/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/barathiraja-1_5.jpg)
தமிழ் சினிமா துறையில் தயாரிப்பாளர்களுக்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் இடையே வி.பி.எஃப். கட்டணம் குறித்தான பேச்சுவார்த்தை இன்னும் முடியவில்லை. இந்த பிரச்சனைக்கு தீர்வு கண்டபின்புதான் திரையரங்கில் புது படங்கள் வெளியாகும் என்று முன்பே பாரதிராஜா அறிவித்திருந்தார்.
அப்போதும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் சமரசம் செய்துகொள்ளவில்லை. இதனை தொடர்ந்து தமிழ் சினிமா நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக, விபிஎஃப் கட்டணத்தை ஏற்க முடியாவிட்டால் புது படங்களை ரிலீஸ் செய்ய முடியாது என்று தெரிவித்தது.
இதன்பின் க்யூப் நிறுவனமும், “படத்தை வெளியிடத் தயாராக இருந்த தயாரிப்பாளர்கள் சிலரும் அழுத்தம் கொடுக்கப்பட்டுப் புறக்கணிக்க வைக்கப்பட்டதாக நாங்கள் அறிகிறோம்.
துறையை, சினிமா ரசிகர்களை இது எவ்வளவு பெரிதாகப் பாதிக்கும் என்பதைப் பரிசீலிக்காமல், முன்னெப்போதும் இல்லாத இந்தக் கடின காலத்தை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு எவ்வளவு சலுகைகளைப் பெற முடியுமோ அவ்வளவு சலுகைகளைப் பெற தயாரிப்பாளர் சங்கம் முயன்று வருகிறது.
திரையரங்க அனுபவம் என்பதற்கு மாற்றே கிடையாது. ரசிகர்களின் திருப்திதான் எங்கள் லட்சியம். ஏற்கனவே முடிந்த அளவு சமரசம் செய்துகொண்டோம். திரையரங்குகளின் வாழ்வாதாரத்துக்கு அச்சுறுத்தல் தராமல், தயாரிப்பாளர்கள் இதை ஏற்பதே முக்கியமாகும்.
திரைத்துறை பிழைக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டிய நேரம் இது”, இவ்வாறு தெரிவித்தது.
இந்நிலையில் இந்த பிரச்சனைக்கு சமரசம் காணும் வகையில் க்யூப் மற்றும் யுஎஃப்ஓ போன்ற நிறுவனங்கள், இந்த நவம்பர் மாதம் ரிலீஸ் செய்யப்படும் புதுப்படங்களுக்கு விபிஎஃப் கட்டணம் வசூலிக்காது என்று அறிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து பாரதிராஜா தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், விபிஎஃப் கட்டணம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 2 வாரத்திற்கு மட்டுமே புதிய திரைப்படங்களை வெளியிட முடிவு செய்துள்ளதாகவும், அதே சமயத்தில் விபிஎஃப் கட்டணம் செலுத்தி படங்களை வெளியிடவதில்லை என்பதில் உறுதியாக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)