Advertisment

“எத்தனை குழந்தைச் சிதைவுகள்? போதாதா?”- இரண்டாம் குத்து குறித்து பாரதிராஜா!!!

barathiraja

ஹர ஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து உள்ளிட்ட அடல்ட் காமெடி படங்களை எடுத்து பிரபலமானவர் இயக்குனர் சந்தோஷ். ஜெயக்குமார்.

Advertisment

இந்நிலையில் அவருடைய அடுத்த படமும் அடல்ட் காமெடி என்னும் ஜானரிலேயே எடுத்து சர்ச்சையை கிளப்பியுள்ளார். இரண்டாம் குத்து என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் டீஸர் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Advertisment

டீஸரில், மிகவும் மோசமான கவர்ச்சி காட்சிகள் மற்றும் டபுள் மீனிங் வசனங்கள் இருப்பதால் பலரும் இந்த படம் வெளியிடக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இயக்குனர் பாரதிராஜா இந்த படம் குறித்து கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “சினிமாவினால் சாதி ஒழிப்பு சாத்தியப்பட்டிருக்கிறது. சினிமாவினால் மதம் கடந்த மனங்கள் இணைவது சாத்தியப்பட்டிருக்கிறது. நேர்மையும் துணிவுமிக்க இளைஞர்களை உருவாக்குவது சாத்தியப்பட்டிருக்கிறது. உலகெங்கும் தமிழர் பண்பாடு, மண்ணின் மணம் பரப்புவது, பெண் சுதந்திரம் போன்ற எத்தனையோ எத்தனை சாத்தியமற்றவைகள் சாத்தியப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் சாதாரணமல்ல. பல கலைஞர்கள் கட்டியமைத்த கூடு.

தார்மீகப் பொறுப்புகளோடு சமூக பாதிப்புகள் நேராது கண்ணியத்தோடு பேணிக்காத்த சினிமாவை இன்று வியாபாரம் என்ற போர்வையில் கண்ணியமற்று சீரழிக்கிறோமோ என்ற கவலை மேலிட ஒரு வலியோடு பார்க்கிறேன். சினிமா வியாபாரமும்தான்... ஆனால் வாழைப்பழத்தை குறிகளாகச் செய்து அதைக் கேவலமான பதிவோடு பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு செல்லும் நிலைக்கு அவ்வியாபாரம் வந்து நிற்பது வேதனையடையச் செய்கிறது.

இதற்காகவா இத்தனை ஜாம்பவான்கள் சேர்ந்து இந்த சினிமாவைக் கட்டமைத்தார்கள்? சினிமா வாழ்க்கை முறையைச் சொல்லலாம். தப்பில்லை. இலைமறை காய் மறையாக சரசங்கள் பேசலாம். ஆனால் இப்படி படுக்கையை எடுத்து நடுத் தெருவில் வைப்பது எந்தவிதத்தில் சரி என்பது?

நான் கலாச்சார சீர்கேடு எனக் கூவும் நபரல்ல. ஆனால் என் வீட்டின் கண்ணியம் காக்கப்பட வேண்டும் என நினைப்பவன். கலைநயத்தோடு செய்யப்படும் எந்த படைப்பும் ஆழ விழுந்து இரசிப்பவன். ஆனால் "இரண்டாம் குத்து" என்ற படத்தின் விளம்பரத்தை என் கண்ணால் பார்க்கவே கூசினேன்.

இத்தமிழ் நாட்டிலுள்ள எத்தனை நல்ல குடும்பங்கள் இதைப் பார்க்கக் கூசியிருக்கும்?? எத்தனை வளரிளம் பருவத்தினரிடையே கசட்டை துப்பி வைத்திருக்கும்? கல்வியை போதிக்கிற இடத்தில் காமத்தைப் போதிக்கவா முன்வந்தோம்?இதையெல்லாம் அனுமதியின்றி வெளியிடக் கிடைத்த சுதந்திரம் என்னை பதைக்க வைக்கிறது... நாளை இன்னும் என்ன என்ன கேவலங்களை சாணியறைவார்களோ என்று கவலைகொள்கிறேன்.

இதையெல்லாம் செய்பவர்கள் வீட்டில் பெண் மக்கள் இல்லையா?? அவர்கள் இதைக் கண்டிக்க மாட்டார்களா? அவர்கள் கண்டிப்பார்களோ இல்லையோ நான் இங்கிருக்கும் மூத்தவர்களில் ஒருவன் என்ற முறையில் கண்டிப்பேன். இப்படியொரு ஆபாசம் தமிழ்த் திரையுலகிற்கு ஆகாது எனக் கண்டிக்கிறேன். இதற்கெல்லாம் கிடுக்கிப் பிடி வேண்டும் என அரசையும் சென்சார் போர்டையும் வலியுறுத்துகிறேன்.

சமூகச் சீர்கேடுகள் செய்யும் படத்தை அரங்கேற்றாதீர்கள்.. எத்தனை கற்பழிப்புகள்...?குழந்தைச் சிதைவுகள்? போதாதா? இப்படிப்பட்ட படங்களும் சிந்தனையும் கழிவுகளையே சாப்பாட்டுத் தட்டில் வைக்கின்றன என்பதை மக்களும் உணர்ந்துகொள்ளுங்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

bharathiraja
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe