இந்தி மற்றும் தெலுங்கு திரைத்துறையில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் பாக்யஸ்ரீ போர்ஸ், துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகும் ‘காந்தா’ படம் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகவுள்ளார். ஸ்பிரிட் மீடியா மற்றும் வேஃபரர் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில், துல்கர் சல்மான் மற்றும் சமுத்திரகனி முதன்மை வேடங்களில் நடிக்க, இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்குகிறார். படத்தின் முதல் சிங்கிளான ‘பனிமலரே’ பாடல் சமீபத்தில் வெளியானது.
1950களின் சென்னையின் கலாச்சாரப் பின்புலத்தில் நடைபெறும் இத்திரைப்படம் உணர்ச்சி பூர்வமான கதைக்களத்துடன், அடையாள சிக்கல், ஈகோ போராட்டம், காதல் ஆகியவற்றை மையமாக கொண்டு உருவாக்கப்படுகிறது. இப்படத்தில் பாக்யஸ்ரீ போஸ், முழு திறமையை வெளிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறார்.
இப்படத்தில் நடித்து வரும் தனது அனுபவத்தைப் பகிர்ந்த பாக்யஸ்ரீ போர்ஸ்,
“காந்தாவின் மூலம் தமிழ்ச் சினிமாவில் அறிமுகமாகுவது, என் வாழ்க்கையின் மிகச் சிறப்பு மிக்க தருணம். திறமையான குழுவுடன் இணைந்து இந்த அழகான கதையை உயிர்ப்பித்தது மிகப் பெருமை. நாங்கள் உணர்ந்த மாயாஜாலத்தை, பார்வையாளர்களும் உணருவார்கள் என நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.