Advertisment

bharathiraja speech in Modern Love Chennai Webseries Trailer Launch

அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வருகிற 18 ஆம் தேதி வெளியாகவுள்ளது 'மாடர்ன் லவ் சென்னை' வெப் சீரிஸ். இத்தொடரை பாரதிராஜா, பாலாஜி சக்திவேல், தியாகராஜன் குமாரராஜா, ராஜுமுருகன், கிருஷ்ணகுமார் ராமகுமார், அக்‌ஷய் சுந்தர் உள்ளிட்டோர் இயக்கியுள்ளார். அசோக் செல்வன், கிஷோர், ரிது வர்மா, ரம்யா நம்பீசன், விஜயலட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

Advertisment

இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் பாரதிராஜா காதலை பற்றி நிறைய விஷயங்களை பகிர்ந்துள்ளார். அவர் பேசுகையில், "காதல் இல்லாமல் வாழ்க்கை இல்லை. நான் காதலிக்கவில்லை என்றால் கலைஞனாக மாறியிருக்க முடியாது. காதல் என்பது இது தான் என்று குறிப்பிட்ட ஒரு விஷயம் அல்ல. அது ஒரு மென்மையான விஷயம். எவன் ஒருவன் அழகாக காதலை சொல்லுகிறானோ அவன் தான் கலைஞன். அவன் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். என்னை கூட வயசு இவ்ளோ ஆகிவிட்டதே என்று சொன்னார்கள். எனக்கு வயதாகவே ஆகாது. வயதாகிவிட்டது என்று நான் நினைத்தால் என் சாப்டர் முடிந்தது. ஆனால் அப்படி நான் நினைக்கவில்லை. இப்போது நான் 84 வயதை கடக்கிறேன். தைரியமாக சொல்வேன் 84 வயதிலும் நான் காதலிக்கிறேன் என்று.

90ஸ் காலகட்டத்தில் ஒரு காதல் வந்தது. பின்பு சென்னைக்கு வந்த பிறகு ஒரு காதல் இருந்தது. அதன் பிறகு காலங்கள் மாறும்போது ஒரு 4 காதல் பண்ணியிருப்பேன். நான் காதலித்தால் அது எப்படி காதலாக இருக்கும் என்று விமர்சனம் செய்வார்கள். இந்த குடை தான் நிழல் தரும் என்று கிடையாது; இந்த குடையும் நிழல் தரும் என்று தான் சொல்ல தோன்றும். எனக்கு நிழல் தந்த 4 குடைகளை மறக்கவும் முடியாது. அது ஒரு பெரிய இலக்கியம். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு இலக்கியம் இருக்கும். அதை வெளியில் சொல்ல மாட்டார்கள். அதனால் காதல் என்பது எனக்கு ஒரு முக்கியமான விஷயம்" என்றார்.

மேலும், "இளையராஜாவுக்கு இது போன்ற படம் ஒரு வித்தியாசமானதாக அமைந்தது. ஆரம்பத்தில் இந்த மாதிரி கதைக்கு இளையராஜா எப்படி இசையமைப்பார் என்று யோசித்தேன். பிரமாதமாக பண்ணியிருக்கார். அதை பார்க்கும் போது ஆச்சர்யமாக இருந்தது" என்றார்.