Advertisment

"அவருக்கு முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் உறுதுணையாக இருக்க வேண்டும்" - பாரதிராஜா வேண்டுகோள்!

bdfbdfbf

இந்தியாவில் இலக்கியத்திற்கு வழங்கப்படும் உயரிய விருதான ஞானபீட விருதுபெற்ற கேரளாவின் பிரபல இலக்கியவாதியும், தேசிய விருதுபெற்ற பாடலாசிரியருமான ஓ.என்.வி பெயரில் கடந்த 2017ஆம் ஆண்டுமுதல் இலக்கியத்திற்காக சிறந்த பங்களிப்பைச் செய்பவர்களுக்கு ஓ.என்.வி விருது வழங்கப்பட்டுவருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான ஓ.என்.வி விருதுக்கு கவிஞர் வைரமுத்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவ்விருதை மலையாளி அல்லாத கவிஞர் ஒருவர் பெறுவது இதுவே முதல்முறை. விருதுபெறும் வைரமுத்துவுக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துவந்த நிலையில், மலையாள நடிகை பார்வதி, “பாலியல் புகார்கள் பல சுமத்தப்பட்டிருக்கும் ஒருவருக்கு ஓ.என்.வி பெயரில் விருது வழங்குவது பெரும் அவமரியாதை” என்று கூறினார். மேலும், இதற்கு மலையாளம் சினிமா உலகில் எதிர்ப்புகள் அதிகரித்துவருவதை தொடர்ந்து 'விருதுகள் குழுவின் பரிந்துரையின்படி இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டிருக்கும் ஓ.என்.வி இலக்கிய விருது குறித்து மறுபரிசீலனை செய்ய முடிவு செய்துள்ளோம்' என ஓ.என்.வி கலாச்சார அகாடமி நேற்று (28.05.2021) அறிவித்தது.

Advertisment

இந்நிலையில், இதற்கு கண்டனம் தெரிவித்து இயக்குநர் இமயம் பாரதிராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்... "வணக்கம், என் படைப்புகளில் முன்கதை, பின்கதை, கதாபாத்திரங்களின் உணர்வுகளைப் பாடல்களில் வார்த்தைகளை அடக்கி ஆளத் தெரிந்த ஒரு கவிஞனை தேடி அலைந்துகொண்டிருந்த நேரம். சங்கம் வளர்த்த நம் முன்னோர்களின் வழித்தோன்றல்களாக மெய்ஞானம் அறிந்த விஞ்ஞான கவிஞனை கண்டெடுத்து ஒரு பொன்மாலைப் பொழுதில் விதைத்தோம்.... வார்த்தை கவிதை வரிகள் காவியம்... வியப்பு...! இரண்டு வரிகளில் இடைவெளி கதை சொல்கிறது... வார்த்தை புதிது, வரிகள் புதிது என் தாய்மொழி புதிதாக உணர்ந்தேன்... அரை நூற்றாண்டு அருகில் நிற்கிறோம் என் கவிஞனை திரும்பிப் பார்க்கிறேன்.

Advertisment

‘வில்லோடு வா நிலவே’, ‘கருவாச்சி காவியம்’, ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’, ‘தண்ணீர் தேசம்’, ‘மூன்றாம் உலகப்போர்’, பத்மஸ்ரீ, பத்மபூஷன், சாகித்திய அகாதமி, ஏழு தேசிய விருதுகள், எண்ணற்ற படைப்புகள், எண்ணற்ற விருதுகள், விருட்சமாய் என் தமிழ் உயர்ந்து நிற்கிறது. கர்வம் கொள்கிறேன். கேரள சகோதரர்களின் பேரன்பினால் மலையாள இலக்கியத்தின் உயரிய விருதான ஓ.என்.வி எங்கள் கவிப்பேரரசு அவர்களுக்கு அறிவித்தது அறிந்து மகிழ்ந்தேன். ஆனால் அரசியல் நெருக்கடியால் மறுபரிசீலனை என தற்போது செய்திகள் வந்திருப்பதைக் கண்டு வருத்தம் சிறிதளவும் இல்லை.

சமீபகாலமாக எம் இனத்தின் மீதும், மொழி மீதும் அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டு எங்கிருந்தோ தனிமனித மாண்புக்கு களங்கத்தை ஏற்படுத்தும் விதமாக சில நபர்களை கொண்டு மதம், இனம், மொழியாக பிரிவினையை ஏற்படுத்தும் விதமாக அறிவிக்கப்பட இயலாதபோரினை தொடுத்து கொண்டு இருக்கிறார்கள். தமிழர்களாகிய நாம் ஒற்றுமையுடன் இருந்து முறியடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். உலகத் தமிழர்களின் நெஞ்சங்களில் கவிப்பேரரசு என்கின்ற பட்டம் சூட்டி கம்பீரமாக நிற்கும் கவிஞனே, உன்னை அசைத்துப் பார்த்துவிடலாம் என்பது வெறும் கனவாகவே இருக்கும். தமிழர்களுக்கு என்றும் உறுதுணையாக மாண்புமிகு தமிழக முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள் எரியட்டும். அவர்களின் தாகம் தீரட்டும். குளம் என்பது கானல் நீர். நீ சமுத்திரம்.

அன்புடன்

பாரதிராஜா" என கூறியுள்ளார்.

bharathiraja
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe