Skip to main content

“எது நடக்கக்கூடாததோ அது நடந்துவிட்டது” - பாரதிராஜா இரங்கல்

Published on 28/12/2023 | Edited on 28/12/2023
bharathiraja about vijayakanth

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக மீண்டும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விஜயகாந்தின் மருத்துவ பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், விஜயகாந்த் இன்று (28-12-23) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

இவரது மறைவு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் கூட்டம் கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்தி வந்தனர். இதையடுத்து அவரது உடல் தேமுதிக அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை செய்யப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நாளை மாலை 4.45 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது. 

இந்த நிலையில் பாரதிராஜா இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், “சில நேரங்களில் சில விஷயங்கள் சந்தோஷமாக பகிர்ந்துகொள்ள இருக்கும். சில விஷயங்கள் வருத்ததுடன் பகிர வேண்டிருக்கும். இயற்கை மனிதனை கொண்டு செல்வது நியாயம் தான். பிரயோஜனமான சில மனிதர்களை கொண்டு செல்வது கஷ்டம். என் நண்பன், சிறந்த நடிகன், சிறந்த மனிதாபிமானி. பல நாட்களாக எந்த வித அசைவும் இல்லாமல் இருந்த போதே தமிழ்நாடு முழுவதும் வருத்தப்பட்டது. எது நடக்கக்கூடாததோ அது நடந்துவிட்டது. இருந்தாலும் அவர் வீட்டிற்கு சென்று சாப்பிடாதவர்கள் கிடையாது. அவரை நேசிக்காதவர்கள் கிடையாது. இவ்வளவு சீக்கிரமாக கடவுள் அழைத்து கொள்வார் என நினைக்கவில்லை. நல்ல கலைஞன், நல்ல ஃபைட்டர். சினிமாவில் அள்ளிக் கொடுத்தவன் விஜயகாந்த். அவரோடு பழகி பார்ப்பவர்களுக்கு தான் தெரியும், அவர் எவ்ளோ பெரிய மனிதர் என்று. விஜயகாந்த்தின் மறைவு தமிழகத்தில் மட்டுமல்ல உலகத் தமிழர்களுக்கு பெரிய இழப்பு. என்னுடைய உடல்நிலை சரியில்லாததால் போகமுடியவில்லை. கவலையளிக்கிறது. விஜயகாந்த் வெற்றி கொடி நாட்டியவன்” என்றார்.  

சார்ந்த செய்திகள்

Next Story

விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்குவதில் தாமதம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
padma bhushan award will be presented to Vijayakanth in the next phase of the ceremony.

மத்திய அரசால், இந்திய குடிமகனுக்கான உயரிய விருதுகளாக பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் என மூன்று அடுக்குகளாக இந்த விருதுகள் இருக்கிறது. இந்த விருதுகளுக்காக மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு, சமூக பணி, என பல்வேறு தளங்களில் சிறப்பாக பணியாற்றியவர்களை பரிந்துரை செய்யப்பட்டு பின்னர், விருது வழங்கும் குழுவால் தேர்வு செய்யப்படுகிறார்கள். 

அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு கடந்த ஜனவரியில் அறிவித்தது. இதில் மறைந்த நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக அவருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

padma bhushan award will be presented to Vijayakanth in the next phase of the ceremony.

பத்ம விருதுகள் வழங்கும் விழா, டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (22.04.2024) நடைபெற்ற விழாவில் 3 பத்ம விபூஷன், 8 பத்ம பூஷன் மற்றும் 55 பத்மஸ்ரீ விருதுகளும் வழங்கப்பட்டன. அனைவருக்கும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்கினார். இதில் பிரபல பாடகி உஷா உதூப் மற்றும் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி ஆகியோருக்கு பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும் முன்னாள் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவுக்கும் பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.

நேற்றைய விழாவில் மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்கப்படுவதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு விருது வழங்கப்படவில்லை. அதனால் அடுத்தடுத்த கட்ட விழாக்களில் விஜயகாந்துக்கு விருது வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

அரசியல் வருகை குறித்த கேள்விக்கு சண்முகப்பாண்டியன் பதில்!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
shanmuga pandian press meet

விஜயகாந்தின் இரண்டாவது மகனான சண்முகப் பாண்டியன் சகாப்தம், மதுர வீரன் ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது படைத் தலைவன் படத்தில் நடித்து வருகிறார். டைரக்டர்ஸ் சினிமாஸ் தயாரிப்பில், உருவாகும் இப்படம் காட்டு யானைகளின் வாழ்வியலை மையப்படுத்தி ஆக்‌ஷன் ஜானரில் உருவாகிறது. யு. அன்பு இயக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். மேலும் ராகவா லாரன்ஸ் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். 

இந்த நிலையில் இன்று சண்முகப் பாண்டியன் பிறந்தநாள் காண்கிறார். இதையொட்டி பிரேமலதா விஜயகாந்துடன் விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். இன்று விஜயகாந்த் மறைந்து 100 நாள் நிறைவடைகிறது குறிப்பிடத்தக்கது. விஜயகாந்த இல்லாமல் முதல் பிறந்தநாளைக் காண்கிறார். அஞ்சலி செலுத்திய பின்பு செய்தியாளர்களிடம் பேசினார். 

அப்போது அவரிடம் விஜய பிரபாகரரை போல் அரசியலுக்கு வரும் எண்ணம் உள்ளதா என்ற கேள்வி கேட்கப்பட்ட நிலையில் பதிலளித்த அவர்,  “நான் இப்போதைக்கு சினிமாவில் இருக்கிறேன். அண்ணன் அரசியலில் இருக்கிறார். அப்பாவின் ஒரு துறையை அண்ணன் எடுத்துக் கொண்டார். இன்னொரு துறையை நான் எடுத்துக்கொண்டேன்” என்றார். 

இதனிடையே சண்முகப் பாண்டியனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சிறிய வீடியோ ஒன்றை சர்பிரைஸாக வெளியிட்டுள்ளனர் படைத் தலைவன் படக்குழு. அப்படக்குழுவினரும் சண்முகப் பாண்டியனோடு இணைந்து விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.