Skip to main content

மீடியாக்களுக்கு கண்டனம் தெரிவித்து கோரிக்கை வைத்த பாரதிராஜா!

 

Bharathiraja who condemned the media and made a request!

 

தமிழ் சினிமாவிலும், சின்னத்திரையிலும் குணச்சித்திர நடிகராக திகழ்ந்தவர் மாரிமுத்து. சமீபத்தில் மாரடைப்பால் காலமானார். தமிழ்சினிமாவில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. அவரது மகள் இரண்டு நாட்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். 

 

இருவரது இறுதிச்சடங்கிலும் செய்தி மற்றும் யூடியூப் சேனல்கள் குவிந்திருந்து செய்திகளை தந்த வண்ணம் இருந்தது. ஆனால் சில சேனல்கள் அநாகரிகமாகவும் நடந்து கொண்டனர். இறந்தவர்களைப் பற்றி நீங்கள் எதாவது சொல்லுங்களேன் என்று சோகத்தில் இருப்பவர்கள் முன் மைக்கை நீட்டி அவர்களது பேட்டிகளை கேட்டு தொல்லை தந்தனர். 

 

ஊடகங்களின் வரம்பு மீறிய இந்த செயலைக் கண்டித்தும், கோரிக்கை ஒன்றையும் தமிழ்த்திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக இயக்குநர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ”மரணம் கொடுமையானது. அதிலும் அகால மரணங்கள் மிகக் கொடுமையானது. அப்படியொரு நிகழ்வை சந்திக்கும்போது சொந்த பந்தங்கள், உடன் நட்புகள் கலங்கிப்போகும். செய்வதறியாது திகைத்துப் போகும். அந்நேரம் ஆறுதல் சொல்லுதலே இயலாத காரியம். தேற்றுவதற்கு வார்த்தைகள் இருக்காது”

 

“உடன் நிற்பது மட்டுமே சாத்தியமாகும். அந்நேரத்தைக் கூட நம்மால் தர முடியாத நிலைக்குத் தள்ளிவிடுகின்றன சமீபகால மீடியாக்களின் செயல். புகழ்பெற்றவர்களின் வீட்டு இழப்பை இவர்கள் படம் எடுத்துப் போடுவதால் தேவையற்ற கூட்டம் சேர்கிறது. வந்து உடன் நிற்க நினைக்கும் பலரை துக்க வீட்டிற்கே வரவிடாமல் செய்துவிடுகிறது. அல்லது வந்ததும் ஓட வைத்துவிடுகிறது. முன்பெல்லாம் ஊடக தர்மம் இருந்தது. எந்நிகழ்வை படமாக்க வேண்டும். கூடாதென்று”

 

“இப்போது சமூக வலைத்தளங்கள் பெருகிய பின் எல்லாமே மாறிவிட்டது. அறநிலை பிறழ்ந்துவிட்டது. ஊடகங்கள் மரண வீட்டின் உள்ளே வரை நுழைந்து காட்சித் திருடுவதை செய்கின்றன. நம் அனுமதி இல்லாமல் இரக்கமற்று நம் கையறு நிலையில் நிற்கும் முகங்களை படம் பிடித்துக் காட்டுகின்றனர். இது எந்தவிதத்தில் நியாயம் எனத் தெரியவில்லை. சினிமாக்காரர்களின் வீடு என்ன திறந்த மடமா?? அவர்களின் துக்கம் கேலிச் சித்திரமா?. நேற்று... இதற்கு முன் நிகழ்ந்த மரண நிகழ்விலும் மீடியாக்கள் நடந்துகொண்ட விதம் கண்டிக்கத்தக்கது. மீடியாக்கள் போர்வையில் வருபவர்களையும் அடையாளங்கண்டு களைய வேண்டிய நேரம் இது".

 

"குடும்ப உறவுகளாக மதிக்கும் மீடியாவினரின் இதுபோன்ற நாகரீகமற்ற செயல்கள் வேறுபடுத்திப் பார்க்க வைக்கின்றன. இவர்களுக்கும் நம் இழப்பிற்கும் சம்பந்தமே இல்லையோ என எண்ண வைக்கிறது. இதுபோன்ற நிகழ்வுகள் மனச் சங்கடத்தை உருவாக்கியுள்ளது. ஊடக தர்மத்தை மீறி நடந்துகொள்வதால்... காணொளி செய்பவர்களை மரண வீட்டில் மறுக்க வேண்டிய விதிமுறைகளை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதற்கான செயல்பாடுகளைத் தீவிரப்படுத்துவது தயாரிப்பாளர்கள் மற்றும் சினிமா சார்ந்த அனைவரின் முக்கிய கடமையாகும். அப்போதுதான் நம் வீட்டு நிகழ்வுகளில் அநாகரீகங்கள் தடுக்கப்படும்.

 

ஒரு மூத்த கலைஞனாகவும், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் என்ற முறையிலும் ஊடகத்தினரின் செயல்பாடுகளை வன்மையாகக் கண்டிக்கிறேன். காவல்துறையும் சம்பந்தப்பட்டவர்களின் அனுமதி இல்லாமல் மீடியாக்களை அனுமதிக்க வேண்டாம் என்ற கோரிக்கையை முன் வைக்கிறேன்” என்றிருக்கிறார்.