந்திரா விளக்கமளித்துள்ளார்.