Advertisment

"முதல் ஆளாக நின்று எதிர்ப்பேன்..." எச்சரித்த பாரதிராஜா!

bharathiraja

பல ஆண்டுகளாக இயங்கி வந்த தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், சமீபத்தில் இரண்டாக உடைந்து இயக்குநர் பாரதிராஜா தலைமையில் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் என்ற புதிய அணி உருவானது. அதன் பிறகு, திரையுலகம் சந்தித்து வரும் பிரச்சனைகளுக்கு இரு தரப்புகளும் அறிக்கை வெளியிட்டு வந்தன.

Advertisment

இந்த நிலையில், பாரதிராஜா தலைமையிலான தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருப்பவர்கள், தயாரிப்பாளர் சங்கத்தில் இணையும்படி சமீபத்தில் அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த அழைப்பை நடப்பு தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் யாரும் ஏற்காததைத் தொடர்ந்து, நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் கடந்த வாரம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

Advertisment

தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அனுப்பப்பட்ட இந்த நோட்டீஸைக் கண்டித்து தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத் தலைவரும் இயக்குநருமான பாரதிராஜா நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், ''மற்ற மாநிலங்களில் உள்ளதுபோல இல்லாமல் இங்கே புற்றீசல்கள் போல் தயாரிப்பாளர்களுக்கு சங்கம் உருவானது சற்றே துரதிர்ஷ்டமானது. அதற்குக் காரணம் இங்கே சங்கங்களின் தலைமைப் பொறுப்புகளில் இருந்தவர்களின் புரிதலில் ஏற்பட்ட குழப்பங்களே என நான் நம்புகிறேன். புது சங்கங்கள் உருவாவதென்பது காலமாற்றத்தின் விதிகளுக்கு உட்பட்டது. ஒன்று பழைய சங்கங்கள் கால மாற்றத்தை உணர்ந்து கொள்கைகளைக் கட்டமைத்துக்கொள்ள வேண்டும் அல்லது மற்ற சங்கங்களுடன் கலந்து செயல்படக் கற்றுக்கொள்ள வேண்டும். இதை விடுத்து மற்ற சங்கங்களையும் அதில் உள்ளவர்களையும் அடக்கி ஆள நினைப்பது, இவை சார்ந்த துறையையே மொத்தமாக நிர்மூலமாக்கிவிடும்.

இதற்குச் சான்றாக, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகம் பல சீர்கேடான விஷயங்களை முன்னெடுத்து வருகிறது. இதுவரை தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு இணையான இரு வேறு சங்கங்கள் இணக்கமாக இருந்து தயாரிப்பாளர்களுக்குச் சேவையாற்றி வந்துள்ளன. இதை இந்தப் புதிய நிர்வாகம் கற்றுக்கொள்ள வேண்டும். தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் பெரும்பான்மையோர் இந்த 3 சங்கங்களிலும் உறுப்பினர்களாக உள்ளனர். பதவி அதிகாரம் என்பது அரசியலமைப்புக்கு உட்பட்டதாக இருக்கும். ஆனால், சங்கங்கள் அதன் உறுப்பினர்களுக்குச் சேவை புரியத்தான். இதைத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் திரும்ப உணர வேண்டும்.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் என்றுமே ஒரு தாய்ச்சங்கமாகும். சமீபத்தில் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களைத் தனித்தனியாக அழைத்து மிரட்டியும், நிர்வாகிகளுக்கு அவர்களின் படங்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்த முற்படுவதையும் அறிந்தேன். அவ்வாறு நடக்கும் பட்சத்தில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் இன்னும் பல கூறுகளாக உடைந்து அதன் பொலிவிழக்கக் காரணமாக இந்தப் புதிய நிர்வாகம் இருக்கும் என்பதையும், என் உறுப்பினர்களுக்கு ஏதேனும் தீங்கு ஏற்படும் பட்சத்தில் முதல் ஆளாக நின்று அதை எதிர்ப்பேன் என்பதையும் எச்சரிக்கையாக இங்கே பதிவு செய்கிறேன்'' எனக் கூறப்பட்டுள்ளது.

Bharathi Raja
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe